திரை விமர்சனம்: எனக்குள் ஒருவன்

By இந்து டாக்கீஸ் குழு

திரையரங்கில் வேலை பார்ப்பவர் விக் னேஷ் (சித்தார்த்). துரை டாக்கீஸ் திரையரங்கை நடத்தும் துரையண்ணனின் (ஆடுகளம் நரேன்) அன்புக்குப் பாத்திரமான விக்னேஷ் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார். இந்நிலையில் அவருக்கு லூசியா என்னும் மாத்திரை கிடைக்கிறது. உறக்கத்துடன் விருப்பமான கனவையும் தரும் அதிசய மாத்திரை அது. கனவில் பிரபலமான நடிகர் விக்னேஷாக வலம் வருகிறார். தியேட்டரில் வேலை பார்க்கும் விக்னேஷுக்குக் காதல் வருகிறது. அந்தக் காதலில் பிரச்சினை வரும்போது அதே காதல் கனவில் கைகூடுகிறது.

இப்படிப் பல விதங்களில் ஒன்றுபோலவும் சில நுட்பமான வித்தியாசங்களுட னும் பயணிக்கும் இந்தக் கனவு நனவுப் பயணங்கள் ஒரு கட்டத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இந்த மாய விளையாட்டை திரைக்கதையாக்கி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இன்னொருவரைப் பற்றி யோசிக்கவைக்கிறார் இயக்குநர் பிரசாத் ராமர்.

கனவு நனவென சம்பவங்கள் மாறி மாறி நிகழும் படம் மாறுபட்ட கதைக் களத்தைக் கொண்டுள்ளது ‘எனக்குள் ஒருவன்’. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘லூசியா’ படத்தின் மறு ஆக்கம் என்ற போதும் தமிழ்ப் படமாகவே உள்ளது. நனவுலகில் நடிகர் விக்கி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அது தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கியை அவருடைய காதலியே கொலை செய்ய முயல்கிறார். எது கனவு? யார் நிஜம்? ஏன் இந்தக் கொலை முயற்சி? காதலியின் பிரச்சினை என்ன? நாயகனின் உண்மையான பிரச்சினை என்ன? இறந்து போவது யார்? இப்படிக் குழப்பமான பல விஷயங்கள் எந்தக் குழப்பமுமின்றி அழகான திரைக்கதையாக்கப்பட்டுள்ளன.

முக்கியமான எல்லாக் கதாபாத்திரங்களும் இரு வேடங்களில் வருகின்றன. படமும் வண்ணத்திலும் கறுப்பு வெள்ளையிலும் மாறி மாறி காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இரு வேறு உலகம் என்றபோதிலும் இரண்டையும் அழகாக அடுக்கியுள்ளனர். இரு இணை கோடுகளாகப் பயணிக்கும் திரைக்கதையில் எந்தக் கோடு நிஜம் எது கனவு என்னும் கேள்வி எழுப்பப்படுவது புதிய சிந்தனை. இரு கதைகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் தொடக்கத்தில் ஆர்வமூட்டினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பூட்டுகின்றன. ஆனால் வித்தியாசத்தின் மெல்லிய திரை இரு கதைகளினூடே படர ஆரம்பிக்கும்போது திரைக்கதை மீண்டும் உயிர்பெறுகிறது.

இணை கோடாகச் செல்லும் இரு கதைகளுக்கு நடுவில் புலனாய்வு என்னும் இன்னொரு இழையையும் பின்னியிருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் புத்திசாலித்தனத்தை விடவும் தற்செயல் திருப்பங்கள் புலனாய்வை முன்னெடுத்துச் செல்வது புலனாய்வை மந்தமாக்குகிறது.

இரு கதைகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆக வேண்டும் என்பதும் அதுவரையில் பார்வையாளர்களின் குழப்பம் அல்லது எதிர்பார்ப்பு தக்கவைக்கப்பட வேண்டும் என்பதும் இதுபோன்ற படங்களில் கட்டாயம். அதை இயக்குநர் ஓரளவு சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். ஆனால் புலனாய்வுக் கட்டத்தில் பங்கு பெறும் நாயகனின் காதலி சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அந்தக் குழப்பத்தைத் தக்கவைப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள செயற்கையான திணிப்பாகவே உள்ளது.

கனவில் மூழ்குவதற்கான காரணம் ஒரு செய்தியாக நம்மைக் கவர்கிறது. ஆனால் அது திரை அனுபவமாக உருப் பெறவில்லை. இதற்கான சவாலை இயக்குநர் எதிர்கொள்ளவே இல்லை.

சாதாரண மனிதன் என்றால் அவன் முகத்தில் கரியைப் பூச வேண்டுமா? சாதாரணமானவர்களும் படிக்காதவர்களும் அப்பாவிகளும் கறுப்பாகத்தான் இருக்க வேண்டுமா?

சித்தார்த் இரு வேடங்களிலும் தன்னால் இயன்ற அளவு மாறுபாடான நடிப்பைத் தந்துள்ளார். இரு வேறு ஆளுமைகளைச் சித்தரிப்பதில் தேறிவிடுகிறார். ஆனால் படம் அவரைச் சுற்றியே நகரும் நிலையில் அவரது பாத்திரங்கள் மேலும் அழுத்தமானதாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதது அலுப்பையே தருகிறது.

அறிமுக நடிகை தீபா சன்னிதியும் இரு கதைகளிலும் நன்கு வித்தியாசம் காட்டியுள்ளார். நரேன், ஜான் விஜய், அஜய் ரத்னம், யோக் ஜப்பி ஆகியோர் படத்துக்கு வலிமை சேர்க்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இசை படத்தை உயிர்ப்பான ஒன்றாக மாற்றவில்லை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. பாதிப் படம் கறுப்பு வெள்ளையில் நகர்ந்தாலும் எந்தக் காட்சியிலும் பழைய நெடி அடிக்கவே இல்லை.

தியேட்டர்கள் நவீன மால்களாகும் காலத்தில் சினிமாவையே நேசிக்கும் துரையண்ணன் போன்ற ஒருவர் யதார்த்தத்துக்குப் பலியாக மறுத்து உயிரை விடுகிறார். எல்லோரும் கனவு காண்கிறோம். வேறு ஆளாக மாற வேண்டும் என்னும் விருப்பமும் இருக்கிறது. இப்படிச் சமகாலச் சிக்கலைப் பேசும் படம், கனவு நிஜமாகிறது என்ற கற்பனையைத் தரும் படம், மிகவும் உயிரோட்டமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் அப்படி அமையவில்லை. என்றாலும் வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இப்படத்தை வரவேற்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்