உழைப்பால் உயர்ந்த சாதனையாளர்களின் ஆட்டோகிராஃப் என்பது வாழும் காலத்திலும் அவர்கள் வாழ்ந்த பிறகும் அரிய பொக்கிஷம். ஆட்டோகிராஃபுடன் அவர்கள் எழுதும் சுருக்கமான வாழ்த்து வாக்கியம் ரத்தினமாக மின்னும். ‘உழைப்பரே உயர்ந்தவர்’ என்று எழுதிக் கையெழுத்திடுவார் எம்.ஜி.ஆர். இப்படி எழுத அவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் உழைப்பால் உயர்ந்த பி. நாகி ரெட்டியார். தமிழ்த் திரையை வளர்த்தெடுத்த ஜாம்பவான்களில் நாகி ரெட்டியாரின் பங்களிப்பும் பங்கேற்பும் கணிசமானவை.
நாகி ரெட்டியாரின் இன்னொரு சிறப்பு அவருடைய தமிழ்ப் பாசம். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், மற்ற தென்னிந்திய மொழிப் பட அதிபர்கள் அனைவரும் தத்தமது மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து போய்விட்டனர். ஆனால் நாகி ரெட்டியார் தமிழராகவே தன்னைக் கருதினார். தமிழராகவே வாழ்ந்தார். ஆந்திர மண்ணில் பிறந்து, ரங்கூனில் குடும்ப வியாபாரம் கற்றறிந்தவர். இருந்தும் கல்வி கற்று வளர்ந்த சென்னையை, வெங்காய விற்பனை, பத்திரிகை, திரைப்படம் ஆகிய தொழில்களில் தன்னைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்த தமிழகத்தைவிட்டு அகலாமல் இருந்தார். திரைத்தொழில் மூலம் இங்கே ஈட்டிய செல்வத்தை ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்லாமல் அதே தொழில்களில் இங்கேயே முதலீடு செய்தார். அவரால் பல நூறு குடும்பங்கள் பிழைத்தன. நூறுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் புகழேணியின் உச்சியை அடைந்தனர்.
இவை எல்லாவற்றுக்கும் உச்சமாய் தமிழகத்துக்குத் தனது நன்றியைக் காட்டவிரும்பிய நாகி ரெட்டியார், தனது ஸ்டூடியோவின் ஒரு பகுதியை ஒதுக்கி, பல்நோக்கு மருத்துவமனை அமைத்தார். கைக்கு எட்டக்கூடிய விதத்தில் ஏழை, நடுத்தர மக்களுக்கும் உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க ஏற்பாடு செய்தார். அப்படிப்பட்டவரின் திரைப்பயணம் தெளிந்த நதியாகப் பிரவாகமெடுத்துப் பல அரிய முத்துக்கள் பிறக்க வழிவகுத்தது.
பள்ளிப் பருவத்தின் சுதந்திர தாகம்
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் பொட்டிப்பாடு என்ற கிராமத்தில், பி. நரசிம்மா ரெட்டி, எருகுலம்மா தம்பதியின் மகனாக 1912-ம் ஆண்டு டிசம்பர் முதல்நாளில் பிறந்தவர் நாகி ரெட்டியார். கிராமத்துப் பள்ளியில் படித்த அவர், 14 வயதில் உயர் கல்விக்காகச் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவருடைய தாத்தா, தந்தையாரின் வியாபார நிறுவனம் சென்னையில் நிலைபெற்றிருந்தது. இதனால் அவர்களது குடும்பம் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறியது.
அந்த சமயம் எழுற்சியுடன் நடந்துகொண்டிருந்த சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் மீது நாகி ரெட்டிக்கு ஈடுபாடு பொங்கியது. காந்தியடிகளின் கட்டளையை ஏற்று உப்பு சத்தியாகிரகம், அன்னியத் துணி பகிஷ்கரிப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட விரும்பிய நாகி ரெட்டியை, அன்றைய காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் பந்துலு, காங்கிரஸ் இளைஞரணித் தலைவராகத் துடிப்புடன் பணியாற்றிய துர்காபாய் தேஷ்முக் குழுவில் சேர்த்துவிட்டார். சுதந்திரப் போட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மகனைக் கண்டு அப்பா நரசிம்ம ரெட்டி கவலையுற்றார். நாகி ரெட்டியோ, “உங்களுக்கு நான்கு மகன்கள், ஒருவன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன தவறு?” என்று கேட்க, அவர் மகனைத் தடுக்கவில்லை. கதர் வியாபாரம், கள்ளுக்கடை மறியல் என்று தொடர்ந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்ற மகனை மடைமாற்றுவதற்காகக் குடும்பத் தொழிலை கவனிக்க ரங்கூனுக்கு அனுப்பிவைத்தார் அப்பா.
அண்ணன் காட்டிய வழியில்
நான்கு ஆண்டுகள் தேர்ந்த தொழில் அனுபவத்துக்குப் பின் 19-ம் வயதில் சென்னை திருப்பிய நாகி ரெட்டியார், தந்தையாரின் தொழிலை கவனித்துக்கொண்டார். இந்த நேரத்தில் நாகி ரெட்டியின் அண்ணன் (தாதா சாகேப் பால்கே விருதப் பெற்ற முதல் தென்னிந்தியர்) பி.என்.ரெட்டி, கல்லூரிப் படிப்புக்குப் பின் தணிக்கைக் கணக்காளராகப் பணிபுரிந்துகொண்டு, நாடகத் துறையிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். ‘சென்னாபுரி ஆந்திர மகா சபா’ சார்பில் நடத்தப்பட்ட பல தெலுங்கு நாடகங்களில் பி.என்.ரெட்டி நடித்தார்.
அவரது நாடகத் தொடர்பு, சித்தூர். வி.நாகையா, தெலுங்குப் படவுலகின் பிதாமகர்களில் ஒருவர் என்று போற்றப்படும் எச்.எம்.ரெட்டி ஆகியோருடன் அவருக்கு நட்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நண்பர்களுடன் இணைந்து ‘ரோஹிணி பிக்சர்ஸ்’என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினார் பி.என்.ரெட்டி. அண்ணனுக்குத் துணையாகக் களத்தில் நின்றார் நாகி ரெட்டி. சித்தூர் வி.நாகையா. பி.கண்ணாம்பா, காஞ்சன மாலா நடிக்க 1938-ல் ‘கிரஹலட்சுமி’ என்ற முதல் படம் வெளியாகி வெற்றிபெற்றது.
அதன் பிறகு ரோஹிணி நண்பர்கள் பிரிந்து செல்ல, வாஹினி பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் பி.என்.ரெட்டி. வாகினியின் வரலாறு 1039-ல் வெளியான ‘வந்தே மாதரம்’ படத்திலிருந்து தொடங்கியது. வரதட்சணைக் கொடுமையைச் சாடியதோடு வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சினையையும் உரக்க எழுப்பி, அதற்குத் தீர்வையும் சொல்லியது. அதன் பிறகு 1040-ல் ‘சுமங்கலி’, 1941-ல் ‘தேவதா’, 1945-ல் ‘ஸ்வர்க்க சீமா’ என்று சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை மட்டுமே முன்னிறுத்திய கதைகளை வெற்றிப்படங்களாக வழங்கி, மரியாதைக்குரிய திரைப்பட நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது வாஹினி. அண்ணனின் படத் தயாரிப்பில் கதை விவாதம் முதல் விளம்பரம், வெளியீடுவரை உடனிருந்து தோள்கொடுத்தார் நாகி ரெட்டியார். காடு மாநகரான கதை
கால ஓட்டத்தில் ‘ஆந்திர ஜோதி’ நாளிதழைத் தொடங்கினார் நாகி ரெட்டி. ‘சந்தமாமா’, ‘அம்புலிமாமா’ பத்திரிகைகள் மூலம் குழந்தைகளுக்கான இதழியலிலும் முத்திரையும் பதித்தார். தன் திரை சம்ராஜ்யத்தையும் மேலும் விரிவாக்கினார். கோலிவுட் என்று தமிழ் சினிமாவை அழைக்கக் காரணமாக இருக்கும் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியான இன்றைய வடபழனி அன்று மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் மட்டுமே வந்து செல்லும் ஒருசில மண்சாலைகள் மட்டுமே இருந்த காட்டுப் பகுதி.
அங்கே துணிந்து தனது ஸ்டூடியோவை அமைத்த அவர், அது மாநகரின் ஒரு பகுதியாக வளரும் என்று நம்பினார். அவரது பார்வை எத்தனை தீர்க்கதரிசனம் மிக்கது என்பதை அடுத்து வந்த பத்தாண்டுகளில் திரைப்பட நகரமாக எழுந்து நின்ற வடபழனி உலகக்கு உணர்த்தியது. தனது மகளின் பெயரால் அவர் தொடங்கிய விஜயா புரடக்ஷன்ஸ் ஸ்டூடியோ தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய படப்பிடிப்புத் தளமாகத் திகழ்ந்தது.
வெற்றிப் படங்களின் விளைநிலம்
`பாதாள பைரவி', `கல்யாணம் பண்ணிப்பார்', `குணசுந்தரி', `மிஸ்ஸியம்மா', ‘மாயாபஜார்’ என்று வெற்றிப் படங்களின் விளைநிலமாகத் திகழ்ந்தது விஜயா புரொடக்ஷன்ஸ். எம்.ஜி.ஆர். தனது ‘நாடோடி மன்னன்’படத்தை முடிக்க முடியாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டபோது, அந்தப் படத்தை எடுத்து வெளியிடக் கைகொடுத்தார் நாகி ரெட்டியார். இறுதிவரை “முதலாளி” என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்ட நாகிரெட்டியார் ஒரு தொழிலாளியாகவே எளிய வாழ்க்கை வாழ்ந்தார். பத்திரிகை, திரையுலகம் ஆகிய இரு ஊடகங்களில் அவர் நிகழ்த்திச் சென்ற சாதனைகள் பயிலப்பட வேண்டிய பாடம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago