கைநழுவிய தேசிய விருது: நடிகர் விஜயகுமார் நேர்காணல்

By மகராசன் மோகன்

‘‘ஒருமுறை சிவாஜி அண்ணன் சாப்பாடு பரிமாற சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். ‘‘டேய் விஜயா? எப்படிடா நீ சினிமாவுக்கு வந்தே?’ன்னு கேட்டார். நீங்க மேடையில நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தைப் பார்த்துட்டு வந்தேன்ணே!’ என்று சொன்னேன். பரிமாறுவதை நிறுத்திட்டு, ‘அடப்பாவிப் பயலே... என்னோட நாடகத்தைப் பார்த்துட்டு வந்தவன் இன்னைக்கு என்னையே அந்தக் குழம்பு ஊத்துங்க, இந்தக் குழம்பு ஊத்துங்கன்னு ஆர்டர் போடுற!’ன்னு கிண்டல் பண்ணினார். ‘‘இதுதான்ணே சாதனை!’’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். அதுக்கு அவர், ‘‘டேய் விஜயா... ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ தெருக்கூத்தைப் பார்த்துட்டுத்தான் நான் நாடகத்துலயே சேர்ந்தேன்!’’ன்னு சொன்னார். ரெண்டு பேரோட அலைவரிசையும் ஒத்துப்போகிறதே என்று நினைத்து சந்தோஷமானேன்’’ என்று கடந்த கால நினைவுகளோடு பேசத் தொடங்கினார், நடிகர் விஜயகுமார்.

700 - க்கும் மேற்பட்ட படங்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான திரைத்துறை பயணம் என்று சாதனை படைத்துவரும் விஜயகுமாரைப் பாராட்டி சமீபத்தில் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ‘டாக்டர்’ பட்டம் அளித்துக் கவுரவித்துள்ளது. இந்த தருணத்தில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

ஐம்பது ஆண்டுகளைக் கடந்து திரையுலகில் பயணித்து வருகிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, நாட்டுச்சாலை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தக் காலத்திலேயே அப்பா ஊரில் இரண்டு ரைஸ் மில் வைத்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரிசி அனுப்பும் தொழிலில் இருந்தார். அப்பா, அம்மாவுக்கு நான் மருத்துவராக வேண்டும் என்பது ஆசை. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’மேடை நாடகமாகக் கும்பகோணத்தில் நிகழ்வதையும், அதில் சிவாஜி சார் நடிக்கிறார் என்பதையும் கேள்விப்பட்டு அதைப் பார்க்கச் சென்றோம்.

மகாமகம் நடக்கும்போது எவ்வளவு கூட்டம் இருக்குமோ அப்படி ஒரு கூட்டம். மரத்தில் ஏறிக்கொண்டு சிவாஜி சாரைப் பார்த்தோம். அவருக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து வாழ்ந்தால் இப்படி ஒரு மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இனி படிப்பு வேண்டாம், நடிப்புதான் நம் வேலை என்று சென்னைக்கு ரயில் ஏறினேன். அன்று தொடங்கி இன்றுவரை கிடைக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஆசான்தான்.

சென்னைக்கு வந்ததும் சினிமா வாய்ப்புகள் கிடைத்தனவா?

மூத்த அண்ணன் ராமச்சந்திரன் சென்னையில் கடை வைத்திருந்தார். அவருடன் இருந்த சுப்பாராவ் மூலம் நிறைய நாடக கம்பெனிகளின் பரிச்சயம் கிடைத்தது.

நாடகத்தில் நடிக்க வாய்ப்புத் தேடினேன். ‘ராம பக்தி’என்ற நாடகத்தில் முதன்முதலாக விநாயகர் வேடம் போடும் வாய்ப்பு அமைந்தது. எதையும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்க வேண்டும் என்று சொல்வோமே, எனக்கு ஆரம்பமே விநாயகர் வேடம். அதே நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மகாவிஷ்ணு வேடமும் போட்டேன். இயக்குநர் ராமண்ணா ‘ஸ்ரீவள்ளி’படத்தில் பாலமுருகனாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். திரைப்பயணமும் தொடங்கியது.

சிவாஜிகணேசனிடம் நெருங்கிப் பழகிய அதே நேரத்தில் எம்.ஜி.ஆருடனும் நெருக்கமாக இருந்திருக்கிறீர்கள், இது எப்படி?

சென்னை, சேவா ஸ்டேஜ் நாடகத்துக்கான ஒத்திகையில் இருந்தேன். அப்போது, ‘எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டுட்டார்!’னு செய்தி வந்தது. ஒத்திகையை அப்படியே விட்டுவிட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ஓடினேன். யாரையும் அனுமதிக்க வில்லை. போலீஸ் வேனில் ஏறிக் குதித்து யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்குள் சென்றேன். உள்ளே, எம்.ஜி.ஆர் ஒரு ஸ்ட்ரெக்சர்லயும், எம்.ஆர்.ராதா இன்னொரு ஸ்டெக்சர்லயும் அடிப்பட்ட காயங்களுடன் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.

உடன் யாரும் இல்லை. எம்.ஜிஆருக்கு மேற்புறம் ஒரு டியூப் லைட் எரிந்துகொண்டிருந்தது. கண் கூசுகிறது என்று அதை நிறுத்தும்படி சைகையிலேயே சொன்னார். நான் யார் என்றுகூட அவருக்குத் தெரியாது. அப்படி அறிமுகமான நான் பின்னாளில் அவரது பெட்ரூம் வரைக்கும் யாரிடமும் கேட்காமல் செல்லும் நட்பையும் அன்பையும் பெற்றேன். அது என் பாக்கியம்.

எம்.ஜி.ஆர் அவர் தொடங்கிய அதிமுகவின் இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீங்கள் சொன்ன வார்த்தைதான் இதற்குப் பதில். இன்றைய சூழ்நிலையில் அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்று ஊருக்குச் சென்று விட்டீர்களாமே?

ஆமாம். ஊருக்குப் போய் தீவிர விவசாயியாக மாறினேன். அந்த நாட்களில்தான் ஐ.ஆர். எட்டு நெல் ரகம் வந்தது. அதை நட்டு விவசாயம் பார்க்கும் வேலையில் தீவிரம் செலுத்தினேன். நாடகம், சினிமா வாய்ப்புகள் என்று சுற்றிய நாட்களில் மு.க.முத்து, மு.க.அழகிரி எல்லோரும் நண்பர்களானார்கள். ஊரில் இருந்தபோது, மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’படம் ரிலீஸ் ஆனது.

படத்தைப் பார்த்துவிட்டு நண்பர்கள் எல்லோரும் சினிமாவில் அசத்துகிறார்களே என்ற எண்ணம் வந்து மீண்டும் சென்னைக்கு வந்தேன். வசனகர்த்தா பாலமுருகன் மூலம் இயக்குநர் மாதவனின் அறிமுகம் கிடைத்தது. அப்போதுதான் ‘பொண்ணுக்குத் தங்க மனசு’படம் ரீ- என்ட்ரி வாய்ப்பாக அமைந்தது.

‘அந்தி மந்தாரை’ படத்தின் கதாபாத்திரத்துக்காக தேசிய விருது பட்டியலில் உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டதே?

நான் எத்தனையோ படங்கள் நடித்துவிட்டேன். ஆனால், நான் வாழ்ந்த படமாக நினைப்பது ‘அந்திமந்தாரை’யைத்தான். தேசிய விருது தேர்வுக் குழுவில் இருந்த இயக்குநர் வலம்புரி சோமநாதன் போனில் அழைத்து, ‘உங்களுக்குக் கிடைக்க வேண்டிய விருது, மகாத்மா காந்தி வேடம் போட்டவருக்கு கிடைத்துள்ளது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் உங்களுக்குக் கைவிட்டுப்போய்விட்டது’ என்று சொன்னார். பரவாயில்லை என்று எடுத்துக்கொண்டேன்.

இந்தமாதிரி பட்டங்கள், விருதுகள் பற்றிப் பேசும்போது ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பட்டங்கள், விருதுகள், பதவிகள் எல்லாம் ஒரே நபருக்கே ஏழு முறை, ஒன்பது முறை என்று கொடுக்கப்படுகிறது. ஒரு துறையில் ஒருமுறை ஒருவர் வாங்கினால் அதோடு அவரை விட்டுவிட்டு அடுத்தடுத்து புதியவர்களுக்குக் கொடுத்து ஊக்குவிக்கலாமே. என் சின்ன ஆதங்கம் இது.

‘நாட்டாமை தீர்ப்பை மாற்றிச் சொல்லுங்க’ என்ற வசனத்தை இன்றைய தலைமுறையினரும்கூட சமூக வலைதள மீம்ஸில் சுழல விடுகிறார்களே?

‘நாட்டாமை’ படத்தில் சரத்குமார் நடித்த இரண்டு கதாபாத்திரங்களில் நான் ஒரு கதாபாத்திரம் பண்ண வேண்டும் என்று முதலில் கே.எஸ்.ரவிக்குமார் கதை சொன்னார். ஓ.கே என்று சொன்னேன். அடுத்துக் கதை கேட்ட சரத்குமார் இரண்டு ரோலையும் நானே செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

திரும்ப வந்து விஷயத்தை என்னிடம் சொன்ன கே.எஸ்.ரவிக்குமாரிடம், மூன்று கேரக்டர்களையுமே அவரையே நடிக்கச் சொல்லுங்க எனக் கோபத்தோடு சொல்லிவிட்டேன். ஒரு வழியாக என்னைச் சமாதானப்படுத்தி இப்போது படத்தில் உள்ள நாட்டாமை கேரக்டரை நடிக்க வைத்தார். நான் மறுத்த கதாபாத்திரம்தான் இன்று வரைக்கும் ‘நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு!’ என்று என்னை மையப்படுத்தி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்