தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா?

By கோ.தனஞ்ஜெயன்

அண்மையில் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தேன். அதில் தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா என்பது பற்றி பலர் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே தமிழ் சினிமா என்று வெளிவரும் அனைத்துச் சினிமாக்களையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. அவை தமிழ் மொழியில் இருந்தாலும், அவற்றின் நோக்கங்கள் வேறு வேறு. பொதுவாகத் தமிழ் சினிமாவை நான்கு வகைப்படுத்தலாம்.

1. வெகுஜன சினிமா (அல்லது வணிகச் சினிமா):

இத்தகைய சினிமாக்கள் எல்லாத் தரப்பு மக்களையும் குறி வைத்து எடுக்கப்படுபவை. எவ்வாறு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பாடு ஆர்டர் செய்தால் எல்லாப் பதார்த்தங்களுடனும், குழம்புகளுடனும் சாப்பாடு கிடைக்குமோ, அவ்வாறு, எல்லா ரசனைகளும் இத்தகைய படங்களில் தவறாமல் இருக்க வேண்டும் (அடிதடி, காதல், கலகலப்பு, பாடல்கள், நடனம், சென்டிமெண்ட்...). அவ்வாறு இருந்தால்தான், படம் பார்க்க வரும் மக்கள் அத்தகைய படங்களை ரசித்து வெற்றி பெறச் செய்வார்கள் (சமீபத்திய உதாரணங்கள்: எந்திரன், விஸ்வரூபம், துப்பாக்கி, சிங்கம் 2, ஆரம்பம்).

2. யதார்த்த சினிமா:

நாம் பார்த்து அல்லது படித்த வாழ்க்கை அனுபவங்களை, யதார்த்தத்துடனும் மிகையற்ற உணர்ச்சிகளுடனும் அளிப்பவை. யதார்த்தச் சினிமாவில் எல்லாச் சுவைகளும் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஏனெனில், யதார்த்தச் சினிமாவின் நிகழ்வுகள் நம்மை அதனுடன் ஒன்றச் செய்துவிடும். நாம் அந்தக் கதாபாத்திரங்களுடன் வாழத் தொடங்கிவிடுகிறோம். அத்தகைய படங்களில் வெகுஜனச் சினிமாவின் அம்சங்கள் (பாடல்கள் உள்பட) குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டாலும், மக்கள் அப்படங்களை ரசிக்கிறார்கள். சமீபத்தில், எண்ணற்ற யதார்த்தச் சினிமாக்கள் வெற்றி அடைந்து, அவை பெருவாரியான மக்களைக் கவர்ந்ததும் இங்கே நடந்தன. சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், தென்மேற்கு பருவக்காற்று, களவாணி, ஆடுகளம், வழக்கு எண்: 18/9 என பல படங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்).

3. அழகியல் சினிமா (அல்லது கலை அம்சம் கொண்ட சினிமா):

வெகுஜன சினிமா நெருக்கடிக்கு ஆட்படாமல், சமரசத்திற்கு உட்படாமல், தான் சொல்ல வந்த கருத்தை, அழகுடனும், யதார்த்தமாகவும் சொல்ல முயற்சிசெய்யும் படங்கள் இவை. இவை புதிய அறிதலை, புதிய உணர்வு நிலையை உண்டாக்கக்கூடிய படங்கள். இத்தகைய படங்களில், பாடல்கள் பின்னணி ஒலியாக, கதை சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நகைச்சுவை முதலான வெகுஜனச் சினிமாவின் அம்சங்கள் மிகவும் அவசியம் இருந்தால்தான் இத்தகைய படங்களில் இடம்பெறும். மக்களை ஈர்க்க வேண்டும் என்னும் நோக்கத்திற்காக மட்டும் அவை திணிக்கப்படாது. (உதாரணம்: காஞ்சிவரம், நந்தலாலா, பாலை, மதுபானக்கடை, ஆரோஹணம், அழகர்சாமியின் குதிரை...).

4. புதுவகை சினிமா (நியோ-ரியலிஸ்டிக் மற்றும் நியோ-நாய்ர் சினிமா):

எளிய அல்லது சாதாரண மனிதர்களைப் பற்றியும் அவர்களின் போராட்டங்களைப் பற்றியும், எளிமையான கதைகளுடன், புதுமையான முறையில் பல சினிமாக்கள் தற்போது எடுக்கப்பட்டுவருகின்றன. அவைகளை மொத்தமாகப் புதுவகை சினிமாக்கள் என்று குறிப்பிடலாம். இப்படங்களுக்குப் பாடல்களோ, வெகுஜனச் சினிமாவுக்கான தேவைகளோ முக்கியமில்லை. புது மாதிரியான கதையும், கதை சொல்லும் விதமும்தான் இதுபோன்ற படங்களில் மக்களைக் கவர்கின்றன (உதாரணம்: ஆரண்ய காண்டம், நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், மூடர் கூடம் ...).

82 வருடப் பேசும் படப் பயணத்தில், தமிழ் சினிமா, 5,200க்கும் மேலான நேரடித் திரைப்படங்களைச் சந்தித்துள்ளது (டப்பிங் படங்கள் இல்லாமல்). அவற்றில் பாடல்கள் இல்லாமல், சுமார் 35 நேரடிப் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. மீதி அனைத்துமே, 5 முதல் 50 பாடல்கள் கொண்ட படங்கள். பாடல்கள் இல்லாத படங்களில் பத்துக்கும் குறைவான படங்கள் மட்டுமே வெற்றி கண்டுள்ளன (அந்த நாள், பேசும் படம், குருதிப்புனல், மறுபக்கம், வீடு, பசி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சந்தியா ராகம் போன்றவை). இதர படங்கள் மக்களைக் கவரவில்லை.

ஒரு படத்திற்குப் பாடல் அவசியமா இல்லையா என்பதை அப்படத்தின் வகை தீர்மானிக்கிறது. பிரபலமான நடிகர்கள் பங்குபெறும் (அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்படும்) வெகுஜனப் படங்களில் பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும், 1931 முதலே இருந்துவந்துள்ளன. இவை மக்களை மகிழ்வித்துவந்துள்ளன. இனியும் வரும். வெகுஜனப் படம் எடுக்கும் எவரும் அதை மீற முடியாது. அத்தகைய படங்கள் ஃபுல் மீல்ஸ் போன்ற திருப்தியைப் பார்வையாளர்களுக்குத் தராவிட்டால், நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் எனப் பல கலைஞர்களின் பெரும் வெற்றிப் படங்களை எண்ணிப் பாருங்கள். நமக்கு முதலில் நினைவில் வருவது அப்படங்களின் பிரபலமான வெற்றி பாடல்கள்தான். பாடல்கள் இல்லாமல் அத்தகைய வெற்றிப்

படங்களை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் பாடல்கள் மூலம் படத்தின் கதை சொன்னதும், முடிவைச் சொன்னதும் (இரு கோடுகள், அபூர்வ ராகங்கள் மற்றும் பல) இன்னமும் நாம் மனங்களில் பசுமையாக உள்ளன. பாடல்கள் மூலம் தன் கருத்தை மக்களிடம் சொல்லி, அரசியலில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி ஜெயித்த எம்.ஜி.ஆர். நம் மனங்களில் இன்றும் உள்ளார். இன்னும் பல உதாரணங்களைக் கூற முடியும். சாகா வரம் பெற்ற அப்பாடல்களினால் தமிழ் சினிமாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இனி மேலும் ஏற்படாது.

மீதி வகை சினிமாக்களில் குறைந்த அளவு பாடல்கள், பின்னணியில் ஒலித்துக் கதையை முன்னேற்றிச் செல்லப் பயன்படுத்தும் முறை மக்களைக் கவர்ந்துள்ளதால், அது தொடரும். அதனாலும் தமிழ் சினிமாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

டைம்ஸ் இதழ் வெளியிட்ட டைம்ஸ் 100 என்னும் பட்டியலில் உலகச் சினிமா வரிசையில் வைத்துப் பாராட்டப்படும் நாயகன் திரைப்படத்தில் பாடல்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டன. அதேபோலத்தான் கன்னத்தில் முத்தமிட்டால், வெயில், இருவர், பருத்தி வீரன், ஆடுகளம் போன்ற பல படங்களிலும் பயன்படுத்தப்பட்டன. அவை உலக அளவில் பல சினிமா விழாக்களில் பரிசுகள் பெற்றன. பாடல்கள் இருந்த காரணத்தால் அவை எங்கேயும் நிராகரிக்கப்படவில்லை.

இந்திய மக்களுக்காக எடுக்கப்படும் படங்களில், நம் மக்களின் தேவையை மட்டும் மனதில் கொண்டு படம் எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது என் எண்ணம். உலகப் படங்களுக்கு இணையாக எடுக்க வேண்டும் என்று நினைத்து நம் மக்களை உதாசீனம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை.

எந்த வகைப் படமானாலும், சரியான முறையில் பயன்படுத்தப்பட்ட பாடல்களால் ஒரு நல்ல படத்தின் சுவையைக் கெடுக்க முடியாது. அதை அதிகரிக்கத்தான் பாடல்கள் உதவும். ஆனால் தேவை இல்லாமல் திணிக்கப்பட்ட பாடல்கள் அப்படங்களின் சுவையைக் குறைத்துப் படத்தைப் பாதிக்கச் செய்ய முடியும். சரியான எண்ணிக்கையில், சரியான இடத்தில், சரியான முறையில், பாடல்களைப் பயன்படுத்துவதில்தான் பாடல்களின் வெற்றியும் படத்தின் வெற்றியும் உள்ளன.

(கோ. தனஞ்செயன், ஸ்டூடியோஸ் ஆஃ டிஸ்னி-யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தென்னக வணிகப் பிரிவின் தலைவர். இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள், அவரது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே.)

தொடர்புக்கு: dhananjayang@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE