பதற்றத்தைத் தணித்த பூதம்

By பிரதீப் மாதவன்

ஏப்ரல் 14, 1967: பட்டணத்தில் பூதம் 50 ஆண்டுகள் நிறைவு

சென்னை தனது வரலாற்றில் 1967-ம் ஆண்டினை மறக்கவே முடியாது. அது அந்த ஆண்டின் ஜனவரி மாதம். சென்னை மாநிலத்துக்கான நான்காவது சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. முதல் கொண்டாட்டம் ஜனநாயகத் திருவிழா என்றால் இரண்டாவது கொண்டாட்டம் அன்று நடைபெற்ற இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

மூன்றாவது பெரிய கொண்டாட்டம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புதுப்பட ரிலீஸ். 1967 பொங்கலுக்கு முதல் நாள் ஜனவரி 13-ம் தேதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடிப்பில் வெளியாக இருந்தது ‘தாய்க்குத் தலைமகன்’. எம்.ஜி.ஆரின் கட்-அவுட்டுகள் தமிழகத்தின் பல ஊர்களில் விண்ணைத் தொட்டன. ஆனால் ஜனவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீட்டில் அவரைத் துப்பாகியால் சுட்டார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அதன் பிறகு எம்.ஆர்.ராதாவும் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயல, தமிழகமே பரபரப்பானது.

இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். புகழ்பெற்ற அந்த இரண்டு நடிகர்களுக்குமே மறுநாள் காலை 11 மணிக்கு உணர்வு திரும்பியது. திட்டமிட்டபடி ‘தாய்க்குத் தலைமகன்’ மறுநாள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் எம்.ஜி.ஆர். தாக்கப்பட்ட நிகழ்வால் ஏற்பட்ட பதற்றமும் உணர்ச்சிக்கொந்தளிப்பும் அடங்கவில்லை.

அமைதியைக் கொண்டுவந்த பூதம்

எம்.ஜி.ஆர். குண்டடிபட்டு குரல் பாதிக்கப்பட்ட நிலை தொடர் சிகிச்சையில் இருக்க, இன்னொரு பக்கம் இந்தக் வழக்கும் நடந்துகொண்டிருந்தது. இதனால் தமிழகத்தில் நிலவிய பதற்றம் திரையுலகையும் தொற்றிக்கொண்டது. எந்தப் படமும் வெளியாகவில்லை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களில் சிலர் ஒரு குழுவாகச் சென்று எம்.ஆர்.ராதாவின் தாமஸ் மவுண்ட் வீட்டுக்குள் புகுந்து ஜன்னல்களை உடைத்து உடைமைகளைச் சேதப்படுத்தினர். இதனால் மேலும் பதற்றம் தொற்றிக்கொண்டது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அமைதியைக் கொண்டுவந்து, தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படம் ‘பட்டணத்தில் பூதம்’.

1967 ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியான இந்தப் படத்தில் “நான்தான் பூதங்களின் பூதம்… ஜீ…பூம்ம்..பாஆஆ’ என்று ‘ஜாவர்’ சீதாராமன் தோன்றி நடிக்க, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது பூதம். படத்தில் இடம்பெற்ற நெருக்கமான காதல் காட்சிகள் வாலிபர்களைச் சுண்டி இழுத்தன. படத்தைத் தயாரித்த வீனஸ் பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் கல்லாப்பெட்டி நிறைந்தது.

வீனஸ் கண்ட வெற்றி

கதை, வசன கர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், இயக்குநராக உருவெடுக்க முக்கியக் காரணமாக இருந்த நிறுவனம்தான் வீனஸ் பிக்ஸர்ஸ். அந்நாளில் அடையாறில் இருந்த நெப்டியூன் ஸ்டூடியோ மிகவும் பிரபலமானது. பிரபலமாகிவிட்ட கதாசிரியராக அங்கே போய் வந்துகொண்டிருந்த தருக்கு, நஞ்சுண்டையா, வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. கோவிந்தராஜ் போன்ற நண்பர்கள் கிடைத்தார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து தொடங்கியதுதான் வீனஸ் பிக்ஸர்ஸ். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் பிரிந்து சென்று தனது சோதனை முயற்சிகளுக்காக ‘சித்ராலயா’ தொடங்கிய பிறகு, வீனஸ் பிக்ஸர்ஸ் தயாரித்த படம்தான் ‘பட்டணத்தில் பூதம்’.

வீனஸ் பிக்சர்ஸின் முதலாளிகளில் முதன்மையானவராக இருந்தவர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. இவர் வேறு யாருமல்ல; மணி ரத்னத்தின் சித்தப்பா. தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும்; ஆனால் அதில் ரசிகர்களைக் கவரும் வணிக அம்சங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று விரும்பியவர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. அவரது எண்ணத்தைப் புரிந்துகொண்டு எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும் வண்ணம் ‘பட்டணத்தில் பூதம்’ படத்துக்கான திரைக்கதை, வசனத்தை எழுதிக் கொடுத்ததோடு அந்தப் படத்தில் பூதமாகவும் நடித்து அசத்தினார் ‘ஜாவர்’ சீதாராமன்.

பித்தளை பாட்டில் பூதமான கதை

சமூக, குடும்பக் கதைகளுக்குத் தமிழ் சினிமா மடை மாறிய காலகட்டத்தில் நுழைந்து, கதை, நடிப்பு ஆகிய இரு தளங்களிலும் ஜனரஞ்சகமாகத் தனது ஆற்றலை வெளிப்படுத்திப் புகழ்பெற்ற திருச்சிக்காரர் ‘ஜாவர்’ சீதாராமன். ஹாலிவுட்டில் தயாராகி 1963-ல் சென்னை மகாணம் உட்பட உலகெங்கும் வெளியாகி சக்கைபோடு போட்ட ‘பிராஸ் பாட்டில்’ என்ற ஆங்கிலப் படத்தை தழுவியே ‘பட்டணத்தில் பூதம்’ திரைக்கதையை எழுதினார் சீதாராமன்.

காதலுக்குக் கைகொடுக்கும் ஜீ பூம் பா

ரயில் பயணத்தில் தொடங்கும் காதல், கள்ளக் கடத்தல், மூவாயிரம் ஆண்டுகள் ஜாடியில் அடைப்பட்டுக் கிடந்த பூதம் விடுவிக்கப்படுதல், ஊடலில் இருக்கும் காதலர்களைச் சேர்த்து வைக்க பூதம் உதவுதல், வானில் பறந்து செல்லும் கார், விறுவிறுப்பான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி, தமிழ் சினிமாவின் முதல் ஹெலிஹாப்டர் துரத்தல் காட்சி என ரசிகர்களுக்குப் படம் முழுவதும் ஆச்சரியங்கள் வந்துகொண்டேயிருந்தன.

தேசிய அளவில் கூடைப்பந்துப் போட்டியில் சாம்பியனாக விளங்கும் ஜெய்சங்கர், தொழிலதிபர் வி.கே.ராமசாமியின் மகள் கே.ஆர்.விஜயாவை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே துளிர்விட்டுத் தழைக்கும் இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கே.பாலாஜி. இதற்கிடையில் கலைப்பொருள் என்று நினைத்துப் பழம்பெரும் ஜாடி ஒன்றை வாங்கிவருகிறார் வி.கே.ஆர். அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களால் அதை துரதிஷ்டம் என நினைக்கும் வி.கே.ஆர், அந்த ஜாடியைக் கவிதைப் போட்டிக்கு நன்கொடையாக அளித்துவிடுகிறார். அந்தப் போட்டியில் வெல்லும் ஜெய்சங்கருக்கு ஜாடி பரிசாகக் கொடுக்கப்படுகிறது. ஜெய்சங்கரும் அவரது நண்பர் நாகேஷும் வீட்டுக்கு வந்து ‘அப்படி என்னதான் இருக்கிறது இந்த ஜாடியில்?’ என அதைக் கஷ்டப்பட்டுத் திறக்கிறார்கள்.

அதிலிருந்து பூதம் விடுதலையாகிறது. அப்புறமென்ன? ஜெய்சங்கர்-நாகேஷுக்கு சேவை தொடங்குகிறார் அரேபிய பூதமான ஜீ பூம் பா. காதலர்களைச் சேர்த்து வைப்பதோடு; வி.கே.ஆரின் தொழில் கூட்டாளியான வி.எஸ்.ராகவனும் அவரது மகனும் மோசமான கள்ளக் கடத்தல் கும்பலின் சூத்திரதாரிகள் என்பதைக் கண்டறிந்து அவர்களை போலீஸிடம் பிடித்துக்கொடுக்க உதவுகிறது. இறுதியில் பூதம் பூமியை விட்டுக் கிளம்பும்போது அனைவரும் கண் கலங்குகிறார்கள்.

எல்லோருக்கும் எல்லாமும்

பூதத்தின் நல்ல குணங்கள், அது பேசிய அழகான தமிழ், அதன் ஆடைகள் என ரசிகர்களுக்கு பயம் காட்டாத ஆனால் பல மாயங்களைச் செய்த பூதத்தை மிகவும் ரசித்தார்கள். பாஸ்கராக ஜெய்சங்கர் ஆர்பாட்டமில்லமால் அமைதியாக நடித்த படம் இது. தங்கவேலு முதலியாரின் (வி.கே.ஆர்.) மகள் லதாவாக நடித்த கே.ஆர்.விஜயா, மெலிந்த உடல் தோற்றத்துடன் கண்களை அதிகம் உபயோகித்து நடித்தார். காதல் காட்சிகளில் நெருக்கமான நடிப்பை வழங்கியிருந்தார்.

நாகேஷ் ‘சீசர் சீனு’ கதாபாத்திரத்தில் ஜெய்சங்கரின் நண்பனாகத் துள்ளிக்கொண்டே இருக்கும் மான்குட்டியைப் போலத் தனது முத்திரையான உடல்மொழியால் படம் முழுவதும் வந்து சிரிக்கவைத்தார். இவர்களைத் தவிர மொட்டைத் தலையுடன் நடித்த ஆர்.எஸ்.மனோகர். ஜோதிலட்சுமி, விஜயலலிதா என்று ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம். எல்லோருக்கும் பொருத்தமான வேடங்கள் என பூதம் காட்சிக்குக் காட்சி களைகட்டியது.

70-களின் பிரம்மாண்ட இயக்குநர்

படத்தை இயக்கிய எம்.வி.ராமனை அந்நாளின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது மிகையில்லை. தமிழ், தெலுங்கு இந்தி உட்பட 18 படங்களை இயக்கியிருக்கும் இவர், தனது படங்களில் இசைக்கும் பிரமாண்டமான காட்சி அமைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதில்லை. ‘பட்டணத்தில் பூத’த்தில் அந்த பிரம்மாண்டம் இரண்டு மடங்கானது. 1962-ல் வெளியான ‘கொஞ்சும் சலங்கை’ இவரது இயக்கம்தான். ராமனின் பிரம்மாண்டத்துக்கு மிகச் சிறந்த முறையில் தந்திரக் காட்சிகளைப் படம்பிடித்துத் தந்த ஒளிப்பதிவாளர் எச்.ஜி.ராஜுவின் பங்கு அளப்பரியது.
அதேபோல எம். எஸ்.வி.யின் உதவியாளரான கோவர்த்தனம் இசையில், கண்ணதாசனின் கவிதையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன. ‘உலகத்தில் சிறந்தது எது?’, ‘அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’, ‘கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா?’ ஆகிய மூன்று பாடல்கள் உச்சபட்ச வெற்றிபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்