மூச்சுக் காற்றின் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது அந்தப் படப்பிடிப்பு அரங்கம். காரணம் சிவாஜி..!
‘என் ஆச ராசாவே’ படத்தில் நாட்டுப்புறக் கலைஞரின் வேடம் என்பதால் ஆசை ஆசையாக சிவாஜி ஒப்புக்கொண்டிருந்தார் என்று செய்தி பரவியிருக்க, சிவாஜி இருக்கும் படப்பிடிப்புத் தளம் பற்றி கட்டுரை எழுதலாம் என்ற ஆசையில் போயிருந்தேன்.
ரகசியம் பேசும் குரலில் டைரக்டர் கஸ்தூரி ராஜா, “லஞ்சுக்குப் பிறகு பேட்டியை வெச்சுக்குவோம். சிவாஜி ஐயா புறப்பட்டு போயிருவார். அதுவரைக்கும் வேடிக்கை பாருங்க” என்று சொல்லிவிட்டார். “சரி... ஆனா, ஷூட்டிங் நடக்கறதை போட்டோ எடுத்துக்கறோம். ப்ளாஷ் வராது. உங்களுக்கு தொந்தரவு இருக்காது” என்று சொல்லிவிட்டுப் புகைப்படக்காரருக்குச் சைகை காட்டினேன். அவர் கேமராமேனுக்கு அருகில் போய் பதுங்கி உட்கார்ந்துகொண்டார்.
ரோஜா தன் முறை மாமனான முரளியைத் தேடி வந்து தடால் புடால் என்று சண்டை போட, அதை சிவாஜியும் மணிவண்ணனும் வேடிக்கை பார்ப்பதுதான் காட்சி!
“ஸ்டார்ட் கேமரா...” என்றார் இயக்குநர். கேமரா ஓடத் தொடங்கியது. ரோஜாவுக்கு மட்டும்தான் வசனம். மற்றவர்கள் அவருடைய வசனத்துக்கு ரியாக்ட் செய்ய வேண்டியது மட்டும்தான். ரோஜா அதிரடியாக உள்ளே நுழைந்து பாத்திரங்களை விசிறி அடித்துவிட்டு வசனங்களைப் பேசி முடிக்க டேக் ஓகேயானது.
எல்லாரும் அவரவர் இடத்தில் போய் உட்கார, ஒருவர் வந்து போட்டோகிராபரிடம், “உங்களை ஐயா கூட்டிட்டு வரச் சொன்னாரு” என்றார். அவர் என்னைப் பார்க்க, நான் “யாரு?” என்றேன். “ஐயாதான்” என்று சொல்ல, போட்டோகிராபர் என்னைத் தள்ளிவிட்டார்.
சிவாஜி மர நிழலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. கிராமத்து ஆட்கள் போடும் பனியன் மாடல் சட்டையும், நாலு முழ வேட்டியும்தான் உடை என்றாலும் அதிலேயே ஒரு கம்பீரம் தெரிந்தது. நான் வந்ததை உணர்ந்துவிட்டார் என்பதை மூடிய இமைகளுக்குள் உருண்ட விழிகள் தெரிவித்தன.
“என்னைக் கேட்காமல் தட்சனின் யாகத்துக்குச் சென்றுவர உனக்கு என்ன துணிச்சல்...” என்று திருவிளையாடலில் பார்வதியிடம் கேட்கும்போது சிவபெருமானின் புருவம் மட்டும் உயர்ந்து கேள்விக்குறியாகுமே அப்படிப் புருவம் உயர்த்துவாரோ என்று தோன்றியது.
லேசாகத் தொண்டையைச் செருமலாமா என்று நினைத்தேன். வழக்கமாகப் படப்பிடிப்புத் தளம் பற்றி எழுதச் செல்லும்போது நட்சத்திரங்களோடும் பேசுவது வழக்கம். ஆனால், அப்படி எந்த முயற்சியையும் இங்கே எடுக்கக் கூடாது, படம் பற்றி நானே சொல்லிவிடுகிறேன் என்று கஸ்தூரி ராஜா சொல்லியிருந்தார். ஆனாலும் வலிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படம் பற்றி சிவாஜி கணேசன் என்ன சொல்கிறார் என்பதும் கட்டுரைக்கு வலு சேர்க்கும். சிவாஜியை சந்தித்துப் பேசினேன் என்பது ஒரு நிருபராக எனக்குப் பெருமையாக இருக்கும் என்றும் தோன்றியது.
நான் அவரது அருகாமையில் வந்துவிட்ட அரவம் உணர்ந்து, நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.
“தம்பி, யாரு... என்ன வேணும்? ரொம்ப நேரமா நிக்கறாப்ல இருக்கு... என்னைப் பார்க்கவா வந்தீங்க? ஒரு வார்த்தை கூப்பிட்டுருக்கலாமே...” என்றார். “இல்லே... ஷாட் நடுவுல போட்டோ எடுத்தவங்களை பார்க்கணும்னு சொன்னீங்களாம்...” என்றேன்.
“போட்டோ எடுத்தது நீங்க இல்லையே தம்பி..? அந்த தம்பி க்ரீம் கலர் சட்டைல போட்டிருந்தாரு” என்றார். திடுக்கென்று இருந்தது.
அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் கேமராவின் இரு பக்கமும் விளக்குகள் வெள்ளமென ஒளியைப் பெருக்கிக்கொண்டிருந்தன. கண்களை விழித்துப் பார்க்கவே கூசும் அளவு வெளிச்சம். அங்கிருந்து பார்த்தால் எதிரே எந்த உருவமும் தெரியாது. ஆனால் அவருக்கு ஆள் மட்டுமல்ல, க்ரீம் கலர் சட்டையும் தெரிந்திருக்கிறது.
நான், “பத்திரிகைக்காக எடுத்தோம். நான் நிருபர்” என்றேன். “அப்படியா... டைரக்டர்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டீங்களா?” என்றார். “ஆமாம்…” என்றதும், “அப்படின்னா உங்க வேலையை நீங்க செய்திருக்கீங்க. நான்தான் தப்பா நினைச்சுட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க...” என்றார். எனக்குப் பதறிவிட்டது.
“சார்... நீங்க கேட்டது தப்பில்லை... யதார்த்தமா வரணும்னு நாங்கதான் உங்ககிட்டே சொல்லாம படம் எடுத்துட்டோம்” என்றேன்.
“சரி... டைரக்டர்கிட்டே கேட்கறதுதான் முறை. என்கிட்டே எதுக்கு கேட்கணும்... அவருதான் கேப்டன் ஆஃப் த ஷிப்” என்றபடி கண்களை மூடிக்கொண்டார். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.
சில நொடிகளில் கண்ணை விழித்தவர், என்ன என்பதுபோலப் புருவத்தை உயர்த்தினார்.
“ஒரு சின்ன சந்தேகம் சார்... ப்ளாஷ்கூட போடலை. எப்படி படம் எடுத்ததை கண்டுபுடிச்சீங்க?”
“சிவப்பா ஒரு பொட்டு வெளிச்சம் தெரிஞ்சுது. சத்தமும் கேட்டுச்சுப்பா. க்ளிக்னு ஒரு சத்தம் கூடுதலா கேட்டுச்சா... அதான். நம்ம பய என்னைக்கு ஷாட்டுல படம் எடுத்திருக்கான்... ஷாட் முடிஞ்சதும் நிக்க வெச்சு போஸ் குடுக்கச் சொல்லித்தான் எடுப்பான். அதான் வேற யாரோ போட்டோ எடுக்காங்கனு தோணுச்சு...”
விர்ரென்று மூவி கேமரா ஓடும் சத்தத்தில், மொத்த பாத்திரங்களையும் ரோஜா உருட்டியதில் எழுந்த சத்தத்தில், அலறும் உச்சக் குரலில் அவர் வசனம் பேசிய சத்தத்தில் க்ளிக் சத்தம் அவருக்கு மட்டும் கேட்கிறது!
கட்டுரையின் தன்மையைச் சொல்லி, “உங்க கதாபாத்திரம் பற்றியும் ஷூட்டிங் அனுபவம் பற்றியும் சொல்லுங்க” என்றேன்.
“அதெல்லாம் நான் பேசப்படாது. நான் இங்க வந்திருக்கறது டைரக்டர் குடுக்கற வசனங்களை பேசறதுக்குதான். உங்க கிட்டே பேசுறதுக்கு இல்லை. நீ சிவாஜி கணேசன்கிட்டே பேட்டி எடுக்கணும்னா அன்னை இல்லத்துக்கு வா” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார்.
நான் கடைசிவரையில் நடிகர் திலகம் சிவாஜியை சந்திக்கவே இல்லை!
தொடர்புக்கு cmbabu2000@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago