சாதிக்கவேண்டும் என்ற வெறி இருக்கிறது: ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பேட்டி

By கா.இசக்கி முத்து

முதல் பட இயக்குநருக்கு இவ்வளவு பெரிய படம் அமையுமா எனத் தெரியவில்லை. நான் வெற்றியைக் கொடுத்தால் மட்டுமே என் பின்னால் வரும் உதவி இயக்குநர்கள் படம் பண்ணும்போது இதேபோல ஒரு படம் அமையும். எனவே எனக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது, பயம் எல்லாம் இல்லை” - டப்பிங் ஸ்டூடியோவிலிருந்து வெளியே வந்த இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மிகவும் அமைதியாகப் பேசத் தொடங்கினார்...

சிவகார்த்திகேயன் பெண் வேடமிடும் அளவுக்கு இந்தக் கதையில் என்ன வைத்திருக்கிறீர்கள்?

‘ரெமோ’ காதல் கலந்த காமெடிக் கதை. முன்பு நாயகன் பெண் வேடமிட்டு வந்த படங்களைப் பார்த்தீர்கள் என்றால் எல்லாவற்றுக்கும் ஒரு பின்னணிக் கதை இருக்கும். இப்படத்திலும் அப்படி ஒரு வலுவான கதை இருக்கிறது. முதல் பாதியில் 40 நிமிடங்கள், இரண்டாம் பாதியில் 25 நிமிடங்கள் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் வருவார்.

சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை பண்ணியதில்லை. அவருடைய முந்தைய படங்களிலெல்லாம் வேறு ஒரு கதை இருக்கும், அதில் காதல் இருக்கும். இது அப்படியல்ல. முழுக்க முழுக்கக் காதல் கதை. காதலை முதன்மையாகவும் காமெடியை இரண்டாவதாகவும் வைத்திருக்கிறேன்.

பெண் வேடமிட்ட நாயகன் என்றாலே அனைவருக்கும் ‘அவ்வை சண்முகி’தான் ஞாபகம் வரும். இதில் நான் ஒரு சதவீதம்கூட ‘அவ்வை சண்முகி’ படத்தைத் தொடவில்லை. ‘ரெமோ’ என்ற பெண் பாத்திரம் இல்லை என்றால் இக்கதை இல்லை.

பெண் வேடத்துக்காக சிவகார்த்திகேயனின் உழைப்பைப் பற்றிச் சொல்லுங்கள்...

சிவா சார் கடுமையான உழைப்பாளி. படப்பிடிப்பில் ஒரு நாள் கூட நேரம் தவறி வந்ததே கிடையாது. பெண் வேடம் படப்பிடிப்பின்போது அதிகாலை 3 மணிக்கு வந்து மேக்கப் போட உட்காருவார். 8 மணிக்குதான் முதல் ஷாட் என்பதால் நான் 7 மணிக்குதான் வருவேன். பொறுமையாக மேக்கப் போட்டு 8 மணிக்குப் படப்பிடிப்பு ஆரம்பித்து, இரவு 8 மணி வரை போகும். ஒரு நாள் கூட முகம் சுளித்ததே கிடையாது. 8 கிலோ வரை இந்தப் படத்துக்காக உடம்பு குறைத்திருக்கிறார்.

முதல் படத்திலேயே பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி ஆகியரோடு பணியாற்றிய அனுபவம்…

இதில் நான் பள்ளி மாணவன் மாதிரி கற்றுக்கொண்டேன். ஒளிப்பதிவாளர், சவுண்ட் இன்ஜினீயர் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. பெரிய வாத்தியாருடன் வேலை பார்ப்பது மாதிரிதான் இருந்தது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை எனக்கு வார்த்தைகளால் சொல்லத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. பி.சி சார் என் படத்துக்கு ஒளிப்பதிவாளர் என்பது பெருமையான விஷயம். அவருடைய கையைப் பிடித்து நடந்திருக்கிறேன். உதவி இயக்குநராகக் கற்றுக்கொண்டதைவிட, பி.சி. சார் இப்படத்தில் நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ரசூல் சாருடன் இப்போதுதான் வேலையை ஆரம்பித்திருக்கிறேன். 3 ஸ்பீக்கர், 2 மைக் வைத்து சிவாவின் ஒலியை ஒலிப்பதிவு செய்தார். சிவாவின் பெண் வேடக் குரலுக்காக அவ்வளவு மெனக்கெட்டார்.

இயக்குநர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடமிருந்து உதவி இயக்குநராக என்ன கற்றுக்கொண்டீர்கள்?

ஒரு தயாரிப்பாளருக்கு எப்படிப் படம் பண்ண வேண்டும் என்பதை சுந்தர்.சி சாரிடம் கற்றுக்கொண்டேன். ஒரு காட்சியை எவ்வளவு வேகமாகப் படமாக்கலாம், எழுதிய கதையைக் கம்மியான நாட்களில் எப்படி எடுக்கலாம் என்பதைக் கற்றுக்கொண்டேன். அவருக்கு எடிட்டிங் பற்றி நிறையத் தெரியும். இந்தக் காட்சி இதற்கு மேல் எடிட்டிங்கில் வராது என்று தெரிந்தால் அந்த இடத்தில் கட் சொல்லுவார்.

அட்லீ சாரிடம் விஷுவல் ப்யூட்டி இருக்கும். ஒரு காட்சியை மக்களுக்கு எப்படிக் காட்ட வேண்டும் என்பதை அட்லீ சாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். இந்தக் கதையை எழுதி முடித்தவுடன், அட்லீ சாரிடம் போய் சொன்னேன். சிவாவுக்குச் சரியாக இருக்கும் என்றார். நானும் அவரை மனதில் வைத்துதான் எழுதினேன் என்றேன். அவரே எனக்காக சிவா சாரிடம் பேசி நேரம் வாங்கிக் கொடுத்தார்.

உதவி இயக்குநராக இருந்த வாழ்க்கையும், இயக்குநர் ஆன பிறகான வாழ்க்கையும் மாறியிருக்கிறதா?

திரைப்படக் கல்லூரியில் படிப்பு முடித்துவிட்டு, ஷங்கர் சார் அலுவலகம் தவிர மணிரத்னம் சார், லிங்குசாமி சார், வெற்றி மாறன் சார் உள்ளிட்ட அனைவரின் அலுவலகத்துக்கும் சென்றிருக்கிறேன். படிப்பு முடித்தவுடன் 6 மாத காலம் ரொம்ப கஷ்டப்பட்டேன். ‘நாளைய இயக்குநர்’ போட்டிக்குச் சென்றேன். அப்போது இருந்த வாழ்க்கைக்கும், இப்போது இருக்கும் வாழ்க்கைக்கும் ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லை. ஒரு மனிதனாக அப்படியேதான் இருக்கிறேன். அப்போது எப்படியாவது சினிமா பண்ணிவிட வேண்டும் என்ற வெறி இருந்தது. சினிமா பண்ணிவிட்டேன். இப்போது சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நாயகன், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்று பெரிய குழுவுடன் முதல் பட வாய்ப்பு கிடைத்தவுடன் வீட்டில் என்ன சொன்னார்கள்?

என்னைவிடவும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள். இதைவிடப் பெரிய சந்தோஷம் எங்களுடைய வாழ்க்கையில் இல்லை என்றுதான் என்னிடம் சொன்னார்கள். தொலைக்காட்சியில் என் பேட்டியை எல்லாம் பார்த்துவிட்டு, எங்கு போனாலும் உன்னைப் பற்றிக் கேட்கிறார்கள்பா என்று சொல்லுவார்கள். எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்றுதான் எப்போது பேசும்போதும் சொல்லுவார்கள். பையனாக அவர்களைச் சந்தோஷப்படுத்திவிட்டேன் என நினைக்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்