பொய்யையும் புனைவையும் வாரியிறைக்கும் பொழுதுபோக்கு காட்சி ஊடகங்களுக்கு மாற்றாக, உண்மைகளை உரக்கப் பேசி வருபவை ஆவணப்படங்கள். இந்திய அளவில் இன்று ஆவணப்படத்துறையில் இளைஞர்கள் துணிவோடும், உண்மையை வெளிக்கொணரும் உத்வேகத்தோடும் இயங்குவதற்கு ஊக்கம் கொடுத்த முன்னோடி ஆவணப்பட இயக்குநர்களில் முதன்மையானவர் ஆனந்த் பட்வர்த்தன். தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் சமகாலத்தின் முக்கியப் பிரச்சினைகளை 80களில் ஆரம்பித்து இருபது ஆண்டுகளைக் கடந்து படமாக்கி வருபவர். தனது ஒவ்வொரு படத்திலும் பிரச்சினை சார்ந்த நிகழ்வுகளை நேரடி சாட்சியாகக் காட்சிப்படுத்தி ஆவணப்படங்களாக சமூகத்தின் மனசாட்சி முன்பு வைத்தவர்.
10 ஆண்டுகள்வரைகூடக் காத்திருந்து, தனது கையடக்க வீடியோ கேமராக்கள் மூலம் தாமே காட்சிப்படுத்தி வந்த ஆனந்த் பட்வர்த்தனின் பாணி என்பது ரஷ்ய முறை மாட்டேஜ் காட்சிமொழியைத் தழுவியது. ஒரு ஷாட்டிலிருந்து வேறொரு அதிர்வு தரும் ஷாட்டுக்குத் தாவிச் சென்று பார்வையாளர்களுக்குள் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் படத்தொகுப்பு என தனித்த விவரணையைக் கொண்டது. பிரச்சினையின் ஆழத்தை வெளிப்படுத்தப் பன்முகக் கருத்துகளுக்கும் போதிய இடம்கொடுத்துப் படங்களை உருவாக்கியவர். ஊழல், குடிசைவாசிகளின் வாழ்விடப் பிரச்சினை, அணு ஆயுதப் போட்டி, இனவாதம் மற்றும் மதவாதம், தொழிலாளர் போராட்டம் என இந்திய சமூகத்தில் எரியும் பிரச்சினைகளாக இருக்கும் பலவற்றையும் துணிவுடன் தொட்டுப் படமாக்கியவர்.
கடைசியாக இவர் படமாக்கிய `ஜெய் பீம் காம்ரேட்’ கடந்த ஆண்டு மும்பை சர்வதேசப் படவிழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை வென்றது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மும்பையில் தொடங்கிய 13வது மும்பை சர்வதேசப் பட விழாவில் வி. சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆனந்த் பட்வர்த்தனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆவணப்படங்கள் துறையில் இடையறாமல் இயங்கி, மாபெரும் பங்களிப்பைச் செய்த சாதனையை கௌரவப்படுத்தும் விதமாக ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதைப் பெற்றுக்கொண்ட பட்வர்த்தன், “ இந்த விருதைப் பெறும் நேரத்தில் சந்தோஷமும் இருக்கிறது; அதேநேரம் கவலையும் இருக்கவே செய்கிறது. காரணம் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைப் பேசிய எனது படங்கள் பாராட்டப்பட்டாலும், அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பது குறைவானதாகவே இருக்கிறது. ஒரு ஆவணப்பட இயக்குநரை இது கவலைகொள்ள செய்யும் ஒன்று” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago