கூட்டத்தில் சிக்கிய குழந்தைகள்!

நிறைமாதத்தில் இருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நிலைதான் இன்று கோலிவுட்டில் பரிதவிப்பவர்களின் நிலையும். “படம் எடுக்கிறதுன்னா என்ன விளையாட்டு வேலையா? அப்படியே படம் எடுத்துட்டாலும், ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பிரசவ வேதனை. அதனாலதான் லேப்லேர்ந்து பிரிண்டை எடுக்கிறதை டெலிவரின்னு வச்சிருக்கான்” என மறைந்த தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் சொல்வார்.

அவர் சொன்னது 200 சதவிகிதம் உண்மை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் லேப், ப்ரிண்ட், டெலிவரி என்னும் முறை மாறியிருந்தாலும், ரிலீஸ் செய்ய முற்படும்போது கிடைக்கும் வலி முன்பைவிட மோசம். நார்மல் டெலிவரியே கிடையாது எல்லாமே சிசேரியன்தான்.

சென்ற வருடம் சுமார் 160 தமிழ்ப் படங்கள் வெளியாயின. இந்த வருடம் இதுவரைக்குமே 160 நேரடிப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் வெற்றிபெற்ற படங்கள் என்றால் ஒரு கை விரல்களுக்குள்ளேயே அடங்கிவிடும். இப்படிப்பட்ட நிலையில் சென்ற வருடமே சுமார் 200 படங்களுக்கு மேல் சென்சார் செய்யப்பட்டு வெளியாகாமல் இருந்தன.

அப்படங்களோடு இப்போது எடுக்கப்பட்டுவரும் படங்களும் சேர்ந்து பெரிய க்யூவே இருக்கிறது. ஆனால் இருப்பதோ மாதத்துக்கு நான்கு வாரங்கள்தான். இன்று தமிழ்நாட்டுத் திரையரங்குகளின் எண்ணிக்கை 950க்குள் வந்துவிட்டது. அவற்றில் ரிலீஸ் செய்ய ஏதுவானவை சுமார் 600 சொச்சத் திரையரங்குகள் மட்டுமே. இப்படியொரு நிலையில்தான் வாரத்துக்கு நான்கு படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“இந்த டிஜிட்டல் டெக்னாலஜி வந்தபிறகு இங்க எல்லாமே சீரழிஞ்சு போச்சு. ரியல் எஸ்டேட் ஆளுங்க, திடீர் பணக்காரங்க, ஷோக்குக்காகப் படமெடுக்கிறவங்க, பைனான்ஸ் பண்றவங்க, என்.ஆர்.ஐ.ங்கன்னு புதுசுபுதுசா வர்றாங்க. ஆனா ஏவிஎம் மாதிரி, வாஹினி, பிரசாத் மாதிரி டெடிகேஷனோட, இவங்களுக்கு சினிமா தயாரிக்கத் தெரியுதா சொல்லுங்க? என்னைக்கு சினிமாங்குறது கையில இருக்கிற செல் போனுல எடுக்கலாம்னு ஆச்சோ அன்னைக்கு அதும் மேல இருக்கிற பயம் போயிருச்சு.

பயமும், பக்தியும் போச்சுன்னா தொழில் எப்படி விளங்கும்?” என ஒரு பழம் பெரும் தயாரிப்பாளர் என்னிடம் புலம்பியிருக்கிறார். இன்றைக்கும் அவர் தயாரித்த படப்பெட்டியைத் தன் பூஜையறையில் சாமி படங்களோடு வைத்து பூஜிக்கிறவர்.

என்.ஆர்.ஐ. நண்பரொருவர் ஒண்ணரைக் கோடி பட்ஜெட்டில் படமெடுக்க முடிவெடுத்து ஆரம்பித்த படம் ரெண்டரைக் கோடியில் வந்து முடிந்தது.

கொண்டுவந்த கன்வெர்ஷன் காசெல்லாம் காலியாகிவிட, படத்தை மார்க்கெட்டிங் செய்ய வழியின்றி, வாங்குவார் யாருமின்றி, இருந்த மிச்ச மீதி காசு, நிலம், நீச்சையெல்லாம் அடமானம் வைத்துக் கிடைத்த இருபது லட்சம் ரூபாயை வைத்து, விளம்பரத்தையும், வெளியீட்டுச் செலவையும் செய்து வெளியிட்டார்.

வெளியாகி வெறும் பதினைந்து லட்சம் மட்டுமே சம்பாதித்தது. அப்படத்தின் மூலமாய் ஆன கடனுக்கு வெளிநாட்டில் வேலை பார்த்துச் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.

“விளம்பரம் செய்திருந்தால் என் படம் நிச்சயம் ஜெயிச்சிருக்கும் சார். அநியாயமா என் படத்தைச் சாய்ச்சுட்டாங்க” என்று நண்பரின் இயக்குநர் அழுதார்.

அது உண்மையும்கூட, டிவி, கிரிக்கெட், ஷாப்பிங் மால், பீச், இவற்றுடன் வாரத்துக்கு நான்கு தமிழ்ப் படங்களாவது ரிலீஸாகும் கசகச சூழலில், இருபது லட்ச ரூபாய்க்கு சன் மியூசிக், இசையருவி, பேப்பர், போஸ்டர் என விளம்பரம் செய்து, தியேட்டரில் வெளியாக க்யூப், யு.எப்.ஓ, பி.எக்ஸ்.டிக்குப் பணம் கட்டி ரிலீஸ் செய்தால் யாருக்குத் தெரியும்? உடன் வெளியாகும் படங்கள் எல்லாம் விளம்பரத்துக்கே, ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கூவிக்கொண்டிருக்கையில், பெரும் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையாய் என்னதான் வீறிட்டு அழுதாலும், இருபது லட்ச ரூபாய் விளம்பரக் குழந்தை நசுங்கிப் போய் சாகத்தான் வேண்டியிருக்கும். இயக்குநர் சொன்னது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், சொன்ன பட்ஜெட்டில் ஒரு வேளை அவர் சரியாய் படத்தை முடித்திருந்தார் என்றால், மிகுதியாய் செலவு செய்த ஒரு கோடியில் நல்ல விளம்பரமே செய்து படத்தை வெளியிட்டு, வெற்றியடைந்திருக்கவும் செய்யலாம். ஆனால் அதைக் கடைசிவரை அவர் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.

நண்பருக்கும் ஒரு பக்கம் ஒரு வேளை விளம்பரம் செஞ்சிருந்தா வந்திருக்குமோ என்று அடி ஆழத்தில் ஏக்கம் இன்றும், இருந்து கொண்டுதானிருக்கிறது. நல்ல கதைதான் அப்புறம் ஏன் ஓடலை? எல்லாத்துக்கும் இந்த கார்பரேட் கம்பெனிகள் காரணம்.

ஆளாளுக்கு தியேட்டரைப் பிடிச்சி வச்சிட்டு, சின்ன படங்களுக்கு தியேட்டர் கொடுக்க மாட்டேன்குறாங்க என ஆயிரம் காரணங்களைத் தேடி மனதைத் தேற்றிக்கொள்ளச் சொன்னாலும், இன்றுவரை ஏன் படம் ஒண்ணரைக் கோடியிலிருந்து ரெண்டரைக் கோடியானது, ஒரு தயாரிப்பாளராய்த் தான் எங்கே சறுக்கினோம் என்பதை அவர் உணரவே இல்லை.

சினிமா என்ன அவ்வளவு மோசமான தொழிலா? கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டித் தயாரித்த படங்கள் எல்லாம் இப்படி தோல்வியாகிக்கொண்டே போனால் எப்படி இத்தொழில் நடக்கிறது? நஷ்டம் வரும் வியாபாரத்தில் எவனாவது முதலீடு செய்வானா? அப்படியானால் யார்தான் இங்கே சரியான, வெற்றிகரமான தயாரிப்பாளர்?

மணி ரத்னம் படைப்புகள் - ஓர் உரையாடல்

மணி ரத்னம் என் ஆதர்ச இயக்குநர். என்பதுகளில் தமிழ் சினிமாவை வேறு ஒரு நிலைக்குக் கொண்டுசென்ற கலைஞன். ஆங்கிலத்தில் பரத்வாஜ் ரங்கன் எழுதி வெளியானபோதே இரவல் வாங்கிப் படித்துவிட்டேன். மீண்டும் தமிழில் கிழக்கின் மூலமாய் அரவிந்த் சச்சிதானந்தம் மொழிபெயர்த்து வந்ததும் படிக்க ஆவலாகிவிட்டது. அணுவணுவாய் ரசித்த கலைஞனின் படங்களைப் பற்றி, என்னைப் போன்றே ரசித்த ஒருவரின் கேள்விகளுக்கு, படைத்த கலைஞனின் பார்வையைப் பதிலாய் படிக்க மிகச் சுவாரசியமாய் இருந்தது.

நிறைய விஷயங்களைப் பற்றி ரசித்தவனுக்கு உள்ள புரிதலுக்கும், படைத்தவனுக்கு இருக்கும் புரிதலுக்குமான வித்தியாசத்தைப் பல இடங்களில் மணிரத்னம்.. தெளிவாகச் சொல்லி, ஒத்துக்கொண்டிருக்கிறார். ஓரிரு இடங்களில் அவரின் படத் தோல்விகளுக்கான காரணங்களைப் பற்றி அவர் பேசியிருப்பதும் சுவாரசியம். தீவிர மணி ரத்னம் ரசிகர்கள் என்றில்லாமல், ஒவ்வொரு சினிமா ரசிகரும், படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகம்.

தொடர்புக்கு: sankara4@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 mins ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்