கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரியில் கூடிய சினிமாலஜி மாணவர்களில் நம்ம க்ரூப் முதலில் கேன்டீனில் குழுமியது. எல்லாரும் டீ சொல்ல, பார்த்தா மட்டும் காபி ஆர்டர் செய்தான்.
“பார்த்தா கமல் ரசிகன்ல, அவனுக்கு எப்பவும் காப்பிதான் பிடிக்கும்” எனக் கிளப்பிவிட்டான் ப்ரேம்.
“ஏண்டா, தேவை இல்லாம தலைவன் மேலயே கை வைக்கிற?” - சற்றே பொங்கினான் பார்த்தா.
“காப்பி அடிக்கிறதுல ஆர்வம் அதிகமா இருக்குறவங்களுக்கு, காப்பி குடிக்கிறதுலயும் ஈடுபாடு இருக்கும்னு எங்க ஊர்ல சொல்வாங்க!”
“என் தலைவன் பண்றது இன்ஸ்பிரேஷன். இப்பல்லாம் ஒன்லி ஒரிஜினல்தான். ஆனா, உங்க மணி சார்... அவரோட படத்துல இருந்தே சீன்ஸையும் ஃப்ரேம்ஸையும் அவரே உருவிடுறாரே அதுக்கு என்ன சொல்ற?”
மணி மீது கை வைத்தால் ப்ரேம் பம்மிவிடுவான் என்பது பார்த்தாவின் நம்பிக்கை. ஆனால், அது நடக்கவில்லை.
‘நாயகன்’, ‘தேவர் மகன்’ ரெண்டும் ‘காட் ஃபாதர்’, ‘ரோஷமான்’ல இருந்து ‘விருமாண்டி’... இதையெல்லாம்தானே இன்ஸ்பிரரேஷன்ஸுன்னு சொல்லித் தேத்திக்கிற? ஆனால், உங்க ஆண்டவரோட லிஸ்ட் ரொம்ப பெருசு தல!” - ப்ரேம் விடுவதாக இல்லை. தேநீர் குடித்தபடியே காப்பி பட்டியல் போட்டான்!
“ ‘எனக்குள் ஒருவன்’, ‘ராஜபார்வை’, ‘சதிலீலாவதி’, ‘குணா’, ‘அவ்வைசண்முகி’, ‘தெனாலி’... அய்யோ, யோசிக்கமாலே லிஸ்ட் நீளுதே... நெட்ல கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செஞ்சா ஒரு சினிமா லைப்ரரியே வைக்கலாம்.”
நக்கலான சிரித்த ப்ரேமுக்கு பக்க வாத்தியம் வாசித்த ப்ரியா, “ஆமா, கமலுக்கு ராபின் வில்லியம்ஸ் படங்களை மட்டுமல்ல; ராபின் வில்லியம்ஸ் நடிப்பைகூட ரொம்ப ஆழமா கவனிப்பாருன்னு நினைக்கிறேன். ஆனா, என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான் நிரூபிச்சிடுவாரு. ‘மிசஸ் டவுட் ஃபயர்’ல ராபின் வில்லியம்ஸ் லேடி இல்லைன்னு அந்தக் குழந்தை கண்டுபிடிக்கிற இடம் செம்மயா இருக்கும். ‘ஷி இஸ் ஹி... ஹி இஷ் ஷி...’, ஆனா ‘அவ்வை சண்முகி’யில அது ரொம்ப மொக்கையா இருக்கும்” என்றாள்.
“உங்களுக்கெல்லாம் நக்கலா இருக்கு. பாரதி சொன்னதை ஃபாலோ பண்றவங்களோட அருமை இப்போதைக்கு உங்களுக்குப் புரியாது!” என்று பகீர் கருத்து ஒன்றை முன்வைத்தான் பார்த்தா.
அதிர்ச்சியில் உறைந்த மேனகா, “கொஞ்சம் டீட்டெய்லா சொல்லேன் பார்த்தா!” என்றாள் ஆர்வத்துடன்.
“பாரதி என்ன சொல்லியிருக்கார்?”
‘...பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்...’
இது இலக்கியத்துக்கு மட்டுமில்லை. சினிமாவுக்கும் பொருந்தும். இன்டர்நெட், ஃபிலிம் ஃபெஸ்டிவல், டிவிடி, ராக்கர்ஸ், டாரன்ட் இல்லாத காலகட்டத்துல நம்ம நாட்டு மக்களுக்கு வெளிநாடுகளில் வெளியான நல்ல படங்களை நம்ம மொழியில பெயர்த்து நேரடியா தந்ததுக்கு நீங்க கொடுக்குற பட்டம்தான் காப்பியா?
சரிப்பா, அப்போதைக்கு என்ன ரூல்ஸ், புரொசீஜர்ஸ் தெரியல. இப்பல்லாம் அதிகாரபூர்வமாதானே நல்ல படங்களை நமக்குப் பெயர்த்து தர்றாரு. ‘தூங்காவனம்’ பாக்கலையா நீங்க?”
அப்போது குறுக்கிட்ட ஜிப்ஸி, “கடுப்பேத்தாத பார்த்தா! ‘ஸ்லீப்லெஸ் நைட்’டுன்ற பிரெஞ்ச் படத்தோட அதிகாரபூர்வ உரிமை வாங்கி ஃப்ரேம் பை ஃப்ரேம் அப்படியே எடுத்த படம்தான் ‘தூங்காவனம்’ ஒத்துக்குறேன். ஆனா, டைட்டில் கார்டுல ‘ஸ்லீப்லெஸ் நைட்’ ஸ்பெல்லிங்கைப் பார்க்குறதுக்குள்ளவே ஒரு கண்சிமிட்டும் நேரத்துக்குள்ள போட்டு தூக்குறது எல்லாம் ஓவரு” என்றான்.
“அதுகூடப் பரவாயில்லப்பா. ஓசில சுட்டுக்காம துட்டு கொடுத்து வாங்கிக்கிட்டாங்கன்னு வெச்சுப்போம். ஆனா, சம்பந்தமே இல்லாம கடைசி சீன்ல கமலும் த்ரிஷாவும் ஹீரோயிஸ பில்டப் காட்டுனதைத்தான் என்னால சகிச்சிக்கவே முடியல” என்று ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தான் மூர்த்தி.
எப்படிப் பந்து போட்டாலும் பவுண்டரி விளாசுகிறார்களே என வருத்தமுற்றான் பார்த்தா. அப்போது கவிதா உள்ளே புகுந்தது அவனுக்குச் சற்றே ஆறுதல் தந்தது.
“உங்களுக்கு எல்லாம் காப்பி என்பதற்கும், எடுத்தாள்வது என்பதற்கும் வித்தியாசமே தெரியல.”
“இவனுங்களுக்கு விளங்குற மாதிரி நீ சொல்லு கவிதா” எனப் பெருமூச்சு விட்டான் பார்த்தா.
“அன்பே சிவம் மாதிரியான படங்கள் எல்லாமே எடுத்தாளப்பட்ட வகை. அது எல்லா ஊர் இலக்கியத்திலும் சினிமாவிலும் உண்டு. கமல் ஹாசனோட எத்தனையோ படங்கள், காட்சிகள், திரைமொழிகள் பலரால எடுத்தாளப்பட்டிருக்கே. இவ்வளவு ஏன்... ‘ஆளவந்தான்’ படத்துல வர்ற அசையும் காமிக்ஸ் மாதிரியான கிராஃபிக்ஸ் சீன்களைப் பார்த்துட்டு, கொடூரமான வன்முறையை மட்டுப்படுத்திக் காட்டுறதுக்காக அதே திரை உத்தியைத் தன்னோட ‘கில் பில்’ சீரிஸ்ல பயன்படுத்தி இருந்ததை டாரன்டீனோவே சொல்லியிருக்கார்னு நியூஸ் படிச்சிருக்கேன். அப்போ அதையும் காப்பின்னு சொல்லலாமே. முதல்ல காப்பிக்கும் எடுத்தாள்றதுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சிக்கணும்” என்று கேன்டீனிலேயே விரிவுரையாற்றினாள் கவிதா.
“பார்த்தாவுக்குக் கவிதா சப்போர்ட்டா? உனக்குள்ள தூங்கிட்டுருக்க கமல் ஹாசன் பக்தர் வெளியே வந்தாச்சா?” என்று ப்ரேம் கலாய்த்தான்.
அசராத கவிதா, “இதோ பாரு, இப்போதைய நிலைமையை விட்ருவோம். நமக்கு சினிமாவுல நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துருக்கிற நம்ம லெஜெண்ட்ஸ் பாலசந்தரும் பாலு மகேந்திராவும் ஒரு படத்தை எடுத்தாள்றதைப் பத்தியும், காப்பி அடிக்குறதைப் பத்தியும்கூட சொல்லிக் கொடுத்திருக்காங்க. அங்கிருந்துதான் தமிழ் சினிமாவின் ‘காப்பி’யங்கள் பத்தி பேசத் தொடங்கணும். ச்சும்மா, கமல் ஹாசன் மட்டும்தான் ‘காப்பி’ய நாயகன்ற ரேஞ்சுல பேசி குறை சொல்லியே மேதை ஆகலாம்னு உளறக் கூடாது...” என்று நீட்டினாள்.
காப்பி அடிக்கிறதுக்கும் பாலச்சந்தர் - பாலு மகேந்திராவுக்கும் என்ன சம்பந்தம்?
எல்லோர் மனதிலும் எழுந்தக் கேள்விக்கு நிதானமாக விளக்கத் தொடங்கினாள் கவிதா.
“சத்யஜித் ரேயைவிட எனக்கு ரொம்ப பிடிச்ச பெங்கால் டைரக்டர் ரித்விக் கட்டக். அவர் 1960-ல் இயக்கி வெளிவந்த படம் ‘மேக தக்க தாரா’. மேகங்கள் மறைத்த நட்சத்திரம்னு அந்த டைட்டிலுக்கு அர்த்தம்னு நினைக்கிறேன். அந்தப் படத்தை எடுத்தாண்டு மேற்கொள்ளப்பட்ட காப்பிதான் பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’. இங்க காப்பி என்பதும் நிகழ்த்தப்பட்டிருக்கும். எடுத்தாளுதல் என்பதும் நடந்திருக்கும். ஒரு படத்தை எப்படி எடுத்தாளணும் - தேவையான இடத்துல காப்பி அடிக்கணும்னு இந்த ஒரு படத்தை வெச்சு கத்துக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் ‘மேக தக்க தாரா’ எனும் அற்புதமான படத்தோட மிக மலிவான வெர்ஷன்தான் ‘அவள் ஒரு தொடர்கதை.’
ஒரு படத்தைக் காப்பி அடிக்கும்போதோ அல்லது எடுத்தாளும்போதே அந்தப் படத்தின் கதைக்கும் திரைக்கதைக்கும் மதிப்பு குறையாம பாத்துக்கணுன்றது மிகக் குறைந்தபட்ச நேர்மை. அது ‘அவள் ஒரு தொடர்கதை’யில் துளியும் ஃபாலோ பண்ணல. ஆனால், அந்த நேர்மை கமல் ஹாசன்கிட்ட நிறையவே இருக்கும். அவர் கதையையும் கதாபாத்திரங்களையும் சீர்குலைக்க மாட்டார். கொஞ்சம் ஹீரோயிஸம் கூட்ட ட்ரை பண்ணுவாரே தவிர ரொம்ப மோசமா அணுக மாட்டார்.”
“சரி, கமல் ஒரு பக்கம் இருக்கட்டும். நீ ‘அவள் ஒரு தொடர்கதை’மேட்டரைக் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லு” என்றாள் கீர்த்தி.
கவிதா இந்த சினிமா உலகத்துக்கு ஏதோ சொல்ல வருகிறாள் என்கிற ரீதியில், அவளை உற்று நோக்கிக்கொண்டிருந்தனர் எல்லோரும்.
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago