இயக்குநரின் குரல்: திரையில் உயிர்பெறும் இந்திரா காந்தி! - நட்டிகுமார் பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன்

2010-ல் தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது பெற்ற ‘மெய்ப்பொருள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெ.நட்டிகுமார். விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற ‘பனித்துளி’ படத்துக்குப் பிறகு ‘எவனவன்’ என்ற தனது மூன்றாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார்… அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

உங்கள் அப்பா ஜானகிராமன் ‘மோகமுள்’ படத்தைத் தயாரித்தவர். நீங்கள் அவரது பாதையிலிருந்து விலகி அடுத்தடுத்து இரண்டு படங்களை அமெரிக்காவிலேயே முடித்து வெளியிட்டீர்களே?

அப்பா இலக்கிய ரசனை கொண்டவர். அடுத்தடுத்துப் பல கமர்ஷியல் படங்களையும் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுத்தவர். படிக்கச் சென்றதால் அமெரிக்கா எனக்குப் பரிச்சயமான தேசம். அமெரிக்காவைக் கதைக்களமாகக் கொண்டு படங்களை எடுத்தால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஃபாரின் லொக்கேஷனைவிட உள்ளூர் நேட்டிவிட்டியில் உன் திறமையைக் காட்டு என்கிறார்கள்.

‘மெய்ப்பொருள்’, ‘பனித்துளி’ படங்களுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்தேன். அவர்கள் மசாலாப் படங்களைவிட த்ரில்லர் படங்களை அதிகம் ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆண்டிப்பட்டி என்றாலும் அமெரிக்கா என்றாலும் படித்தவர்கள் மத்தியில் மூடநம்பிக்கை ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதை முதல் படத்தில் பேசினேன். விருது கிடைத்தது.

இரண்டாவது படமான ‘பனித்துளி’யும் த்ரில்லர்தான். கணேஷ் வெங்கட் ராமைத் தனி நாயகனாக நடிக்க வைத்தேன். பனிச்சறுக்குக் காட்சிகளைப் படமாக்கிய விதம், திரைக்கதை ஆகியவற்றைக் குறிப்பிட்டு “ ‘பனித்துளி’ ஹாலிவுட் பாணியில் அமைந்த தமிழ் த்ரில்லர் ” என்று விமர்சனம் தந்தார்கள். அது மேலும் சிறந்த படங்களைத் தர வேண்டும் என்ற ஊக்கம் தந்தது.

தொடர்ந்து த்ரில்லர் கதைகளையே இயக்க என்ன காரணம்?

அதிலிருக்கும் தேடலும் துரத்தலும்தான் முக்கிய காரணம். த்ரில்லர் படங்கள் மட்டும்தான் இயக்குநரையும் பார்வையாளர்களையும் பரஸ்பர சவாலுக்குத் தயார்படுத்துகின்றன. ஒரு திரைப்படம் அனுபவமாக மாறாவிட்டால் ரசிகர்கள் களைத்துவிடுகிறார்கள். ஆனால் முழுமையான த்ரில்லர் படங்கள் ஒரு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ… களைப்பு என்பதே தெரியாமல் மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்துவிடும் ஆச்சரியம் நிகழும். ஒரு த்ரில்லரின் வெற்றி அதன் திரைக்கதையில்தான் இருக்கிறது.

எந்த இடத்திலும் ரசிகர்களால் மோப்பம் பிடித்துவிட முடியாத முடிச்சுக்களை லாஜிக் மீறல் இல்லாமல் போட்டு, சரியான இடத்தில், சரியான கால இடைவெளியில் அவிழ்த்துக்காட்டி ரசிகர்களை ஆச்சரிப்படுத்த வேண்டும். த்ரில்லர்களைப் பார்ப்பது மட்டுமல்ல; த்ரில்லருக்கான திரைக்கதையை எழுதுவதும் த்ரில்லான அனுபவம்தான். த்ரில்லரையும் ஹாரரையும் இந்த இடத்தில் குழப்பிக்கொள்ளக் கூடாது. என்னைப் பொறுத்தவரை ஹாரர் படங்கள் மலினமானவை என்று நினைக்கிறேன்.

எனக்கு த்ரில்லர் கதைகள்மேல் அதிக ஈடுபாடு வரக் காரணம் நான் படித்த திரைப்படப் பள்ளி. கலிபோர்னியாவின் புகழ்பெற்ற திரைப்படப் பள்ளியான டியான்ஷா பிலிம் ஸ்கூலில் திரைக்கதை, இயக்கம் இரண்டையுமே படித்தேன். அங்கே ஹிட்ச்காக் உட்பட உலகப்புகழ்பெற்ற த்ரில்லர் மாஸ்டர்களின் நூற்றுக்கணக்கான படங்களை எங்களுக்குத் திரையிட்டார்கள். அதன் தாக்கம் ஒரு பக்கம் என்றால் எனது முதல் படத்தைப் பார்த்துவிட்டு “ த்ரில்லர் உனக்கு நன்றாக வருகிறது. அதிலேயே அதிக கவனம் செலுத்து” என்றார் வெள்ளிவிழா நாயகன் ‘பயணங்கள் முடிவதில்லை’ மோகன். அவர் எங்கள் குடும்ப நண்பர்.

- நட்டிகுமார்

தற்போது இயக்கி முடித்திருக்கும் ‘எவனவன்’ படத்தின் கதை என்ன?

இன்றைய இளைஞர்கள் எத்தனை புத்திசாலிகளாகவும் திறமையாளர்களாகவும் இருக்கிறார்களோ அதே அளவுக்கு விளையாட்டுத்தனம் மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பின் விளைவுகள் பற்றி யோசிக்காத அசட்டு தைரியம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. அது அவர்கள் குழுமியிருக்கும்போது சட்டென்று முகம் காட்டிவிடும் வல்லூறு. இதை அறியாமல் ‘சின்னத் தவறுதானே செய்கிறோம்; அதனால் என்ன பெரிதாக வந்துவிடப்போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்யும் தவறு அவனைச் சிக்கலின் எந்த எல்லைக்குக் கூட்டிச் செல்கிறது’ என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

உங்கள் நட்சத்திரங்களைப் பற்றி?

அகில் சந்தோஷ் – நயனா இருவரையும் நாயகன் நாயகியாக அறிமுகப்படுத்துகிறேன். கதையைக் கேட்டுவிட்டு ‘முருகாற்றுப் படை’ படத்தின் நாயகன் சரண், இந்தப் படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இவர்களுக்குச் சற்றும் குறையாத இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களை சோனியா அகர்வாலும், வின்சென்ட் அசோகனும் ஏற்றிருக்கிறார்கள். இந்த இருவருக்குமே அவர்கள் ஏற்றிருக்கும் துப்பறியும் காவல் அதிகாரிகள் வேடம் அவர்களது சினிமா கெரியரில் முக்கியமானவையாக இருக்கும்.

இந்திரா காந்தியின் வாழ்க்கையைப் படமாக்க இருக்கிறீர்கள் என்று செய்திகள் வெளியானதே?

ஆமாம், ‘எவனவன்’ ரிலீஸுக்குப் பிறகு அந்தப் படம்தான். திரைக்கதை பணிகள் முடிந்து, அதை ஆய்வு செய்யும் பணியை மூத்த பத்திரிகையாளர்கள் கொண்ட டீமிடம் ஒப்படைத்திருக்கிறோம். அன்னை இந்திராவாக நடிக்க அமெரிக்க நடிகையான சூசன் சராண்டா ஒப்புக்கொண்டிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்