ஹைதர் அலசல்: பனித் திரையில் படரும் குருதி

By அரவிந்தன்

மண மேடையில் அம்மா. பக்கத்தில் சித்தப்பா. மகன் அவரைக் கொலை வெறியுடன் நெருங்குகிறான். அவர் பாசப் புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி உன்னுடைய உள்நோக்கம் தெரியும், உன் பையில் என்ன வைத்திருக்கிறாய் என்று தெரியும் என்கிறார். அவன் அதிர்ச்சியில் உறைகிறான். துரோகம் இழைக்கப்பட்ட உணர்வுடன் தன் காதலியைப் பார்க்கிறான். அவள் அதே உணர்வுடன் தன் தந்தையைப் பார்க்கிறாள். அவர் தலை குனிகிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் மொத்தத் துயரத்தின் அடிப்படையையும் இந்தக் காட்சி சொல்லிவிடுகிறது. துரோகம். துரோகங்களின் நிழலில் வாழும் மனிதர்கள். இந்துக்கள், முஸ்லிம்கள், உரிமைக்காகப் போராடுவோர், ராணுவத்தினர், பிரிவினை கோருவோர் என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமாகத் துரோகத்துக்கு ஆளாவதாக உணரும் அவலம்.

யார் யாருக்குத் துரோகம் செய்கிறார், ஏன் செய்கிறார் என்பதெல்லாம் தெரியாது. துரோகம் இழைக்கப்படுகிறதா அல்லது இழைக்கப்படுவதாகக் கற்பித்துக்கொள்ளப்படுகிறதா என்பதும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால் துரோகம் உணரப்படுகிறது. அதன் சகல வேதனைகளுடன்.

புதைக்கப்பட்ட அமைதி

வேதனையும் அச்சமும் பள்ளத்தாக்கு முழுவதும் பனி போலப் படர்ந்திருக்கின்றன. பனி படர்ந்த வெண்ணிற நிலப்பரப்பில் வெண்ணிற மலைகளின் பின்னணியில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அவள் முகத்தில் கண்ணீர் வற்றிவிட்டது. தகப்பனைப் பறிகொடுத்த சோகம். காதலனைப் பிரிந்த துயரம். அவள் வாயிலிருந்து மெல்ல ஒரு பாடல் பிறக்கிறது. பின்னணி இசை எதுவும் இன்றிச் சோகத்தை இழைக்கும் குரல் அந்தச் சூழலுக்கு அசாத்தியமான கனம் சேர்க்கிறது.

அவள் தகப்பன் சாவுக்குக் காரணமானவனின் அம்மா அங்கே வருகிறாள். அவள் அண்மையில் தன் கணவனைப் பறிகொடுத்தவள். மகனைப் பிரிந்தவள். இரண்டு பெண்களின் சோகத்தின் ஆதாரமும் ஒன்றுதான். பனி பொழியும் எழிலார்ந்த பள்ளத்தாக்கின் அமைதியை ஈவிரக்கமின்றிக் கிழித்த வன்முறையின் உக்கிரம்தான் அது. இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் தேற்ற வகையின்றிக் கையறு நிலையில் உறைந்து நிற்கிறார்கள். பின்னணியில் மலைச் சாரலில் மிதக்கும் குரல் நம் இதயத்தைப் பிழிகிறது.

விஷால் பரத்வாஜின் ‘ஹைதர்’ காஷ்மீர் பிரச்சினையின் ஆதார சுருதியைத் தொட்டுப் பேசுகிறது. வலுவான குரலில், வெறுப்பின்றிப் பேசுகிறது. அனைவரது தரப்புகளில் நின்றும் பேசுகிறது. யாரையும் குற்றம்சாட்டவில்லை. எதையும் நியாயப்படுத்தவில்லை. உண்மைகளைப் பேசுகிறது.

சகல தரப்புகளின் உண்மைகளையும் பேசுகிறது. ராணுவத்தின் தரப்பு, பிரிவினை அல்லது சுதந்திரம் கோருபவர்களின் தரப்பு, சந்தேகத்தின் நிழலிலும் மரணத்தின் விளிம்பிலும் வாழும் முஸ்லிம் மக்களின் தரப்பு, வாழ முடியாமல் வெளியேறிவிட்ட பண்டிட்டுகளின் தரப்பு, இந்திய அரசின் தரப்பு, பாகிஸ்தானியரின் தரப்பு.

ஹைதர் எனும் யதார்த்த சாட்சி

ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’ நாடகத்தின் பின்புலம்தான் ஹைதரின் கதை மையம். காணாமல்போன தந்தையைத் தேடி வரும் ஒரு இளைஞன் தன் சித்தப்பாவும் அம்மாவும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து உடைந்துபோகிறான். சித்தப்பாதான் தன் தந்தையின் மறைவுக்குக் காரணம் என்பதையும் அறிகிறான். அதை அறியாத அந்தப் பெண், மைத்துனனின் காதலில் கரைகிறாள்.

மகன் மீதும் அன்பைப் பொழிகிறாள். அம்மாவின் மீது அபரிமிதமான அன்பு கொண்ட அவனுக்கு அம்மாவின் மீதும் சந்தேகம் வருகிறது. தாயின் கண்ணீர் போடும் வேலியை மீறி அவன் தன் தந்தையைத் தேடிச் செல்கிறான். அந்தப் பயணத்தில் அவன் தன் காதலியையும் விட்டு விலகுகிறான். எல்லையைத் தாண்டிச் செல்கிறான். தீவிரவாதிகளோடு சேருகிறான்.

காஷ்மீரில் வசிக்கும் சாதாரண முஸ்லிம்களின் வாழ்வு கண்காணிப்பின் நிழலிலிருந்து மரணத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுவதைப் பார்க்கிறான். இந்த நிலையை வெவ்வேறு தரப்பினரும் தத்தமது நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதையும் பார்க்கிறான். துயரங்களையும் துரோகங்களையும் தீவிரவாதத்தையும் உருவாக்கும் அரசியலைக் கண்டு வெதும்பும் அவன் தன் தகப்பனின் சாவுக்குப் பழிவாங்கத் துடிக்கிறான்.

இந்த இளைஞனின் அலைதலினூடே பள்ளத்தாக்கின் குரூர யதார்த்தத்தைச் சித்திரிக்கிறார் விஷால். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, தணிக்கைத் துறையின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அரசையும் ராணுவத்தையும் விமர்சிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.

அந்த விமர்சனம் ஒருதலைப்பட்சமானதாகிவிடக்கூடிய அபாயத்தை அவரது பன்முக அணுகுமுறை இயல்பாகவே தவிர்த்துவிடுகிறது. சந்தேகத்தின் நிழலில் வாழும் முஸ்லிம்களுக்கு வலைவிரித்து அவர்களை வன்முறையாளர்களாக்கி நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் சக்திகளையும் விஷால் அம்பலப்படுத்துகிறார்.

காஷ்மீர் முஸ்லிம்களை ஒற்றைப் பரிமாணச் சித்திரிப்புக்குள் அடக்கிவிட முடியாது என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிறார். கோடம்பாக்கத்தில் உட்கார்ந்தபடி காஷ்மீர் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் அவதார புருஷர்கள் வெட்கப்பட வேண்டிய அளவுக்கு யதார்த்தத்தை அப்பட்டமாகவும் வலுவாகவும் சித்திரிக்கிறார்.

கவிதை எழுதும் கைகளில் துப்பாக்கி

கதையின் திருப்பங்களிலும் நடனக் காட்சி சேர்க்கப்பட்டுள்ள விதத்திலும் வெகுஜன சினிமாவுக்கான தன்மைகள் இருந்தாலும் யதார்த்தத்தின் வலிமையாலும் காட்சிப்படுத்தலின் அழகினாலும் இந்தக் குறைகள் பெரிதாக உறுத்தவில்லை. ‘சாக்லேட் பையன்’ என்னும் படிமம் சுமந்த ஷாஹித் கபூரை இப்படிப்பட்ட ஒரு வேடத்தில் நடிக்கவைக்க முடியும் என்னும் நம்பிக்கை ஒரு படைப்பாளிக்கே உரியது.

அந்த நம்பிக்கையைச் செவ்வனே நிறைவேற்றுகிறார் ஷாஹித். பரிதவிப்பின் வேதனையையும் பழிவாங்கும் வெறியையும் தாங்கிய அந்தக் கண்களை மறக்கவே முடியாது. காதலுக்கும் பாசத்துக்கும் இடையில் தவிக்கும் பேரிளம் பெண்ணின் அவஸ்தையைத் தபுவின் கண்களும் முகபாவங்களும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. இழப்பைக் குரூர யதார்த்தத்தின் விளைவு என எடுத்துக் கொண்டு அதைத் தாண்டி வந்து தன் மகன் இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என அம்மா விரும்புகிறாள்.

அம்மாவிடம் கொள்ளை அன்பு இருந்தும் அப்பாவின் இழப்பை மகனால் ஜீரணிக்க முடியவில்லை. சூழலின் யதார்த்தம் தன் அப்பாவைப் போல் பல அப்பாக்களைச் சுவடு தெரியாமல் மறைத்துவிடக்கூடியது என்பதை உணரும்போது அவனால் பிறகு ஒருபோதும் சகஜ நிலைக்கு வர இயலவில்லை. கவிதை எழுதும் கைகள் துப்பாக்கியைத் தூக்குகின்றன. இது இவனது வாழ்வு மட்டுமல்ல. காஷ்மீரின் கால் நூற்றாண்டுக் கால வாழ்வு.

வீட்டின் இடிபாடுகளுக்கிடையில் ஹைதர் தன் அப்பாவின் காலணியை எடுத்து பாலீஷ் போடுகிறான். பனி படர்ந்த பூமியில் மனிதர்கள் தங்கள் சவக் குழிகளை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். நிலத்தைத் தோண்டினால் மண்டை ஓடு வருகிறது.

பனித் திரையில் குருதி படர்கிறது. கிழிந்த காலணிகள், சவக் குழிகள், மண்டை ஓடுகள். குருதிக் கறை படர்ந்த பனித் திரள். அழகு கொட்டிக் கிடக்கும் சொர்க்க பூமியின் இன்றைய முகம் இவைதான். வெகுஜன சினிமாவின் எல்லைகளுக்குள் நின்றபடி இந்த யதார்த்தத்தைக் கலாபூர்வமாகக் காட்டியிருக்கும் விஷால் பரத்வாஜ் இந்திய சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தியிருக்கிறார்.

பழிவாங்குவதால் எந்தப் பிரச்சினையும் தீர்ந்துவிடாது என்னும் செய்தியை இத்தனை கொலைகளுக்கு மத்தியிலும் முத்தாய்ப்பாக வைத்திருப்பது அதுவரையிலும் காட்டப்பட்ட யதார்த்தத்தோடு ஒட்டவில்லை என்றாலும் எதிர்காலத்துக்கான நம்பிக்கைக் கீற்றாக அச்செய்தி மிளிர்கிறது. முகத்தில் ரத்தம் கொட்டும் இளைஞனின் கொலைவெறி மிகுந்த கண்களில் மின்னும் மன்னிப்பு உணர்வின் மாயக் கணத்தில் படம் நிறைகிறது. கனத்த மனதுடன் பார்வையாளர்கள் அமைதியாகத் திரையரங்கை விட்டுச் செல்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்