தார்மீக ஆவேசத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு விறைப்புடன் திரியும் கொம்பையா பாண்டியன்தான் (கார்த்தி), அந்த ஊரில் எது நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி. பக்கத்து ஊரில் இருக்கும் குண்டன் ராமசாமிக்கும் (சூப்பர் சுப்பராயன்) அவரது ஆட்களுக்கும் கொம்பன் மீது பெரும் கோபம்.
சாதி சனம் என்னும் பேச்சை எடுத்தாலே, சனம் இருக்கட்டும், சாதி வேண்டாம் என்று சொல்லும் ராஜ்கிரண் தன் மகள் பழனியை (லட்சுமி மேனன்) கார்த்திக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்.
ஓயாமல் சண்டை போட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள் ளும் கார்த்தியை அம்மா (கோவை சரளா), மாமனார், மனைவி ஆகியோர் திருத்த முயற்சிக்க, முரட்டுத்தனம் அதிகமாகிக் குடும்பம் பிரிகிறது. பிரிந்த பிறகுதான் உறவுகளின் அருமை கார்த்திக்குப் புரிகிறது.
கார்த்தியின் எதிரிகளிடம் ராஜ்கிரணும் சிக்கிக் கொள்ள, மாமனாரும் மருமகனும் ஆபத்திலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் மீதிக் கதை.
மாமனார் - மருமகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம் என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தைவிட வில்லன்களுக்கும் கார்த்திக்கும் நடக்கும் போராட்டம்தான் அதிகம்.
முதல் பாதி முழுவதும் கார்த்தி யாரையாவது அடித்துக்கொண்டே இருக்கிறார். நாயகன், அடங்காத முரட்டுக் காளை என்பதைக் காட்ட இத்தனை காட்சிகள் தேவையா?
படம் வேகமாக நகர்ந்தாலும் பல காட்சிகளும் திருப்பங்களும் யூகிக்கக் கூடியவையாக உள்ளன. லட்சுமி மேனன் அப்பாவுக்குச் ‘சரக்கு’ ஊற்றிக் கொடுத்து, அதற்குக் கொடுக்கும் விளக்கம் ரசிக்க வைக்கிறது. “மீசைய முறுக்கிட்டு திரியற இவிங்கள போல நீயும் உருப்படாம போவ” என்று ஊர்ப் பெருசுகளைக் காட்டித் தன் பிள்ளையிடம் ஒரு அம்மா சொல்வது என்று விவகாரமான குசும்புகள் ஆங்காங்கே தட்டுப் படுகின்றன. கிளைமாக்ஸ் திரு விழாவும் சண்டையும் நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
பண்பாட்டுப் பதிவுகள் சிறப்பாக உள்ளன. சொலவடைகள், வாழ்க்கை முறைகள், வட்டார வழக்கு, மனிதர்களின் சுபாவம், ஆகியவை பாராட்டத்தக்க விதத் தில் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் முட்டாள் தனமான வீம்பும் வீறாப்பும் கொலை வெறியும் கொண்ட வர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் படம் உறுதிப்படுத்துகிறது. இது எந்த அளவுக்கு இன்றைய யதார்த்தத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது?
‘பருத்தி வீரன்’ முதலான படங்களுடன் ஒப்பிடப் படுவது தவிர்க்க முடியாதது. காரணம், கதைக் களமும் கதை மாந்தர்களும். கொம்பனில் பண்பாட்டுச் சித்தரிப்புகள் வலுவாக இருந்தாலும் கதை தட்டையாகவே உள்ளது. கதை மாந்தர் களுக்கிடையேயான ஊடாட்டங்கள் அவற்றின் நுட்பங்களுடன் பதிவாகவில்லை. பருத்தி வீரனில் சாதியமைப்பின் மறு பக்கமும் சாதிக்குள் நில வும் ஊடாட்டங்களின் நுட்பங்களும் பதிவாகி இருக்கும்.
கார்த்தியின் பாத்திரப் படைப்பு வலுவாக உள்ளது. சாதிய அமைப்பில், ஆண் மையச் சமூகத்தில் உள்ள ஒருவனை இயக்குநர் முத்தையா சரியாகச் சித்தரித்துள்ளார். குடும்பத்துக்குள் நில வும் ஆணாதிக்கப் போக்கும் யதார்த்தமாகச் சொல் லப்பட்டுள்ளது. ஆனால் மாமனார் விஷயத்தில் கார்த்தி மனம் மாறும் காட்சி பலவீனமாக உள்ளது.
முன்பின் யோசிக்காத முரடன் வேடத்துக்கு ஏற்ற கச்சிதமான உடல் மொழி யும் சவடாலான பேச்சும் கார்த்தியிடம் வெளிப்படு கின்றன. லட்சுமி மேனனைப் பார்த்து உருகும் காட்சியில் ஆளே மாறிவிடுகிறார். மாமனாரிடம் விறைப்புக் காட்டு வது, பிறகு பாசம் காட்டுவது ஆகியவற்றிலும் கவர்கிறார்.
பாசம், பணிவு, பொறுமை, சீற்றம் என்று பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் ராஜ் கிரண்.
தன்னைப் பார்த்ததும் அசந்து நிற்கும் கார்த்தியைப் பார்த்தது வெட்கப்படுவது, பொறுப்பான மருமகளாகக் கடமைகளைச் செய்வது, பொறுமை எல்லை மீறிச் சோதிக்கப்படும்போது சீறி எழுவது என்று லட்சுமி மேனன் முத்திரை பதிக்கிறார்.
தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் படத்துக்குப் பெரிய பலம். சூப்பர் சுப்பராயன் வில்லத்தனத்தில் ஜொலிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் ‘கறுப்பு நிறுத்தழகி’ பாடல் கவர்ந்திழுக்கிறது. மற்ற பாடல்கள் சுமார். பின்னணி இசை நன்று. ஆனால் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மேளதாளத்தின் பின்னணியில் மங்காத்தா’ தீம் மியூசிக்கை இணைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.
வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை. கிராமத்தின் நிலக் காட்சிகளை வெவ்வேறு வண்ணங்களில் அழகாகப் பதிவுசெய்திருக்கிறார். திருவிழாவின் வேட்டை சடங்கு உக்கிரமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுப் பதிவுகள், அலுப் பூட்டாத திரைக்கதை ஆகியவற்றால் ‘கொம்பன்’ வசீகரிக்கிறது.
கதையிலும் காட்சிகளிலும் புதுமையும் சித்தரிப்பில் நுட்பமும் கூடியிருந்தால் சாதனை படைத்து இருக்கும்.
முரட்டு இளைஞருக்கு பெண் கொடுத்துவிட்டு வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு அலையும், மாமனார்களுக்கும், வீட்டை கவனிக் காமல் ஊர் பஞ்சாயத்தி லேயே காலம் கழிக்கும் மருமகன் களுக்கும் ஆறுதலும் அறிவுரையும் தரும் படம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago