பக்கத்து வீடு: மலையாள சினிமாவைப் புதுப்பித்த ‘பிரேமம்’

By ஜெய்

மலையாள சினிமாவுக்கு 2015 வெற்றி மேல் வெற்றியைத் தந்த ஆண்டு. பொதுவாக மலையாள சினிமாவில் மாபெரும் வெற்றி என்பது குறிஞ்சிப் பூ பூப்பதுபோல. பத்தாண்டு, பன்னிரெண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அபூர்வம். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டில் ‘பிரேமம்’ என்னும் மாபெரும் வெற்றியில் மலையாள சினிமா திளைத்துக்கொண்டிருக்கும்போதே ‘எந்நு நிண்டே மொய்தீன்’ படமும் தன் ஜெயக் கொடியைப் பறக்கவிட்டது.

இந்திய அளவில் ஒப்பிடும்போது மலையாள சினிமா மிகக் குறைவான பட்ஜெட் கொண்ட துறை. அதனால்தான் இந்தி, தமிழ், தெலுங்கு சினிமா அளவுக்கு அதிகப் பொருள் செலவில் மலையாளத்தில் படம் தயாரிக்கப்படுவது இல்லை. தமிழ், இந்தியில் தயாரிக்கப்படும் படங்களே மலையாள ரசிகர்களின் பிரம்மாண்ட ரசனையை நிறைவேற்றி வந்தன.

அங்கு பிரம்மாண்டம் என்ற சொல் பிரியதர்ஷன் போன்ற இயக்குநர்கள் வருகைக்குப் பிறகே உச்சரிக்கப்பட்டது. மலையாள சினிமாக்களில் பெரும்பாலானவை, ஊர், தரவாட்டு வீடுகள், சாயா கடை என ஒரே மாதிரியான பின்னணியைக் கொண்டவைதான். பட்ஜெட்டும் மிக மிகக் குறைவானதுதான். மோகன்லால், மம்மூட்டி போன்ற மலையாளா சூப்பர் ஸ்டார்களின் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

தொடராத முதல் பிரமாண்டம்

மலையாள சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படம் 2009-ல் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த கேரள வர்மா பழசிராஜாதான். 27 கோடி ரூபாய் பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனாலும் இந்த வெற்றியை முன்னுதாரணமாகக் கொண்டு மலையாளத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கப்படவில்லை.

தமிழ், இந்திபோல மலையாள சினிமாவுக்குப் பரவலான பார்வையாளர்கள் இல்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். கேரளத்துக்கு வெளியே அரபு நாடுகளில் குறிப்பிட்ட அளவில் மலையாளிகள் இருந்தாலும் தமிழ், இந்திப் படங்களுடன் ஒப்பிடும்போது மலையாளப் படங்களுக்கான வியாபாரம் குறைவுதான்.

புதுப்பிக்கப்பட்ட சினிமா

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ கேரளத்தையும் தாண்டி மலையாளப் படங்களுக்கான பார்வையாளர்களைப் பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் ‘பிரேமம்’ சென்னையில் அரங்கு நிறைந்த 200-வது நாளைக் கொண்டாடியுள்ளது. இதை மலையாள சினிமாவின் வியாபாரம் பெருகியிருப்பதற்கான ஓர் அடையாளமாகக் கொள்ளலாம். ‘பிரேமம் அது வரையிலான மலையாள சினிமாவில் வசூல் சாதனைகளை இரண்டே வாரத்தில் முறியடித்துச் சாதனை படைத்தது.

நிவின் பாலி தவிர பெரிய அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து மாபெரும் வெற்றியை அதன் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் சாத்தியப்படுத்தியுள்ளார். அதுபோல தொழில்நுட்ப ரீதியிலும் மலையாள சினிமாவைப் புதுப்பித்துள்ளார். தமிழ், இந்தி சினிமாக்கள், மலையாளத்தில் அடையும் வெற்றியின் சூட்சுமத்தைப் புரிந்து, அந்த ரசனையை ‘பிரேம’த்தில் புகுத்தி வெற்றியைத் தட்டிச் சென்றிருக்கிறார். 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 14 நாட்களில் 20 கோடி ரூபாயை வசூலித்துத் தந்தது. மம்மூட்டி, மோகன்லால், திலீபின் படங்கள்கூட இந்த அளவுக்கு வசூலை ஈட்டியதில்லை. இந்தப் படத்தின் மொத்த வசூல் 60 கோடியைத் தாண்டிவிட்டது.

மேலும் பல வெற்றிகள்

‘பிரேம’த்தின் வெற்றி மலையாள சினிமாவுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான வியாபாரத்தின் நிலையையும் உயர்த்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து வெளிவந்த ‘எந்நு நிண்டே மொய்தீன்’ படமும் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. பிருத்விராஜ் நடிப்பில் 13 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘அமர், அக்பர், ஆண்டனி’ ஆகிய இரு படங்களும் இந்த ராஜபாட்டையில் கைகோத்துக்கொண்டன.

இந்த வெற்றி தந்த உற்சாகத்தால் மோகன்லாலின் ‘புலிமுருகன்’, மம்மூட்டியின் ‘மெகா ஸ்டார் 393’ திலிபீன் ‘குமார சம்பவம்’ பிருத்விராஜின் ‘சிமந்தகம்’ ஆகிய பெரும் பட்ஜெட் படங்கள் தயாரிப்பில் உள்ளன. இவை 2016-ம் ஆண்டின் சாதனைகளாக இருக்கலாம். பட்ஜெட் விஷயத்தில் மலையாளப் படங்கள் சிறகுகளை கொஞ்சம் அகல விரிப்பதற்கான தன்னம்பிக்கையைக் கடந்த ஆண்டின் வெற்றிகள் சாத்தியமாக்கியிருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்