கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு ஆளுமையின் வரலாறு என்பது தனிநபர் ஆவணப்படுத்தலாக இல்லாமல் அவர் காலத்துச் சமூக வரலாறாக இருக்க வேண்டும். அது இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டுவதாகவும் தன்னம்பிக்கை தருவதாகவும் அமைய வேண்டும். இந்த நோக்கத்துடன் ஆவணப்படங்களை நான் எடுத்துவருகிறேன்” என்கிறார், ஆவணப்பட இயக்குநர், முனைவர் பு.சாரோன். ‘பாட்டாளி படைப்பாளியான வரலாறு’ என்ற பெயரில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த ஆவணப்படத்தைத் தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் அயல்நாடுகளிலும் வெளியிட்டுக் கவனம் பெற்றவர் இவர். தற்போது எம்.ஆர்.ராதா, ஜீவா ஆகியோரது வாழ்க்கையை ஆவணப் படமாக்கும் வேலைகளில் கவனம் செலுத்திவருகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…
நீங்கள் மேற்கொண்டுவரும் இந்த ஆவணப்பட முயற்சிகளின் நோக்கம் என்ன?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த என் முதல் ஆவணப்படத்தை எடுத்து அதைத் திரையிட்டபோதுதான் ஆவணப்படத்தின் தாக்கம் எனக்குத் தெரிந்தது. ‘‘29 வயதில் இப்படி ஒரு மனிதரா? இவரது வரலாறு என் தலைமுறைக்கு மிகப் பெரிய சொத்து!’’ என்று பலரும் சொன்னார்கள். அப்போதுதான் கடந்த கால வரலாற்றின் தேவையும் முக்கியத்துவமும் இன்றைய தலைமுறைக்கு இன்றியமையாதது என்பது எனக்குப் புரிந்தது. அதுதான் அடுத்தடுத்து ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா, தோழர் ஜீவா போன்றவர்களின் வாழ்க்கையைத் தேட வைத்திருக்கிறது.
இளைய தலைமுறையினரிடம் இதுபோன்ற ஆவணப்படங்களைச் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்க முடிகிறதா?
முழுமையாக அது சாத்திய மாகியுள்ளது என்று சொல்ல முடியாது. காரணம் இங்கே முழுநீளப் படங்களின் செல்வாக்கு அந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது. அதிலிருந்து மீட்டு வரலாற்றின் பக்கம் இளைஞர்களைத் திருப்பும் தொடக்கப் புள்ளியிலிருந்து பயணிக்கிறேன். இந்தத் தலைமுறைக்குத் தொழில்நுட்பம் வழியாக எல்லாம் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. கலை, இலக்கிய வாழ்வனுபவங்கள்தான் பஞ்சமாகிவிட்டன. அதனால்தான் உயர் கல்வி படிக்கும் மாணவர்களால் சிறு தோல்வியைக்கூடத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இப்படியான மனிதர்களின் வாழ்க்கையை உள்வாங்கும்போது தடைகளை அனுபவமாக மாற்றிக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வருகிறது. அந்த நோக்கத்தில்தான் தேர்ந்த ஆளுமைகளின் வரலாறுகளை ஆவணப்படுத்த முயன்றுகொண்டிருக்கிறேன்.
நீங்கள் தேடுகிற ஆளுமைகள் எல்லோருமே 100 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை சார்ந்த தரவுகளுக்குப் புத்தகங்கள் மட்டும் போதுமா? தரவுகளை வேறு எந்த வகையில் பெறுகிறீர்கள்?
புத்தகங்கள் முக்கியமான ஆதாரம். அது தவிர, குறிப்பிட்ட ஆளுமையோடு நேரடியாகப் பழகிய அனுபவங்களிலிருந்தும், அவர்கள் எழுத்தில் பதிவுசெய்துவிட்டுப் போயிருக்கிற குறிப்புகளிலிருந்தும், அந்தக் காலத்து சமூக நிகழ்வுகளிலிருந்தும் தரவுகளை எடுக்கிறேன். மேலும், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், பேட்டிகள், ஆய்வுகள் போன்றவற்றையும் உரசிப்பார்த்து அவற்றை முழுமைப்படுத்துகிறேன்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அடுத்து ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
மூன்று ஆண்டுகள் மட்டும் பாடல்கள் எழுதி, திரையிசை வரலாற்றில் தனித்துவமான அடையாளமாக மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரது வரலாறு எப்படித் தமிழ்ச் சமூகத்துக்கு இன்றியமையாததோ, அப்படியே நடிகவேளின் வரலாற்றையும் பார்க்கிறேன். நாடக மேடையில் கலையை ஆயுதமாக்கிய மிக முக்கியமான கலைஞர் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா. பகுத்தறிவுக்கு எதிரான புராண, இதிகாசக் கதைகளே தமிழ் நாடக வெளிகளின் உள்ளடக்கமாக இருந்த காலத்தில் முதன்முதலில் மக்களின் அன்றாட வாழ்வைப் பேசும் களமாக நாடக மேடையை மாற்றி வாழ்நாள் முழுக்க எதிர் நீச்சல் போட்டவர் நடிகவேள். அவரின் அனுபவங்கள் வேறு வகையான வாழ்வியல் பின்னணி கொண்டவை. கலை, கலைக்காகவே இருந்தால் காலத்தால் நிற்காது. கலை மக்களுக்காக இருந்தால் மாத்திரமே காலம் கடந்து வாழும் என்ற நம்பிக்கையைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவில் பறைசாற்றியவர். எனவே, அவரது ஆவணப்படமும் காலத்தின் தேவை.
இதில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
நடிகவேள், ஜீவா போன்றவர்களோடு பழகிய மனிதர்களைக் கண்டுபிடிப்பதுதான் முதல் சவால். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவின் இருப்பிடமாகச் சென்னை இருந்தது. தமிழ்க் கலைஞர்களோடு சேர்ந்து ராதாவை அறிந்த தென்னிந்திய மொழி சினிமா கலைஞர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்ய வேண்டுமென்று தேடிக்கொண்டிருக்கிறேன். நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் கலைஞர்களையோ ஒப்பனைக்காரரையோ புகைப்படக் கலைஞர்களையோ, எம்.ஆர்.ராதாவின் படங்களில் வேறு வகையில் பங்களிப்பு செய்தவர்களையோ, பார்த்தவர்களையோ கண்டுபிடித்துவிட வேண்டும். அடையாளம் காணப்படாத பல மூத்த கலைஞர்கள் எங்கெங்கோ இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரையேனும் நடிகவேளின் ஆவணப்படத்தின் வழியே அடையாளம் காட்ட வேண்டும். அப்படியானவர்களை அறிந்தவர்கள் எங்கிருந்தாலும் கூப்பிட்டுவிட மாட்டார்களா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்.
எம்.ஆர். ராதா, ஜீவா ஆகிய இருவரின் ஆவணப்படங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன?
எம்.ஆர்.ராதாவின் ஆவணப்படத்தைப் பொறுத்தவரையில் படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு வேலைக்கான ஆயத்த நிலையில் இருக்கிறேன். நடிகவேள் தொடர்பாக இன்னும் ஒரு சில குறிப்புகள் மட்டுமே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் ராதாவின் ஆவணப்படம் வெளிவரும். ஒரு ஆவணப்படத்தை முடித்து அடுத்து ஆவணப்படத்தைத் தொடங்கும் கால அவகாசம் இல்லை. ஆகவே, ராதாவைப் பதிவு செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜீவாவின் வாழ்க்கையையும், இன்னும் சமூகத்துக்குத் தீப்பந்தங்களாக இருக்கும் வேறு சில மனிதர்களின் நினைவுகளையும் பதிவுசெய்துவருகிறேன்.
களப்பணியின்போது கிடைத்த மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?
நடிகவேளின் நாடக வாழ்க்கையோடு தொடர்புடைய கலைஞர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது. காரணம், நாடகம் வழக்கொழிந்துபோன பிறகு கலைஞர்கள் ஏதோ ஒரு வேலைகளில் பிழைப்புக்காகப் பிடிமானம் இல்லாமல் உதிரிகளாகக் கிடக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நடிகவேளின் நாடகக் குழுவில் பாடகராகவும், நடிகராகவும் இருந்த 87 வயது பெரியவர் ஒருவரைச் சென்னையில் சந்தித்தேன். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் பாடகராகவும், நடிகராகவும் இருந்தவர். எழுத்துகளாக இல்லாத பல்வேறு நாடகங்களில் பயன்படுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடவைத்துப் பதிவு செய்தது மறக்க முடியாத அனுபவம்.
இன்றைய சமூகத்தில் ஆவணப்படங்களின் தேவை என்ன?
ஆவணப்படுத்துதல் இன்றியமையாதது என்பதைச் சமீபத்தில் மறைந்த தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பு அலுவலர் ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தனின் மறைவு எனக்கு உணர்த்தியது. தமிழ் சினிமாவின் பன்முக வரலாற்றை வாசிக்காமலேயே அவரோடு சேர்த்துப் புதைத்துவிட்டோம். ஒரு நூறு ஆண்டு கால சினிமாவின் பன்முக வரலாற்றுத் தொகுப்பு அவர். அவரை நாம் இழந்துவிட்டோம். இனியாவது நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் நாளைய தலைமுறைக்கு முன்னால் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago