திரைப்பார்வை: பிங்க்- முடியாது என்பதற்கு முடியாது என்றுதான் அர்த்தம்!

By என்.கெளரி

ஒரு பெண் முடியாது என்று சொன்னால் அதற்கு முடியாது என்றுதான் அர்த்தம் என்பதை இந்தியச் சமூகத்தின் மனசாட்சிக்குப் புரியும்படி சொல்லியிருக்கிறது ‘பிங்க்’ திரைப்படம். ஷூஜித் சர்க்கார் தயாரிப்பில் அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கியிருக்கும் இந்தப் படம் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் சமகால இந்திய ஆணாதிக்கச் சிந்தனையைச் சம்மட்டியால் அடித்திருக்கிறது.

மீனல் அரோரா (தப்ஸி பன்னூ), ஃபலக் அலி( கீர்தி குல்ஹாரி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா டரியாங்) மூவரும் தெற்கு டெல்லியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள். ஒருநாள் இரவு, சுரஜ்குண்டில் நடக்கும் ‘ராக் கான்சர்ட்’ நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்கிறார்கள். அங்கே நடக்கும் அசம்பாவிதத்தில் ராஜ்வீர் சிங் (அங்கத் பேடி) என்பவன் தலையில் மீனல் ஒரு மது பாட்டிலை போட்டு உடைக்கிறாள்.

மீனல் ஏன் அப்படிச் செய்தாள் என்பதிலிருந்துதான் படம் தொடங்குகிறது. அடிபட்ட இளைஞனின் அரசியல், பண பலம் இந்தப் பெண்களின் வாழ்வைச் சிக்கலாக்குகிறது. ராஜ்வீரின் நண்பன் அங்கித் மல்ஹோத்ராவின் (விஜய் வர்மா) தலையீடும் பிரச்சினையை இன்னும் தீவிரமாக்குகிறது. காவல் துறை அவர்கள் மீது கொலை முயற்சி, பாலியல் தொழில் ஆகிய குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறது. இவர்களுக்கு உதவ முன்வருகிறார் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் தீபக் சேகல் (அமிதாப் பச்சன்). ஆனால், அவர் ‘பைபோலார் டிஸார்டரால்’ பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளி. அவரால் இந்த மூன்று பெண்களுக்கும் நீதியைப் பெற்றுத்தர முடிந்ததா?

துணிச்சல் மிக்க காட்சிகள்

இந்த ஆண்டின் முக்கியமான இந்திப் படங்களில் ஒன்று ‘பிங்க். ரித்தேஷ் ஷாவின் திரைக்கதையும் வசனமும் இந்தப் படத்தைச் சிறந்த படமாக ஆக்கியிருக்கின்றன. முதல் பாதி த்ரில்லராகவும், இரண்டாம் பாதி நீதிமன்ற நாடகமாகவும் எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் திரையில் விரிகின்றன.

இரவில் வீட்டுக்கு வரும் நேரம், அணியும் ஆடை, சிரிப்பு, மது அருந்தும் பழக்கம், தனிப்பட்ட பாலியல் வாழ்க்கை போன்ற அம்சங்கள் இந்தச் சமகால சமூகத்தில் ஒரு பெண்ணை நடத்தை கெட்டவளாக எப்படி வரையறுக்கின்றன என்பதை வலியுடன் ‘பிங்க்’ விளக்கியிருக்கிறது. ஒரு பெண்ணின் நடத்தையை இந்த மாதிரி எந்த அம்சத்தையும் வைத்து வரையறுக்க முடியாது என்பதைப் பல துணிச்சலான காட்சிகளில் விளக்கியிருக்கிறார் இயக்குநர் அனிருத்தா ராய். “ஆர் யூ ஏ வெர்ஜின்?” என்று தொடங்கும் நீதிமன்ற விசாரணைக் காட்சி, ஒரு பெண் முடியாது என்று சொன்னால் அதற்கு முடியாது என்றே அர்த்தம் என்பதை விளக்கும் இறுதி வாதம் போன்றவை உதாரணங்கள்.

இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை இந்தப் படம் நேர்மையுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மற்ற மாநிலங்களில் வாழும் பெண்களைவிட கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆண்ட்ரியா கதாபாத்திரம் உணர்த்துகிறது.

தீபக்கின் மனைவி சாராவின் (மம்தா சங்கர்) கதாபாத்திரம் துயரத்தை வெளிப்படுத்தும் வழக்கமான ஒரு அம்சமாகவே படத்தில் வருகிறது. அத்துடன், மூன்று பெண்களின் பெற்றோர்கள் பார்வையை வெளிப்படுத்தும் அழுத்தமான காட்சிகள் இல்லை.

தேர்ச்சி மிக்க நடிப்பு

தப்ஸி, கீர்தி குல்ஹாரி, ஆண்ட்ரியா மூன்று பேரும் படத்தில் நடித்திருப்பதாகவே தெரியவில்லை. அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் பெண்களாகவே அவர்கள் தோன்றுகிறார்கள். குறிப்பாக, தப்ஸியும், கீர்த்தியும் நீதிமன்றக் காட்சிகளில் தனித்து நிற்கிறார்கள். அமிதாப் பச்சன், சோகம் கலந்த, கம்பீரமான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திருத்திமான் சாட்டர்ஜி (நீதிபதி), விஜய் வர்மா, அங்கத் பேடி போன்றோரின் இயல்பான நடிப்பும் படத்தை வலிமையானதாக மாற்றுகிறது. அரசு தரப்பு வழக்கறிஞராக வரும் பீயூஷ் மிஸ்ராவின் நடிப்பு அந்த அளவுக்கு எடுபடவில்லை.

‘காரி காரி’ பாடலும், அபிக் முக்கோபாத்யாயின் கேமராவும் திரைக்கதை ஒரே சீரான பாதையில் பயணிக்கச் செய்திருக்கின்றன.

ஒரு பெண் பாதிக்கப்படும்போது அவளுடைய உறவுகள், அலுவலகம், அக்கம்பக்கத்தினர் என எல்லோரும் அவளுக்குத் துணை நிற்காமல் அவளையே குற்றவாளி ஆக்குவதுதான் இங்கேயிருக்கும் நிதர்சனம். இந்த நிதர்சனத்தை நம் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கும்படி பதிவுசெய்திருக்கிறது ‘பிங்க்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்