கேரளத்தைச் சார்ந்த மரபிசை நிபுணர் ஹரி நாராயணனின் கருத்தின்படி இசை வியாபாரத்திற்குத் தொழில்நுட்பம் தேவை, ஆனால் இசைக்கு அது அறவே தேவையில்லை. அப்படியென்றால் இசைக் கருவிகளின் அளவைகள் ஒவ்வொன்றும் கனக் கச்சிதமாக இருப்பது எப்படி? இசையின் அடிப்படை உருவாக்கத்திலேயே ஆழ்ந்த தொழில்நுட்பம் கலந்திருக்கிறது.
ஆனால் அந்தத் தொழில்நுட்பம் வளர்ந்து பூதாகாரமாகி இன்று இசையையே இல்லாமல் செய்யும் நிலைமைக்கு வந்தது எப்படியென்றுதான் சிந்திக்க வேண்டும்.
ஆரம்பத்தில் பாடகர்கள் மட்டுமே நடிகர்களாக விளங்கிய இந்திய சினிமாவில் புதிதாக வந்த ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ராய்சந்த் பொரால் எனும் வங்க - இந்தி இசையமைப்பாளர் முதன்முதலாகப் பின்னணிப் பாடல் எனும் கலையை 1935-ல் தூப் சாவோன் (வெயில் நிழல்) எனும் படத்தில் அறிமுகம் செய்தார்.
ஆனால் அந்த உத்தியோ, அதன் தொழில்நுட்பமோ அப்போது பிரபலமடையவில்லை. காரணம் பாடக நடிகர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும்.
பாடக நட்சத்திரங்களின் சகாப்தம்
கே.எல். சைகால், பங்கஜ் மல்லிக், கே.சி.டே, கனான் தேவி, நூர்ஜஹான், சுரய்யா போன்ற சிறந்த இசைக் கலைஞர்கள் அனைவரும் நடிகர்களாகப் புகழ்பெற்றவர்கள். தமிழில் சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், சி.எஸ். ஜெயராமன் போன்றோர் அப்படிப் புகழ்பெற்றவர்கள்.
1940களின் கடைசியில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி எனும் படத்தில் தமிழ்த் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகராக திருச்சி லோகநாதன் அறிமுகமானார். ராஜகுமாரிக்குப் பின்னர் வந்த மந்திரிகுமாரி வழியாக அவர் ஒரு உச்ச நட்சத்திரப் பாடகரானார். தமிழில் பின்னணிப் பாடக நட்சத்திரங்களின் காலம் ஆரம்பித்தது.
ஒலித் தொழில்நுட்பம் வெவ்வேறு திசைகளில் இசையைக் கொண்டுசென்றது. ஒலிவாங்கிக்கு ஏற்ற குரல்கள் மட்டுமே (Mic voice) முன்நிறுத்தப்பட்டன. முறையான ஒலித்தடுப் பான்கள் பொருத்தப்பட்ட ஒலிப்பதிவுக் கூடங்களில் பின்னணிப் பாடகர்கள் இரவுபகலாகப் பாடினார்கள்.
முதலில் ஒரு ஒலிவாங்கியும் ஒரே ஒரு ஒலித்தடமும்! பின்னர் பாடகனுக்கு ஒன்று, இசைக் கலைஞர்களுக்கு ஒன்று என இரண்டு ஒலிவாங்கிகளும் ஒலித்தடங்களும் வந்தன.
நமது திரையிசையின் பொற்காலத்தின் ஏராளமான பாடல்கள் பதிவுசெய்யப்பட்டது இந்தத் தொழில்நுட்பத்தில்! பின்னர் ஒலிவாங்கிகளின் எண்ணிக்கையும் ஒலித்தடங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போனது. பின்னணிப் பாடகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது.
நாயக வழிபாட்டால் மறுக்கப்பட்ட குரல்
வீர சாகச நாயகர்களாகவும் கடவுளர்களாகவும் ஏழைப் பங்காளர்களாகவும் ‘நடித்து’ நாயக நடிகர்கள் மக்களின் ஆராதனை மூர்த்திகளானார்கள். அவர்களின் குரலுக்கும் நடிப்பு முறைக்கும் ஏற்பப் பாடும் பின்னணிப் பாடகர்களை மட்டுமே மக்களும் அந்தந்த நடிகர்களும் விரும்பினர்.
இந்தியாவின் முக்கியமான பின்னணிப் பாடகர்களாக வலம்வந்த முஹம்மத் ரஃபி, கிஷோர் குமார், சி.எஸ். ஜெயராமன், டி.எம். சௌந்தர ராஜன், ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீநிவாஸ், யேசுதாஸ், மலேசியா வாசுதேவன் போன்றவர்கள், நடிகர்களின் பாணிகளுக்கு ஏற்பப் பாடிக்கொண்டே அரிதான பாடகர்களாகவும் திகழ்ந்தனர்.
பின்னணிப் பாடல்முறை வந்த பின்னர் பிரபலமான நடிகர்களில் வலுவான பாடும் திறன் கொண்டி ருந்த திலீப் குமார், வைஜயந்தி மாலா (இந்தி), ராஜ்குமார் (கன்னடம்) போன்ற நடிகர்கள் தங்களைப் பாடகர்களாக முன்வைக்க வில்லை. ராஜ்குமார் தனக்காக பி.பி. ஸ்ரீநிவாஸ் மட்டும்தான் பாட வேண்டு மென்றுதான் முதலில் வலியுறுத்தினார். ஆனால் பின்னர் அவருடைய பாடல்களை அவரே பாட நேர்ந்தது. நடிகரென்பதை விட அரிதான பாடகர் ராஜ்குமார்.
கசப்பான இரண்டு காரணங்கள்
ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் அதன் உச்சங்களை எட்டிய 2000த்துக்குப் பின்னர் நட்சத்திர நடிகர்கள் எந்தத் தயக்கமுமின்றிப் பாட ஆரம்பித்தனர். இந்தியில் பின்னணி பாடாத நடிகர்களே இல்லை என்றாகிவிட்டது. மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி என ஏறத்தாழ அனைவருமே இன்று பாடகர்கள்! தமிழில் தனுஷ், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், சித்தார்த், பரத் என அனைவரும் பாடகர்களாகிவிட்டனர். இதற்கான காரணங்கள் என்ன?
முதல் காரணம் தொழில்நுட்பம். இரண்டாவது காரணம் ஏ.ஆர். ரஹ்மான்! எல்லாவற்றிற்கும் மேலே மக்களுக்கு நடிகர்களின் மேலிருக்கும் பெரும் மோகம்! பிரபலப் பின்னணிப் பாடகர்கள் தனது பாடல்களைப் பாடும்போது அவற்றில் புதுமை இருக்காது என்ற கருத்தைக் கொண்டவரைப் போல் ஏ.ஆர். ரஹ்மான் எண்ணற்ற புதுக் குரல்களை இங்கு கொண்டுவந்தார். அவர்களில் பெரும்பாலானோர் சராசரிப் பாடகர்கள். வித்தியாசமான, விசித்திரமான குரல்தான் அவர்களில் பலரையும் பாடகர்களாக்கியது. நவீன ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை நன்கு அறிந்த ரஹ்மான், அதை ஆழமாகப் பயன்படுத்தித் தனது பாடல்களை அழகாக அமைத்தார். ஆனால் அதே பாடகனோ பாடகியோ வேறு இசையமைப்பாளர்களுக்குப் பாடும்போது அவர்களின் சாயம் வெளுத்தது.
பேசினாலே பாடலாக மாற்றலாம்!
ரஹ்மானின் ஒரே பாடலில் பல குரல்கள் பாடியிருக்கும். ஆனால் திரையில் ஒரே நடிகன் பாடுவதாக இருக்கும் அப்பாடல் காட்சி! இது எதையுமே மக்கள் பெரிதாகக் கவனிக்கவில்லை. தொலைக்காட்சிகளும் உலகை ஒரு பேரலையாக ஆக்ரமித்த கணினியும் இணையமும் சேர்ந்து மனிதர்களை மூளைச் சலவை செய்து அவர்களை நுட்பங்களைக் கவனிக்கத் தெரியாதவர்களாக்கியது. பெரும்பாலான பாடல்கள் வெறுமனே வந்துபோயின.
ஒலிவாங்கிகளும் ஒலித்தடங்களில் இசைப்பதிவு செய்யும் தொழில்நுட்பமும் ஒன்றாக வளர்ந்துவந்தவை. ஆனால் இன்று ஒலிப்பதிவுக் கூடங்களில் பழைய காலம்போல் ஒரு ஒலிவாங்கி மட்டுமே போதும் என்ற நிலைமை திரும்பி வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஒலித்தடங்கள் மட்டுமே கணினியில் விரவிக் கிடக்கின்றன. ஒரு சுரம்கூடப் பாடத் தெரியாதவர்களேயே பாடகர்களாக்குகிறது இந்தக் காலகட்டத்தின் தொழில்நுட்பம். பேசினாலே போதும். அதை ஒரு பாடலாக்கிவிடலாம்!
பேச்சை ஒவ்வொரு இசைச் சுரமாக மாற்றி, தாளத்திற்குள் பிடித்துவைத்து, குரலைச் செம்மைப்படுத்தி, சுருதி சேர்த்து ஒரு பாடலை உருவாக்குவது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. இசையமைப்பாளருக்கு இசையின் இலக்கணமும் ஆட்டோ டியூன், மேலோடைன், வேவ்ஸ் டியூன் போன்ற ‘இசைச் சமையல்’ மென்பொருட்களின் செய்முறைகளும் தெரிந்திருக்க வேண்டும். அதைத் தெரிந்தவர்களைக் கூலிக்கு அமர்த்துவதிலும் சிரமமேதுமில்லை.
செவிடாகிப்போன ரசனை
சிறப்பாகப் பாடும் பின்னணிப் பாடகர்கள் இனிமேல் எதற்கு? நுட்பங்களற்ற ரசிகன் எதையும் கூர்ந்து கேட்பதில்லை. அவனுக்கு எதாவது ஒன்று கேட்டால் போதும். விசித்திரமாக இருந்தால் அவன் அதை கவனிப்பான். இல்லையென்றால் அக்கணமே அதை மறந்துவிட்டு வேறு ஏதோ ஒன்றுக்குத் திரும்புவான்.
ரசனை இப்படியிருக்கிறது! மறுபுறம் தொழில்நுட்ப உதவியுடன் யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலைமை! குளியலறையில் ஓரளவிற்கு நன்றாகவே பாடும் நாங்கள் ஏன் பாடக் கூடாது என்ற கேள்வி இந்தக் காலத்தின் நடிகர்களுக்கு வந்ததில் ஆச்சரியம் என்ன? பாடலில் இரண்டு நிமிடம் கேட்கும் பாடகனின் குரலைவிடத் திரைப்படத்தில் இரண்டு மணிநேரம் கேட்கும் நடிகனின் குரல் ரசிகனுக்குப் பிடித்துப்போய்விடுகிறது. தங்களை மகிழ்விக்க அந்த நடிகன் பாடி ஆடும்போது அப்பாடலும் அதே குரலிலேயே கேட்பது அவனுக்குக் கிளர்ச்சியைத் தருகிறது.
கடந்த ஒரு நூறாண்டு காலமாக இந்தியாவில் பொதுமக்களுக்கு இருந்த ஒரே இசை திரையிசை. அது நமது வாழ்வோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று திரையிசைக்கும் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
ஒரு சுரம்கூட சுருதியில் பாடத் தெரியாதவர்களின் பாடல்களை இன்று சுருதி சுத்தமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்! தொழில்நுட்பம் அனைத்தையும் சாத்தியமாக்கித் தருவதாலும் எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்க்கும் குணத்தாலும் ‘எதுவுமே சம்மதம்’ என்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நமது திரையிசையின் பொற்காலம் என்பது பின்னணிப் பாடகர்கள் ஒளிர்ந்து விளங்கிய காலம். திரை இசையை அதன் உன்னதங்களில் பேணிக் காத்தவன் அந்தப் பின்னணிப் பாடகன். அவன் இன்று அழிந்துவிட்டான்.
சிறந்த பாடகனின் மரணம் என்பது திரையிசையின் மரணம். திரைப் பாடல் கலை இன்று வலிமையேயில்லாமல் கணினிச் சுவர்களுக் குள்ளே தரைமட்டமாகக் கிடக்கிறது.
‘தி இந்து தீபாவளி மலர் - 2014’-ல் இடம்பெற்றுள்ள கட்டுரையின் ஒரு பகுதி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago