திரையிசையில் காதல்

காதல் என்னும் உணர்வு, காலம் காலமாக அப்படியே இருக்க, அதை வெளிப்படுத்தும் முறைகள் மாறிவருகிறது என்னும் உண்மையை, நம் தமிழ்த் திரையிசைப் பாடல்களைக் கவனித்தாலே புரியவரும். சிறு வயதில் சங்கீத வகுப்புகளில் ஹார்மோனியப் பயிற்சியின்போது வாசித்தறிந்திருந்த ‘நாததனுமனிஷம்’ என்னும் தியாகராஜ கீர்த்தனையைப் பிற்பாடு திரையிசைப் பாடல் வடிவில் ‘காதல் கனிரசமே’என்று பி.யூ. சின்னப்பாவின் குரலில் கேட்டபோது, அதுதான் திரையிசையின் முதல் காதல் பாடலாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கு முன்பே தமிழ்த் திரையிசையில் பல காதல் பாடல்கள் இருந்தன என்றாலும், முதல் தமிழ்த் திரையிசைக் காதல் பாடலாக ’மங்கையர்க்கரசி’ திரைப்படத்தின் இந்தப் பாடலைத்தான் என் மனது குறித்து வைத்திருக்கிறது.

சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதரின் திரையிசைப் பாடல்களில் காதல் பாடல்களின் வடிவம் கிட்டத்தட்ட ஒன்றுதான்.‘காதல் கனிரசமே’, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ போன்ற பாடல்களின் காட்சியமைப்பும், பாடல் வரிகளும், இசையமைப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதான். இரண்டு பாடல்களுக்கும் ஒரே இசையமைப்பாளர் என்பது மட்டும் காரணமல்ல; அந்தக் காலகட்டத்தில் காதல் பாடல்களின் ஒட்டுமொத்த வடிவம் அப்படித்தான் இருந்திருக்கிறது. நாயகன் சாய்ந்தபடி ஓர் உயர்ந்த இருக்கையில் அமர்ந்து நாயகியையும் அவள் அழகையும் காதலையும் தமிழ்போல் ஒலிக்கும் பழைய சமஸ்கிருதத் தமிழில் வர்ணித்துப் பாடுவார். பரதநாட்டிய அரங்கேற்ற விழாபோல சம்பிரதாயமாக உடை, அணிகலன்கள் அணிந்து ஆடுவார் நாயகி. நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டைக் கிழித்து இருவருமே அதைத் தாண்டாமல் பாடுவார்கள், ஆடுவார்கள். ‘கண்ணகி’ திரைப்படத்தில் கண்ணாம்பாவைப் பார்த்து ‘அன்பில் விளைந்த அமுதமே’ என்று பாடும் சின்னப்பாவின் செய்கைகள் அனைத்தும், ஒரு தகப்பனார் ஸ்தானத்திலிருந்து வெளிப்படும் அத்தனை வாஞ்சையானதொரு உடல்மொழி.

கரம் பற்றிய காலம்

அதற்குப் பின்னர் வெளிவந்த காதல் பாடல்களான ‘உலவும் தென்றல் காற்றினிலே’, ‘முல்லை மலர் மேலே’போன்ற மென்மையான காதல் பாடல்களில் காதலர்களிடையே கொஞ்சம் நெருக்கம் தெரிந்தது. எதிரெதிரே படகில் அமர்ந்தபடி காதல் பாட்டு பாடலாயினர். ‘சக்கரவர்த்தித் திருமகள்’ திரைப்படத்தில் ‘காதலெனும் சோலையிலே ராதே ராதே’ என்று பாடியபடி நடந்துவரும் நாயகன் எம்.ஜி. ராமச்சந்திரன், ‘காதலெனும் காவியத்தை ராதே ராதே, உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே’ என்றபடி நாயகி அஞ்சலிதேவி இருக்கும் ஃபிரேமுக்குள் நுழைந்து அவரது கரங்களைப் பற்றுகிறார். அதன் பிறகு நாயகி சுற்றிச் சுற்றி ஆடுகிறார். ‘என் இதய வீணையிலே ராதே ராதே இன்னொலியை மீட்டிவிட்டாய் ராதே ராதே உன்னழகின் போதையிலே ராதே ராதே எந்தன் உள்ளம் வெறிகொள்ளுதடி ராதே ராதே’ என்று பாடும் நாயகனின் தோளில் பாடலின் இறுதியில் சாய்ந்துகொள்கிறார் நாயகி.

உத்திகளால் உணர்த்தப்பட்ட காதல்

தமிழ்த் திரையிசையில் காதல் பாடல்களின் அடுத்தகட்ட நகர்வாக இசையில் புதிய உத்திகள் பயன்படுத்தப்பட்டன. கருப்பு வெள்ளைப் படங்களின் மிக முக்கியமானதொரு காவியக் காதலைச் சொன்ன ‘அம்பிகாபதி’ படத்தின் ‘மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே’ என்ற பாடலை ராகமாலிகையெனும் பல ராகங்களைக் கொண்டு மெட்டமைத்தார் ஜி. ராமநாதன். நிறைவேறாக் காதலை உணர்த்தும் விதமாக இந்தப் பாடலின் ஒரு பகுதியை சோக ராகமான ‘முகாரி’யில் அமைத்தது, ஒரு வகையான புத்திசாலித்தனமான உத்தி என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற சங்கீத உத்திகளைப் புரிந்துகொள்ளக்கூடிய கலைஞர்களும் ரசிகர்களும் பெருமளவில் இருந்திருக்கிறார்கள். சமூகப் படங்கள் பெருமளவில் வரத்தொடங்கியவரையிலும் இந்த நிலை நீடித்திருந்தது.

தரும் கண்ணதாசனும்

காதல் பாடல்களின் வரிகளுக்காக சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை நாடியிருக்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம், ‘காற்று வெளியிடை கண்ணம்மா.’ அதற்குப் பிறகும் கண்ணதாசனைப்போன்ற கவிஞர்களும், விஸ்வநாதன் - ராமமூர்த்தி போன்ற இசையமைப்பாளர்களும் அத்தனை எளிதில் பழைய காதல் பாடலின் பாணியை விட்டு வெளியே வந்துவிடவில்லை என்பதற்குப் பல நூறு பாடல்களிலிருந்து இரண்டு பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாசமலர்’ திரைப்படத்தின் காதல் பாடலான ‘யார் யார் யார் அவள் யாரோ’, ‘பார் மகளே பார்’ படத்தின் ‘மதுரா நகரில் தமிழ்ச் சங்கம்’ என்கிற பாடல்கள்தான் அவை. இன்றைய தலைமுறையினர் மேற்சொன்ன இரண்டு பாடல்களையும் காதல் பாடல்கள் என்று சொல்வதைப் பார்த்து நகைக்கக்கூடும்.

கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் தங்களின் இறுதியை நெருங்கும் முன்னரே திரையிசைக் காதல் பாடல்களின் போக்கு மாறிவிட்டது. அரச உடையைக் களைந்துவிட்டு, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தொளதொள பேண்ட், சட்டையில் தங்கள் காதலிகளிடம் கொஞ்சம் நெருக்கம் காட்டினார்கள். பாடல் வரிகளிலும் இசையிலும் கூடமாற்றம் நிகழ்ந்தது. முகத்திலும் அங்க அசைவிலும் வெட்கத்தை விடாமல் வைத்திருந்த நாயகிகள், பாடல் காட்சிகளில் தங்கள் உடைகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கத் துவங்கினர். ஆனாலும் கால மாற்றத்தால் தமிழ்த் திரையிசையின் காதல் பாடல்களின் தரம் குறைந்துவிடாமல் உச்சத்திலேயே வைத்திருந்தனர், அன்றைய திரைக் கலைஞர்கள். குறிப்பாக இயக்குநர் தரின் திரைப்படங்களின் காதல் பாடல்களைச் சொல்லலாம் (காதல் பாடல்களில் நினைவில் வைத்திருக்க வேண்டிய மற்றொருவர் ஜெமினிகணேசன்). கவியரசர் கண்ணதாசனின் துணையுடன் இன்றளவிலும் மதிக்கத்தக்க பல நல்ல காதல் திரையிசைப் பாடல்களை நமக்குத் தந்திருக்கிறார் தர்.

எழுபதுகளின் மத்தியில் தமிழ்த் திரைப்படங்களில், திரையிசையில் மாற்றம் துவங்கிய பின்னும், காதல் பாடல்களில் தன்னுடைய கவி ஸ்தானத்தைவிட்டு கண்ணதாசன் இறங்கவேயில்லை. ‘வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் ...நான் இங்கு கண்டுகொண்டேன் ராமனை’ என்று ஒரு காதல் பாடலைத் துவக்கும் சௌகரியத்தை இயக்குநரும் இசையமைப்பாளரும் அவருக்கு வழங்கியிருந்தார்கள்.

இன்றைய காலம் எப்படி?

சின்னப்பா, பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, தர், கண்ணதாசன் என்று சீரான தொடர்ச்சியுடன் பயணித்த திரையிசைக் காதல் எண்பதுகளில் புதிய வடிவம் பெற்றது. பழமையும் புதுமையும் சங்கமிக்கும் புள்ளியாகத் திகழ்ந்தது. புதிய படிமங்கள், புதிய இசைக்கோலங்கள், புதிய நெருக்கங்கள் ஆகியவற்றை இந்தக் காலகட்டத்தின் திரையிசை கைக்கொண்டது. இளையராஜாவும் வாலியும் வைரமுத்துவும் பாரதிராஜா போன்ற இயக்குநர்களும் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், தேவி போன்ற நட்சத்திரங்களும் இந்தக் காலகட்டத்தின் திரைக்காதல் வரிகளுக்கு வடிவம் கொடுத்தார்கள். தொண்ணூறுகளில் ஏ.ஆர். ரஹ்மான், மணி ரத்னம், ஷங்கர் முதலானோர் திரையிசைக் காதலின் பின்நவீனத்துவ முகத்திற்குக் காரணமாய் அமைந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் காதல் என்பதன் பொருளும் வெளிப்பாடும் மாறியதைப்போலவே திரையில் காதல் பாடல்களும் மாறின. இந்தக் காலகட்டங்கள் விரிவான ஆராய்ச்சிக்கு உரியவை.

இன்றைய காலம் இன்னும் மாறியிருக்கிறது. சின்னப்பா காலத்து முறை இப்போது இல்லை. இன்றைய நவீன உலகில் கல்வியறிவு, ஆண் - பெண் உறவை சிக்கலில்லாத, நாகரிக இடத்தை நோக்கி நகர்த்திச் சென்றிருக்கிறது. காதல் என்னும் சொல்லைப் பொதுவில் உச்சரிக்கத் தயங்கிய சமூகம் இப்போதில்லை. அதை நம் திரைப்படங்களிலும் திரையிசையிலும் பார்க்க முடிகிறது. மெத்தையில் அமர்ந்து, பஞ்சுப் பொதித் திண்டில் சாய்ந்துகொண்டு, நாயகியை சதிராடச் சொல்கிற பாடல் காட்சிகளையும், நாயகியைத் தொடாத நாயகனையும் நம்மால் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை. ஆணுக்குப் பெண் சமம் என்பது மாறி ஆண் - பெண் பேதமே அவலம் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டு விட்டதை, நம் தமிழ்த்திரையிசைக் காதல் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. உணவு, உடை, கலாச்சாரம், மொழி இவைஎல்லாமே மாறிவிட்டன. அதனால்தான் ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா’ என்று நாயகியைப் பார்த்து வியந்த பழமைவாதி நாயகன் இப்போது மாறிவிட்டான். கல்வியறிவிலும், நவீன தொழில்நுட்ப அறிவிலும் தேர்ந்த இன்றைய நவீன உலகத்து நாயகன் கொஞ்சமும் தயக்கமில்லாமல் தான் காதலிக்கும் பெண்ணைப் பார்த்து, ‘எவன்டி உன்னப் பெத்தான்? கையில கெடச்சா செத்தான்’ என்று பாட முடிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

38 mins ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்