முதல் பாடலிலேயே அசத்தும் பாடகர்கள் இன்று ஏராளம். ஆனால் அதுவே முதலும் கடைசியுமாக முடிந்துவிடுகிறது. அதிரடி ஹிட் பாடல் பாடிய பிறகும் முன்னணி பின்னணி பாடகர்-பாடகி எனச் சொல்ல முடியாதபடி டிராக் சிங்கராகிவிடும் நிலை பலருக்கும் இன்று உள்ளது. அதையும் மீறிச் சிலர் கவனிக்க வைக்கிறார்கள். அப்படியான பாடகிதான் சாஷா திருப்பதி. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து இசை மழையில் நம்மை நனைத்து வரும் இவர் ‘காற்று வெளியிடை’யில் ‘வான்... வருவான்’ எனப் பெரு மழை பொழிந்திருக்கிறார். அவரோடு அலைபேசியில் உரையாடியதிலிருந்து.
25 ஆண்டு கால ரஹ்மான், மணி ரத்னம் கூட்டணியில் முதலில் ‘ஓ கே கண்மணி’, இப்போது ‘காற்று வெளியிடை’யில் பணியாற்றிய அனுபவம்…
‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘தில் ஸே’ (உயிரே) போன்ற படங்களைப் பார்த்துப் பிரமித்து வளர்ந்தவள் நான். சொல்லப்போனால் ‘குரு’ படம் பார்த்த பின்புதான் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து இசையை முழு நேரத் தொழிலாக எடுக்க முடிவெடுத்தேன். ‘ஓ கே கண்மணி’யில் மூன்று பாடல்கள் பாடினேன் என்பதும் காற்று வெளியிடையில் ‘வான்.. வருவான்’ பாடலின் இரண்டு வெர்ஷனும், ‘போலு ரே பப்பிஹரா’ என மூன்று பாடல்கள் பாடினேன் என்பதும் என்னாலேயே நம்ப முடியாதவை.
ரஹ்மான் – மணிரத்னம் இருவரும் இணைந்து உருவாக்கிய படைப்பில் பணிபுரிவது என்பது அலாதியான அனுபவம். நான் கவனித்தவரை அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு அசாத்தியமான புரிதல் உள்ளது. இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் பரஸ்பரமாக ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டமும், கருத்து சங்கமமும் அவர்களுக்கு இடையில் காணப்படும்.
அதிலும் ‘வான்.. வருவான்’ பாடலைத் திரையில் பார்த்தபோது இசைக்கும் காட்சிக்கும் இடையில் நடந்தேறியிருக்கும் அற்புதமான சங்கமத்தைக் கண்டு வியந்தேன்.
டூயட் என்பதைத் தாண்டி இப்போதெல்லாம் ஒரே பாடலில் பல குரல்கள் ஒலிக்கும் போக்கு வந்துவிட்டது. அப்படி இருக்க எடுத்த எடுப்பில் ‘ஓ கே கண்மணி’யில் மூன்று பாடல்களை ரஹ்மான் உங்களுக்குத் தந்தது எப்படி?
முதலில் ‘பறந்து செல்லவா’பாடல் மட்டும்தான் தந்தார். அதில் வரும் சின்னச் சின்னக் குறும்புத்தனமான இசை ஒலிகளைக் கற்பனைசெய்து பார்க்க முடியாத விதத்தில் இசையமைத்துச் சொல்லித் தந்தார். நானும் கார்த்திக்கும் அதை மிகவும் ரசித்துப் பாடினோம். அதைத் தொடர்ந்து இந்துஸ்தானி பாணியில் ‘நானே வருகிறேன்’ பாடுவது சவாலாக அமைந்தது. ‘ஆட்டக்காரா’ பாடியபோது, வெறும் சோதனை முயற்சியாக டிராக் பதிவு செய்கிறார் என நினைத்தேன். பின்பு முழு ஆல்பமும் வெளியானபோது மூன்று பாடல்களில் என்னுடைய பெயர் கண்டு ஆச்சரியத்தில் மூச்சிரைத்துப்போனேன்.
குறுகிய காலத்துக்குள் இந்துஸ்தானி, ஜாஸ்-புளூஸ், கர்நாடகச் சங்கீதம் என எப்படிப் பல விதமான பாணிகளில் சவாலான பாடல்களை ரஹ்மான் உங்களுக்குத் தந்துகொண்டே இருக்கிறார்?
என்னுடைய குரலில் எது சாத்தியம் என்பது எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ரஹ்மானுக்கு அது தெளிவாகத் தெரியும். ரஹ்மானின் ஆச்சரியப்படுத்தும் அம்சங்களில் ஒன்று இது. ‘அச்சம் என்பது மடமையடா’படத்தில் ‘ராசாளி’பாடல் கர்னாடக இசையில் அமைந்திருந்தாலும் என்னிடம் அவர், பஞ்சாப் நாட்டுப்புற இசை வடிவங்களில் ஒன்றான ‘டப்பா’ (Tappa) இசை பாணியில் உருண்டோடும் கோலி குண்டு போலக் குரலைச் சரசரவென அதிவேகமாக உருட்டிப் பாடச் சொன்னார். அப்படிப் பாடியதுதான் ‘நின்னுக்கோரி’ பகுதி.
குரல் வளம், பாடும் திறன் ஆகியவற்றைத் தாண்டி உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதேபோல மராத்தி, வங்காளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் எனப் பன்மொழிகளில் பாடிவருகிறீர்கள். ஸ்ரீநகரில் பிறந்து கனடாவில் வளர்ந்த நீங்கள் இத்தனை மொழிகளைக் கற்றுக்கொண்டு பாடலின் வரிகளையும் புரிந்துகொண்டு பாடுகிறீர்களா?
எனக்கு மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அலாதி பிரியம். பஞ்சாபி, வங்காளம், பார்சி, இத்தாலி, உருது உள்ளிட்ட மொழிகளைத் தானாகப் பயின்றேன். தமிழைப் பொருத்தவரை சிறுவயதிலிருந்து ஒன்று விடாமல் கிட்டத்தட்ட எல்லா ரஹ்மான் ஆல்பங்களையும் கேட்டிருக்கிறேன். அதனால் ஓரளவுக்குத் தமிழ் வார்த்தைகள் தெரியும். மற்றபடி ரஹ்மான் தொடங்கி எனக்குச் சரியான உச்சரிப்பைச் சொல்லித் தந்த பெருமை இசையமைப்பாளர்களையே சேரும்.
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களோடு பணியாற்றிக்கொண்டே சுதந்திரமான இசைக் கலைஞராகவும் இசையமைத்து வருகிறீர்கள். இதெல்லாம் எப்படித் தொடங்கியது?
முதன்முதலில் தமிழ் சினிமாவில் நான் பாடியது ஜி.வி.பிரகாஷ் இசையில். ‘ராஜா ராணி’ படத்தில் ‘ஓடே ஓடே’ பாடல். அதன் பிறகு 2014-ல் ‘காவியத் தலைவன்’ படத்தில் ‘ஏ மிஸ்டர் மைனர்’ பாடலை ரஹ்மான் கொடுத்தார். அதனை அடுத்து, வாய்ப்புகள் தேடி வந்தன. ‘அம்மா கணக்கு’ படத்தில் ‘இந்த வாழ்க்கை’ பாடலை இளையராஜா தந்தார். இமானின் இசையில் ‘சிலுக்கு மரமே’ பாடல் என்னைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
திரைப்படப் பின்னணி பாடகி என்பதைக் கடந்து ரஹ்மானுடன் இணைந்து கனடாவில் TEDX Talks, லண்டனில் O2 Arena ஆகியவற்றிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியது மிகவும் திருப்தி அளித்தது. இதைத் தவிரவும் ஆங்கில இசை ஆல்பம் ஒன்றை இசையமைத்துவருகிறேன். அடுத்து வெளிவரவிருக்கும் ‘திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படங்களிலும் பாடியிருக்கிறேன். மொழியிலும் இசையிலும் என்னென்ன புதிய முயற்சிகள் என்னை எதிர்நோக்கி வரவிருக்கின்றன என்பதை எதிர்த்தபடியே என்னுடைய சொந்த முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago