திரையரங்குகளின் பிடி யார் கையில்?

By ஆர்.சி.ஜெயந்தன்

மனக் குறைகளைச் சொல்ல மக்கள் ஆலயங்களுக்குச் செல்கிறார்கள். அதே மக்கள் மனக் கவலைகளை மறக்க, தங்கள் வேறுபாடுகளைக் கடந்து திரையங்குகளில் கூடுகிறார்கள். திரையரங்கும் கோவில்தான் என்று ஒரு சினிமா நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் திரையரங்கத்தைக் கதைக்களமாக்கி ‘ஹவுஸ்ஃபுல்’ என்ற படத்தை இயக்கிய நடிகர் இயக்குனர் பார்த்திபன். அப்படிப்பட்ட திரையரங்குகளின் நிலை, இன்று பரிதாபகரமானது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் தரும் தரும் துல்லியமான புள்ளிவிவரங்களின்படி கடந்த 2005ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் 2436 திரையரங்கள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டது. தற்போது தமிழகம் முழுவதும் இயங்கும் திரையரங்குகள் 950 மட்டும்தான். மற்ற திரையரங்குகள் எங்கே?

பெரும்பாலான திரையரங்குகள் இடைக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன. இன்னும் பல திருமண மண்டபங்களாக திருத்தி அமைக்கப்பட்டுவிட்டன. இன்னும் சில குடோன்களாக மாறிவிட்டதுதான் இன்னும் வேதனை. 50 முதல் 30 ஆண்டுகள் வரை மக்களை மகிழ்வித்து வந்த திரையங்குகளை நடத்தி வந்தவர்கள் இவற்றை ஏன் மூடிவிட்டு செல்ல வேண்டும்? “மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரு டஜன் ஹீரோக்களும், இயக்குனர்களும் மட்டும்தான் இதற்கு காரணம்” என்கிறார் திரையங்க உரிமையாளர் சங்க இணைச் செயலாளாலரான திருச்சி ஸ்ரீதர்.

ஆனால் இதற்கு நேர்மாறாகத் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். கேண்டீன் மற்றும் பார்க்கிங் கட்டணம் அதிகமாகிவிட்டது. திரையரங்குகளை சரியாகப் பராமரிப்பதில்லை. சின்ன பட்ஜெட் படங்களை இரண்டு நாட்கள்கூட தியேட்டரில் விட்டுவைப்பதில்லை. திரையங்குகளை அவற்றின் உரிமையாளர்களே நடத்தாமல், குத்தகைக்கு விட்டுவிட்டதால் பலர் பல நூறு தியேட்டர்களை பினாமிகள் பெயரில் வளைத்துக்கொண்டு, தங்களுக்கு வியாபாரம் படியும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர் கொடுக்கிறார்கள் என்பது உட்பட அடுக்கடுக்காகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் காரணம் சினிமாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் முன்னணி நட்சத்திரங்களுக்கும், அவர்கள் கேட்காமலேயே கொட்டிக் கொடுத்து, சினிமா தயாரிப்பை லாபமற்ற தொழிலாக மாற்றிய தயாரிப்பாளர்களும்தான் முதன்மைக் காரணம் என்கிறார்.

வியாபாரத்தின் எல்லை

“தமிழ்நாட்டில் திரைப்பட விநியோகம் என்பது சென்னை, வடவார்க்காடு, தென்னார்க்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய என்.எஸ்.சி., கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஒன்பது பகுதிகள்தான். தமிழகம் முழுவதும் இருக்கும் இன்றைய பார்வையாளர்களில் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும்தான் இன்று பெரும்பாலும் படம் பார்க்க வருகிறார்கள். இவர்களும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, விக்ரம் , விஷால், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட ஒரு டஜன் முன்னனிக் கதாநாயர்கள் நடித்த படங்களையே விரும்பிப் பார்க்க வருகிறார்கள். அதேபோல சில முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் நாங்களும் இவர்கள் நடித்த படங்களை திரையிட்டால் தவிர தியேட்டரை நடத்த முடியாது. இதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களை ‘எம்.ஜி’ எனப்படும் மினிமம் கியாரண்டி’ என்ற அடிப்படையிலும் , ‘ பிளைன் டேர்ம்ஸ்’ எனப்படும் சதவிகித அடிப்படையில், வசூலை தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளரும் பிரித்துக் கொள்ளும் முறையிலும் படங்களை திரையிட்டு வருகிறோம். இதில் ‘டேர்ம்ஸ்’ அடிப்படையில் படங்களை வாங்கி வெளியிடும்போது எங்களுக்குத் தலைவலி குறைவுதான். ஆனால் எம்.ஜி முறையில் படங்களை வாங்கித் திரையிட்டதன் மூலம் , தங்கள் சொத்துக்களை இழந்த திரையரங்க உரிமையாளர்கள்தான் அதிகம். இன்னும் சில திரையரங்க உரிமையாளர்கள், அந்த ஹீரோ படத்தில் எடுத்துவிடலாம், இந்த ஹீரோ படத்தில் எடுத்துவிடலாம் என்று நம்பி ஏமாந்து தற்கொலையே செய்து கொண்டிருக்கிறார்கள்.” என்று அதிர்ச்சி தருகிறார் ஸ்ரீதர். அப்படி என்னதான் ஆபத்து இருக்கிறது இந்த எம்.ஜி.யில்?

எம்.ஜி. முறையால் இறங்கிய திரைகள்

“ஒரு மாஸ் ஹீரோவின் படம் ரிலீஸ் ஆகும்போது, ஒரு தியேட்டர் ஒரு குறிப்பிட்ட தொகையை பிளாட் ரேட்டாகக் கொடுத்துப் படத்தைத் திரையிட்டுக்கொள்ளலாம். இந்தத் தொகையை ஒட்டுமொத்தமாக படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தினமே கொடுத்துவிட வேண்டும். 12 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு தியேட்டர் உரிமையாளர் ஒரு புதுப்படத்தை வாங்குகிறார் என்றால், அதை தியேட்டர் வசூல் மூலம் எடுத்துக்கொள்ள வேண்டிய மொத்த ரிஸ்க்கும் அவரையே சேரும். எம்.ஜியில் ஒப்புக்கொண்டு கொடுத்த தொகை வசூல் ஆகாவிட்டால், தயாரிப்பாளரிடம் திரும்பக் கேட்க முடியாது. மாஸ் ஹீரோ படம் என்றாலும் படம் சொதப்பலாக இருந்தால், திரையரங்க உரிமையளர்களின் நிலை அதோ கதிதான். இதனால்தான் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் அரசு நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டணத்துக்கு நாங்கள் டிக்கெட் விற்றுப் போட்ட முதலை எடுக்க வேண்டியிருக்கிறது. எம்.ஜி. முறையில் தயாரிப்பாளரின் ரிஸ்க் முழுவதையும் தியேட்டர் உரிமையாளர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் மாஸ் படங்கள் கைவிடும்போது இந்த பிழைப்பே வேண்டாம் என்றுதான் திரையரங்களை குத்தகைக்கு விட்டுவிட்டுப் பலர் ஒதுங்கிவிட்டார்கள். இன்னும் பலர் திரையரங்கு இருந்தால்தான இத்தனை கடனும் தலைவலியும் என்று, திரையரங்கை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்றுவிட்டு வேறு நிம்மதியான தொழில்களுக்கு மாறிவிட்டார்கள்” என்கிறார் சென்னை புறநகரில் திரையரங்கு நடத்தும் உரிமையாளர் ஒருவர்.

ஊதியமே ஒழித்துக் கட்டியது!

“தயாரிப்பாளர்கள் மாஸ் ஹீரோக்களுக்குக் கட்டுபாடற்ற ஊதியத்தை அள்ளிக்கொடுத்துத் தயாரிப்புச் செலவைத் தாறுமாறாக உயர்த்தியதுதான் திரையரகுங்கள் மூடப்பட்டதற்கு எல்லாம் மூல காரணம்” என்று சுட்டிக்காட்டுகிறார் திருச்சி ஸ்ரீதர். “பெரிய ஹீரோக்கள் ஒரு படத்துக்கு குறைந்த பட்சம் 15 கோடி சம்பளம் வாங்குகிறார்கள். பெரிய கதாநாயகிகள் என்றால் 1 கோடி முதல் 1.5 கோடி வரை ஊதியம் வாங்குகிறார்கள். அதேபோல ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி சம்பளம் வாங்குகள். மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு தேவையற்ற பிரமாண்டங்களுக்காகவும் கோடிகளை கொட்டி செலவு செய்கிறார்கள். இறுதியில் படத்தின் மொத்த தயாரிப்புச் செலவும் கூட்டப்பட்டு, அது எம்.ஜி. ஆக அப்படியே தியேட்டர்களின் தலையில் வைக்கப்படுகிறது. படம் தோல்வியைத் தழுவும்போதும், படம் வெளியான மூன்றாவது நாளே திடுட்டு வீடியோ வந்துவிடுவதாலும் எம்.ஜி.எடுத்தவர்களின் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது. இதனால்தான் ஒரே படத்துக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆண்டுக்கு ஒரு படம் நடிப்பதை விட ஒரு படத்துக்கு 5 கோடி மட்டும் வாங்கிக் கொண்டு ஆண்டுக்கு மூன்று படம் நடித்துக் கொடுத்தால், தியேட்டர்களுக்கு ஆண்டு முழுவதும் படம் கிடைக்கும், அதேபோல ஹீரோக்களும் ஆண்டு முழுவதும் பிஸியாக இருப்பார்கள். ஹீரோக்களைவிட அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குனர்களும் இதையே பின்பற்றினால் தியேட்டர்களில் கேண்டீன் வியாபாரம், பார்க்கிங் கட்டணம் இவற்றை நம்பி பிழைக்கும் அவல நிலை திரையரங்களை நடத்துபவர்களுக்கு இருக்காது. வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டுமானால், திரையரங்க உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளே , தியேட்டர்களை நடத்த முடியாமல் குத்தகைக்கு விட்டு விட்டார்கள்” என்கிறார் ஸ்ரீதார்.

நூற்றுக்கணக்கான திரையரங்களை ஒருவரே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதாக சொல்வதில் உண்மை இல்லை என்று சொல்லும் ஸ்ரீதர், “ டேர்ம்ஸ் அடிப்படையில் படங்களை வெளியிட ஒப்புக்கொண்டு முன்வரும் மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு நீ நான் என்று போட்டி போட்டு திரையரங்களை கொடுக்க முன்வருவார்கள். அப்படித்தான் தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தீபாவளிக்கு அதிக திரைப்படங்களைக் கைப்பற்றியிருக்கிறது.” என்கிறார்.

இவற்றுக்கு அப்பால், அதிக விளம்பரமில்லாமல் வெளியாகும் புதுப்படங்களுக்கு 15 முதல் 20 பார்வையாளர்கள் வருகிறார்கள் . இப்படி ஆள் இல்லாமல் இரண்டு நாள் சமாளிக்கலாம். அதன் பிறகும் கூட்டம் வரவில்லை என்றால், ஒரு காட்சிக்கான மின்சாரச் செலவையும், தியேட்டர் ஊழியர்களின் ஊதியத்தையும் நினைத்துப் பாருங்கள். இதனால்தான் மாநகராட்சிகளுக்கு ஒரு டிக்கட் கட்டணத்தையும் மற்ற சிறு நகரங்களுக்கு ஒரு டிக்கெட் கட்டணத்தையும் நாங்கள் அரசிடம் கொரி வருகிறோம். ஆனால் எங்கள் குரல் இன்னும் அரசின் காதில் விழவில்லை. மேலும் பெரும்பாலான சின்னப் படங்கள் குப்பைகளாக வெளியாகின்றன. இந்தப் படங்களில் பணத்தையும்,நேரத்தையும் செலவழிப்பதை விட, கைபேசியில் படம்பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் என்று திரையரங்க உரிமையாளர்களின் தரப்பை முன்வைக்கிறார் ஸ்ரீதர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

30 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்