சினிமாஸ்கோப் 36: அபூர்வ சகோதரிகள்

By செல்லப்பா

திரைக்கதையைச் சுவாரசியமாக்கப் பயன்படும் உத்திகளில் ஒன்று ஆள்மாறாட்டம். ஒரே போல் தோற்றம் கொண்ட இருவர் இடம் மாறினால் ஏற்படும் குழப்பங்களைத் திரைக்கதையாக்கும் போக்கும், ஹாலிவுட் படங்களைத் தழுவும் போக்கும், ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சிபோல் பி.யூ.சின்னப்பா நடித்த ‘உத்தம புத்திரன்’ (1940) காலத்திலிருந்தே இருந்துவருகிறது. ஹாலிவுட் படமான ‘த மேன் இன் தி அயன் மாஸ்க்’ (1939) படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தை இயக்கியவர் மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம். இது அலெக்சாந்தர் துமா எழுதிய பிரெஞ்சுக் கதையின் திரைவடிவமே. இதன் பின்னர் சிவாஜி கணேசன் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த ‘உத்தம புத்திரன்’ டி.பிரகாஷ் ராவின் இயக்கத்தில் 1958-ல் வெளியானது.

சிவாஜி மாத்திரமல்ல; எம்.ஜி.ஆர்., கமல் ஹாசன், ரஜினிகாந்த், அஜித் போன்ற அனைத்து நடிகர்களும் ஆள்மாறாட்ட உத்தி கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர்கள் மட்டுமல்ல; சாவித்திரி (காத்திருந்த கண்கள்), வாணிஸ்ரீ (வாணிராணி), அம்பிகா (தங்கமடி தங்கம் – ‘அத்தமக தங்கத்துக்கு என்ன மயக்கம்’ என்னும் இளையராஜாவின் பாடல் இடம்பெற்ற படம்), சிநேகா (பார்த்திபன் கனவு) உள்ளிட்ட நடிகைகளும் இப்படியான கதைகளில் நடித்திருக்கிறார்கள்.

காத்திருந்த கண்கள்

சிவாஜியின் ‘உத்தம புத்திர’னை இயக்கிய டி.பிரகாஷ் ராவ்தான் சாவித்திரி இரட்டை வேடத்தில் நடித்த ‘காத்திருந்த கண்கள்’ (1962) படத்தையும் இயக்கியிருந்தார். வளர்ந்த கலை மறந்துவிட்டாள் பாரடா கண்ணா, ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே உள்ளிட்ட பல இனிய பாடல்கள் கொண்ட படம் இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘படகோட்டி’ படத்தை இயக்கியவர் இவர். சிவாஜி நடித்த ‘வசந்த மாளிகை’ படத்தை இயக்கியவரும் ஒரு பிரகாஷ் ராவ்தான். அவர் கே.எஸ்.பிரகாஷ் ராவ். ஸ்ரீமதி மாளபிகாராய் என்னும் வங்காள எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘காத்திருந்த கண்கள்’ திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார்கள் எம்.எஸ்.சோலைமலையும் மாராவும். இதில் இரண்டு சாவித்திரிகளும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள். ஆனால், பிறந்த சில மணி நேரத்திலேயே இருவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்வைத் தொடர்கிறார்கள்.

லலிதா நகரத்தில் வளமையான வீட்டிலும், கிராமத்தில் வறுமை நிறைந்த குடும்பத்தில் செண்பகமும் வளர்கிறார்கள், நாட்டுவைத்தியம் செய்யும் குடும்பத்தில் பிறந்து, ஆங்கில மருத்துவம் பயின்ற டாக்டர் வேடம் ஜெமினி கணேசனுக்கு. செண்பகத்தின் தாயைக் குணப்படுத்த ஜெமினி அவர்கள் வீட்டுக்கு வருகிறார். அவரது பண்பு செண்பகத்தைக் கவர்ந்துவிடுகிறது. ஜெமினியை அவர் தன் கணவனாகவே வரித்துவிடுகிறார். ஆனால் ஜெமினியோ செண்பகத்தைப் பார்த்திருக்கவே மாட்டார்.

சூழல் காரணமாக நகரத்துக்கு வரும் ஜெமினிக்கு லலிதா அறிமுகமாக, இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். மணமாக வேண்டிய சமயத்தில் லலிதா சென்ற ஒரு ரயில் விபத்தில் சிக்குகிறது. அதே ரயிலில் வந்த செண்பகம், லலிதாவின் வீட்டுக்கு வருகிறார். ரயில் விபத்தில் லலிதா இறந்துவிட்டதாக செண்பகம் நினைத்துக்கொள்கிறார். ஜெமினியும் லலிதாவும் காதலர்கள் என்பதையும் அறிந்துகொள்கிறார். தான் விரும்பிய காதலனை அடைவதற்காக தானே லலிதாவாக மாறிவிடுகிறார்.

எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருக்கும்போது, லலிதா உயிருடன் இருப்பது ரசிகர்களுக்குத் தெரியவருகிறது. ஒரு திரைக்கதையில் இப்படியான திருப்பங்களும் எதிர்பாராத மாற்றங்களையும்தானே ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஓவியம் வரையத் தெரிந்தவர் லலிதா, செண்பகமோ அந்தக் கலை அறியாதவர். இதை வைத்து திரைக்கதையில் சில ருசிகரக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். பின்னர் லலிதா, செண்பகம், ஜெமினி வாழ்வில் ஏற்படும் குழப்பங்களும் அவர்கள் கண்டடையும் தீர்வுகளுமென எஞ்சிய படம் நகர்ந்திருக்கும்.

இடம் மாறிய விருதுகள்

இந்தப் படம் வெளியான 41 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்குவந்த படம் ‘பார்த்திபன் கனவு’ (2003). கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த இது காதலை உள்ளடக்கிய ஃபேமிலி ட்ராமா. சில பாடல்களும் சண்டைக் காட்சிகளும் திரைக்கதையும் இதை ஒரு பொழுதுபோக்குப் படமாக மாற்றியிருக்கும். கே. பாலசந்தரின் படத்தைப் போன்று வார்த்தை விளையாட்டு அதிகம் இப்படத்தில். இந்தப் படத்துக்குச் சிறந்த படம், சிறந்த இயக்குநர் போன்ற பல பிரிவுகளில் தமிழக அரசு விருதும் கிடைத்திருக்கிறது. நாயகனான ஸ்ரீகாந்த் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார் என்ற செய்தி ஆச்சரியத்தை அதிகப்படுத்தும்.

ஆனால் சிநேகாவின் இரட்டை வேட நடிப்பில் காட்டிய மாறுபாடு கவனிக்கும்படியாக இருந்த படம். ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ படத்தில் டணால் தங்கவேலு செய்திருந்த வேலையற்ற கணவன் நகைச்சுவையின் சாயலில் நடிகர் விவேக்கின் காமெடி டிராக் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இதற்காகச் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் நடிகர் விவேக் பெற்றுள்ளார்.

ஒரே தோற்றத்தால் உளச் சிக்கல்

‘காத்திருந்த கண்க’ளைப் போல் ஒரே குடும்பத்து இரட்டையரல்ல இதன் மையப் பாத்திரங்கள். இதில் வெவ்வேறு பகுதியில் வாழும் இருவரது ஒரே தோற்றம் காரணமான குழப்பங்களே திரைக்கதையானது. வழக்கமான வாழ்விலிருந்து விலகி ரசனையான வாழ்வுக்கும் காதலுக்கும் ஆசைப்படும் நவீன இளைஞன் பார்த்திபன். (ஸ்ரீ காந்த்). காற்றில் பறக்கும் கேசம், கலகலவென்ற சிரிப்பு என நவீனப் பெண்ணாக அவர் கண் முன்னால் அடிக்கடி வந்துபோகிறார் ஒரு பெண் (சிநேகா). அவரைப் பார்த்த கணத்திலேயே இவர்தான் தன் துணைவி என்றே எண்ணிவிடுகிறார் பார்த்திபன்.

அதே நேரத்தில் அவரது குடும்பத்திலும் சத்யா என்னும் ஒரு பெண்ணைப் பார்க்கச் சொல்கிறார்கள். வேண்டா வெறுப்பாகச் செல்லும் பார்த்திபனுக்கு ஆனந்த அதிர்ச்சி. அவர் சாலையில் பார்த்த பெண்ணே அவர். உடனே சம்மதம் தெரிவித்து விடுகிறார். மணமும் முடிந்துவிடுகிறது. மனைவியுடன் காரில் செல்லும்போது, எப்போதும் போல் அதே பெண், அதே புன்னகையுடன் சாலையைக் கடக்கிறாள். பார்த்திபனால் அந்தக் கணத்தின் கனத்தைத் தாங்க இயலாமல் போகிறது.

விசாரிக்கும் போதுதான் ஆசைப்பட்ட பெண்ணின் பெயர் ஜனனி என்பதும் அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவருகிறது. அதே ஜனனி பார்த்திபனின் வீட்டெதிரே குடிவருகிறார். இதன் காரணமான சிக்கல்கள் உருவாகின்றன, பின்னர் அவை தீர்ந்து படம் சுபத்துக்கு வந்து சேர்கிறது. இந்தப் படத்தை ‘அம்மாயி பாகுந்தி’ என்னும் பெயரில் தெலுங்கில் (இது ‘மஞ்சு பெய்யும் முன்பே’ என்னும் பெயரில் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது) மறு ஆக்கம் செய்திருக்கிறார் ‘லவ்டுடே’ பாலசேகரன்.

சிநேகாவுக்குப் பதில் மீரா ஜாஸ்மின். இரு மொழிகளிலும் சத்யாதான், தமிழின் ஜனனி தெலுங்கிலும் ஜனனிதான் ஆனால், மலையாளத்தில் ரஜினி ஆகிவிடுகிறார். தமிழில் சத்யாவுக்கு பாக்யராஜ் படம் பிடிக்கிறது. மலையாளத்திலும் தெலுங்கிலும் சத்யாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல் பிடிக்கிறது. சின்னச் சின்ன மாற்றங்கள் உண்டு மற்றபடி தமிழ்ப் படத்தை அப்படியே தெலுங்கில் நகலெடுத்திருக்கிறார்கள்.

நாற்பதாண்டுகள் இடைவெளி இருந்தபோதும் ‘காத்திருந்த கண்கள்’, ‘பார்த்திபன் கனவு’ இரண்டுமே திருமணம் என்ற சடங்குக்கு மரியாதை தர வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. இரண்டிலும் நாயகர்கள் ஆசைப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யவில்லை; தம் விருப்பங்களைப் பலிகொடுத்து நிற்கிறார்கள் ஆனாலும், மணவாழ்க்கையின் மகத்துவத்தை வலியுறுத்தும் திரைக்கதைகளே இவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

35 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்