புதுமைகளின் முன்னோடிகள்

By திரை பாரதி

எத்தனையோ ஆச்சரியமான ஆளுமைகளைச் சந்தித்திருக்கிறது நூற்றாண்டைக் கடந்துசெல்லும் தமிழ்த் திரை. அவர்களில் எத்தனை பேர் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்டால் கிடைக்கும் பதில் ஏமாற்றம்தான். ஆனால் ஆறுதல் அளிக்கும் சில ஆவணப்பட முயற்சிகள் கோடம்பாக்கத்தைத் தலைநிமிரச் செய்யக்கூடியவை. அதில் முக்கியமானது திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர் கோ.தனஞ்ஜெயன் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘த பயனியரிங் டியோ, கிருஷ்ணன் –பஞ்சு – புதுமைகளின் முன்னோடிகள்’ என்ற 119 நிமிட ஆவணப்படம்.

இறுதிவரை பிரியாத சாதனை

50-களில் தொடங்கி கிருஷ்ணன் – பஞ்சு என்கிற இயக்குநர் இணை அமைத்துச் சென்றது சந்தேகமில்லாமல் புதுமைகளின் ராஜபாட்டை. வெவ்வேறு ஊர்களில் பிறந்து, வெவ்வேறு சூழ்நிலைகளில் படித்து, வளர்ந்து, திரைக் கலையால் நண்பர்களாகி, இருவரும் இணைந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 40 ஆண்டுகள் இணைபிரியாமல் இணைந்து 56 படங்களை இயக்கியிருக்கிறார்கள். படம் இயக்காமல் இருந்த காலகட்டத்திலும் அதன் பிறகு முதுமையில் இருந்தபோதும், வாழ்வின் இறுதிவரையிலுமே ஒன்றாக இணைந்து நட்புக்கும் தொழில் பக்திக்கும் முன்மாதிரியாக விளங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் இயக்கிய படங்களில் கையாண்ட சமூகச் சீர்திருத்தக் கதைக் களன்கள், அவற்றைப் பாமரரும் ரசித்து உணரும் விதமாகக் கையாண்ட திரைக்கதை உத்திகள், மக்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய கதாபாத்திர வார்ப்புகள், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நட்சத்திரங்களைத் தேர்வு செய்தது, புதியவர்கள் மீது துணிந்து நம்பிக்கைவைத்து அவர்களை அறிமுகப்படுத்தியது, அவர்களிடமிருந்து திறமையாக நடிப்பை வெளிக்கொண்டுவந்தது, விறுவிறுப்பும் கச்சிதமும் கூடிய எடிட்டிங் முறையைப் பயன்படுத்தியது, ஒளிப்பதிவில் சோதனை செய்துபார்த்த கோணங்கள் என இந்த இயக்குநர் இணை சாதித்த புதுமைகள் கணக்கில் அடங்காதவை. அடுத்து வந்த இரண்டு தலைமுறை இயக்குநர்களுக்கு அவை பாதை அமைத்துக்கொடுத்தன.

முழுமையான பதிவு

இப்படிச் சாதனைகளையே வாழ்க்கையாகக் கொண்ட இந்த இயக்குநர் இணையின் 50 ஆண்டுகால கலை வாழ்வை ஆவணப்படமாக எடுக்க முதலில் இயக்குநருக்குத் துணிவு வேண்டும். அது தனஞ்ஜெயனுக்கு நிறையவே இருப்பதை இந்த ஆவணப்படத்தின் திரைக்கதை வடிவம் எடுத்துக்காட்டுகிறது. 1952-ல் வெளியாகி தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த ‘பராசக்தி’ எனும் புரட்சிகர திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்கு சிவாஜி கணேசன் எனும் மாபெரும் நடிப்பாளுமையை அறிமுகப்படுத்திய இவர்களின் சினிமா பயணமோ அதற்கு 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்குகிறது.

ஆம்! எம்.ஜி.ஆர். ஒரு சிறு கதாபாத்திரத்தில் துணை நட்சத்திரமாக அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் எல்லீஸ் ஆர் டங்கனிடம் கிருஷ்ணன் – பஞ்சு இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றத் தொடங்கியது முதல் நான்கு தலைமுறை நடிகர்களை இயக்கி முடித்ததுவரை ஆவணப்படத்துக்கான ஆராய்ச்சியே தலைசுற்றலை ஏற்படுத்தக்கூடியது . அதுகுறித்த மிரட்சியின்றி முழுமையான தகவல்களுடன் வெளியே தெரியாத செய்திகளுடன் இரண்டு ஆளுமைகளின் படைப்புகளையும் அவை உருவான விதம், அவற்றில் நடித்த கலைஞர்கள், பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் நேரடி சாட்சிகளின் அனுபவப் பேட்டிகள் ஆவணப்படத்தை கிருஷ்ணன் – பஞ்சு வாழ்ந்த காலத்துக்கு நம்மைக் கூட்டிச்செல்கின்றன.

சாதனைகளும் சாட்சியங்களும்

கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் நடித்த, தயாரித்த, பணிபுரிந்தவர்களும் அவர்களுடைய வாரிசுகளும் நண்பர்களும், சமகால எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என 20 ஆளுமைகளின் பேட்டிகள் ஆவணப்படத்தின் சரியான இடங்களில் சரியான கால அளவில் இடம்பெற்று ஆச்சரியமூட்டுகின்றன. சிவாஜி கணேசன் தவிர, எஸ்.எஸ். ராஜேந்திரன், பானுமதி, சாரதா, எம்.என்.ராஜம், எம்.கே.முத்து, ரஞ்சனி, மைனாவதி, `குலதெய்வம்’ ராஜகோபால் மற்றும் பல திறமையான நடிகர் நடிகைகளைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதை அறியும்போது இந்த ஆளுமைகளின் வேகமும் விவேகமும் தெரியவருகிறது.

ஒரு படத்தில் நடித்து சூடுபட்ட பூனையாக வெளியேறிவிட்ட எம்.ஆர்.ராதா எனும் கலகக்கார நாடகக் கலைஞனை ‘ரத்தக் கண்ணீர்’ எனும் மற்றொரு புரட்சிகர திரைப்படம் வழியாக மீண்டும் திரைப்படத்திற்கு கொண்டுவந்த சாதனையை இவர்களே செய்திருக்கிறார்கள். எம்.ஆர். ராமசாமி போன்ற முன்னணி நடிகர்கள் இருக்கையில், நகைச்சுவைக் கலையின் மேதைகளான, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், `குலதெய்வம்’ ராஜகோபால், டி.ஆர்.ராமச்சந்திரன், `தேங்காய்’ சீனிவாசன் போன்றோர்களைக் கதாநாயகனாக்கிய பெருமையும் இந்த ஆவணப்படம் வழியே வெளிப்பட்டு நிற்கிறது. பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமாரை அறிமுகப்படுத்தி அவரை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.

இவர்களில் இன்று உயிரோடு இருக்கும் பலரும் இயக்குநர் இணையின் படைப்பாளுமை குறித்து சாட்சியங்களாக எடுத்துவைக்கும் சம்பவங்கள் ஆவணப்படத்தை இரண்டு மணிநேரத் திரைப்படத்துக்குரிய சுவாரசியத் தன்மைக்கு மாற்றிவிடுகின்றன.

திரைக்கதை வசனத்தை நேசித்தவர்கள்

ஐந்து முறை தேசிய விருது, பலமுறை மாநில விருது உட்படப் பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்திருக்கும் கிருஷ்ணன் –பஞ்சு பற்றி இந்த ஆவணப்படம் வழியே தெரியவரும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று திரைக்கதை, வசனம் இரண்டையும் அவர்கள் ஒரு திரைப்படத்தின் அச்சாணியாக எப்படிக் கருதினார்கள் என்பது. அண்ணாதுரை, மு.கருணாநிதி, திருவாரூர் தங்கராஜு, இயக்குநர் மகேந்திரன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவிஞர் வாலி உட்படப் பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களைக் கனவுலகின் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்கள்.

பீம்சிங், விட்டல், திருமலை மகாலிங்கம் போன்ற புகழும் ஆளுமையும் கூடிய இயக்குநர்களுக்கு மத்தியில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்த இந்த இந்த இயக்குநர் இணை இணைந்து, தமிழில் 41 படங்களும், இந்தியில் 11 படங்களும், தெலுங்கில் 3 படங்களும் கன்னடத்தில் 1 படமும் இயக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசுக்காகப் பல ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களும் எடுத்துள்ளனர் என்பது உட்படப் பரவலாக அறியாத பல செய்திகளை எடுத்துக்கூறும் இந்த ஆவணப்படத்தை அர்ப்பணிப்புடன் தனஞ்ஜெயன் இயக்கியிருக்கிறார். இயக்குநர் பஞ்சுவின் மூன்று மகன்களான பஞ்சு ப்ருத்விராஜ், பஞ்சு சுபாஷ் சந்திரன் மற்றும் பஞ்சு அபிமன்யு இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

ஆவணப்படத்தை நடிகர் நாசர் தனது திடமான குரலில் விவரித்துச் சொல்வது முழுமையான ஈர்ப்பையும் கவனத்தையும் படத்தின் மீது குவிக்கிறது. ஜே.எஸ்.விக்னேஷ் எடிட் செய்திருக்கும் இந்தப் படத்தை பாஃப்டா திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். திரைக்கல்வி தரும் கல்லூரிகள், திரையை நேசிப்பவர்கள் ஆகிய இருதரப்பின் நூலகத்திலும் இருக்க வேண்டிய ஆவணப்படம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்