‘‘ஒரு கிராமத்துல கிருஷ்ணனும் அர்ஜுனனும் இருந்தா என்ன நடக்கும், அதுவும் இந்த 2017-ல இருந்தா எப்படி இருக்கும்? அந்த ரெண்டு பேரும் சந்திக்கிற குருஷேத்திர போர்தான் இந்தப் ‘படைவீரன்’ ’’என்கிறார், அறிமுக இயக்குநர் தனா. மணிரத்னம் உதவியாளர். அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
முதல் படத்தில் ஒரு இயக்குநராக நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் தயாரிப்பையும் கையில் எடுத்திருக்கிறீர்களே?
மணி சார்கிட்ட இருந்து கற்றுக்கொண்ட விஷயம்தான் இது. படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் வேணும்னா அது எவ்வளவு விலை இருக்கணும், என்ன மாடல், எப்போ வேணும்கிற வரைக்கும் உதவியாளர்களாக இருக்குற நாங்கதான் முடிவு செய்வோம். அதுல ஏதாவது தப்புன்னா எங்ககிட்டதான் கேட்பார். கிரியேட்டிவாக அவர்கிட்ட நிறைய கத்துக்கலாம். அதேநேரம் ஒவ்வொரு விஷயத்தையும் தயாரிப்பாளராகவும் யோசிக்கக் கற்றுக்கொடுப்பார். அதுதான் எனக்கு இந்தப் படத்துக்கு பெரிய உதவியாக இருந்தது. இயக்குநரா ரொம்ப எளிதா உணர்ந்தேன். ஆனா தயாரிப்பாளராக நிறைய தவறுகள் செய்தே கற்றுக்கொள்ள முடிந்தது. இன்னொரு படம் பண்ணும்போது இதில் செய்த தவறுகளைச் செய்யாமல் இருப்பதற்கான அனுபவங்கள் இந்தப் படத்தில் எனக்குக் கிடைச்சுதுன்னு சொல்லனும்.
மணி ரத்னத்தின் உதவியாளர் எனும்போது பட வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருக்குமே?
பெரிய இயக்குநர்களிடம் பணிபுரிந்தால் படம் பண்ணுவது எளிது என்கிற ட்ரெண்ட் இன்றைக்கு இல்ல. கடந்த ரெண்டு வருஷத்துல சில பேர்கிட்டதான் கதை சொல்ற சூழல் அமைஞ்சது. எங்கேபோனாலும் ஏற்கெனவே ஓகே பண்ணின கதையே எக்கச்சக்கமாக இருக்குன்னு பதில் வரும். அதனாலதான் சொந்தத் தயாரிப்பில் இறங்கினேன். முதல்ல, ‘கண்ணைக் கட்டிக்கொள்ளாதே’ என்ற கதை எடுக்கலாம்ன்னு முடிவுசெய்து வேலையில இறங்கினேன். எல்லாம் ரெடிங்கிற சமயத்துல மணி சார்கிட்ட கதையச் சொல்லிக் கருத்துக் கேட்டேன்.
“இந்தக் கதை டெவலப் பண்ணின மாதிரி இருக்கு. ரியலா என்ன செய்ய முடியுதோ அதை மட்டும் செய்!”ன்னு சொன்னார். அப்படி உருவானதுதான் இந்தப் படம்.
படத்தோட பாடல்கள், ட்ரெயிலரை பார்க்கும்போது உங்கள் குருவின் சாயல் எதுவுமில்லையே?
சின்ன வயசுல இருந்தே விதவிதமா படங்களைப் பார்க்குறோம். அதெல்லாம் நமக்கு ஊக்கம் தருமே தவிர நமக்கான ஒரிஜினாலிட்டிய நாமதான் உருவாக்கணும். மணி சார் எப்படி காட்சிப்படுத்துறார்னு யோசிச்சு அதேமாதிரி பண்ணினால் கண்டிப்பா தப்பு பண்ணுவோம். அவரோட 30 வருஷ அனுபவத்தை எப்படி ஒரு நிமிஷத்துல நம்ம பண்ண முடியும்? ஒரு விஷயத்தை எப்படி பண்ணணும்கிறதை மட்டும் பெரியவங்கக்கிட்ட இருந்து கத்துக்கிட்டா போதும். நம்மளோட கிரியேடிவிடிதான் நமக்குக் கை கொடுக்கும்.
பாரதிராஜா, விஜய் யேசுதாஸ் கூட்டணியே வித்தியாசமாக இருக்கிறதே?
எட்டு தெருக்கள் மட்டுமே இருக்குற ஒரு சின்ன ஊர். அந்த ஊர்ல ஏமாற்றுவது, குறும்புத்தனம் செய்றது, ஆக்ரோஷப்படுகிறதுன்னு எல்லாமுமாக கிட்ணன்னு ஒரு பெரியவர் இருக்கார். கதையை இப்படி எழுதி முடித்ததும் நினைவுக்கு வந்தது பாரதிராஜா சார்தான். அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன். கேட்டுட்டு, “டேய்… தம்பி. எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்குப்பா, படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி என்ன ஆக்கிடுவ போலிருக்கே!”ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார். கதையில எல்லாமும் நீங்கதான். சினிமாவுல எல்லா முகத்துலயும் நீங்க வரணும் சார்ன்னு சொன்னேன். படப்பிடிப்புக்கு வந்துட்டார்.
அதேமாதிரி விஜய் யேசுதாஸ் ஊர்ல இருக்குற ஒரு இளைஞரா வர்றார். அந்த கதாபாத்திரத்துக்கு பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாமல் நம்மை மாதிரி ஒருத்தர் வேணும்னு தோணுச்சு. விஜய்கிட்ட கதையைச் சொன்னேன். ‘கலக்குவோம் நண்பா’ன்னு வந்தார். ரெண்டு பேரோட பங்களிப்பும், கதாபாத்திரமும் கவனம் பெறும்.
எழுத்தாளர் ஜெயமோகனின் நட்பு வட்டத்துக்குள் எளிதாக நுழைந்திருக்கிறீர்களே?
ஜெயமோகன் சாரோட நண்பராக இருக்கணும்னா இலக்கியப் பரிச்சயம் இருக்கணும். தொடர்ந்து படிக்கணும். புதிய விஷயங்களைப் பேசணும். நிறைய உள்வாங்கிக்கொள்ளணும். அதெல்லாம் நான் சரியாகச் செய்ததால்தான் கணினித் துறையில வேலை பார்த்துக்கிட்டிருந்த என்னை, ‘நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்!’ன்னு மணி சார்கிட்ட கொண்டுபோய் விட்டார். மணி சார்கிட்ட ஐந்து வருஷம். அப்டேட்டா இல்லைன்னா உடனே வெளியே அனுப்பிடுவார். கதை விவாதம் நடக்குதுன்னா அதுல நாம் என்னவா இருக்கோம்கிறது ரொம்ப முக்கியம். அப்படியில்லைன்னா ஒரு நாள்கூட அவர்கிட்ட வேலை பார்க்க முடியாது.
பட வெளியீடு எப்போ?
பின்னணி இசை உள்பட படத்தின் பெரும்பகுதி வேலைகள் முடிந்துவிட்டன. கிளைமேக்ஸில் ஒரு சண்டைக்காட்சி வைத்திருக்கிறோம். முழுக்க கம்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியோட அதை உருவாக்குறோம். அதுக்கான வேலைகள்தான் கடந்த மூணு மாதங்களாக நடந்துகிட்டுவருது. அந்த வேலைகள் முடிஞ்சதும் ரிலீஸ்தான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago