சினிமா ஸ்கோப் 15: அம்மா...

By செல்லப்பா

வீரா வேசமாக மு.கருணாநிதியின் செந்தமிழ் வசனங்களைப் பேசி சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’ காலம் முதல் தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட்டுக்குத் தனியிடம் உண்டு. தாய் மகன் பாசம் பற்றிப் பல படங்கள் உருகி வழிந்திருக்கின்றன. ‘அம்மா’ என்ற பெயரிலேயே எண்பதுகளில் ஒரு படம் வெளிவந்தது. சரிதாவும் பிரதாப் போத்தனும் நடித்திருப்பார்கள். அந்த அம்மாவுக்குப் பல கஷ்டங்கள் என்பதாக நினைவு. தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட் நிரம்பி வழிந்த காரணத்தால் அம்மா பாடல்கள் எனத் தனித் தொகுப்பே பலருடைய திரைப்பாடல் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன.

அதில் பெரும்பாலான பாடல்கள் இளையராஜா குரலில் அல்லது அவரது இசையமைப்பில் வெளிவந்தவை. ‘மன்னன்’ படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘அம்மா என்றழைக்காத’ பாடலுக்கு நடிகர் ரஜினி காந்த் தன் தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார். அந்த வயதில் ஒரு தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் அந்தத் தாயின் நிலைமை என்ன ஆகும் என யோசித்ததே இல்லை, ஒருவேளை அவருக்கு ஜன்னிகூடக் கண்டுவிடலாம். இப்படியான மிகைப்படுத்தல்கள் இல்லாமல் உறவையும் அதன் வலுவையும் காட்ட முடியாதா என்ன?

அழகரும் ராசைய்யாவும்

‘சுப்பிரமணிய புரம்’ படத்தில் ஒரு காட்சி வரும். தலைமறைவாக இருக்கும் அழகருக்கு அவன் தாய் உணவு கொண்டுவரும் காட்சி. படம் முழுவதும் தாயும் மகனும் எசலிக்கொண்டேயிருப்பார்கள். அந்தக் காட்சியின் தொடக்கத்தில்கூட ‘எதற்கு உணவு கொண்டு வந்தாய்?’ எனத் தாயைத் திட்டவே செய்வான் அழகர். ஆனால் அந்தக் காட்சி முடியும் தருவாயில் தாய் கிளம்பும்போது ‘அம்மா’ என அழைத்து, ‘பார்த்துப் போ’ என்பான். தருமன் அழகரின் தோளில் ஒரு கையைவைத்து அழுத்துவான். அத்தனை காலமும் அழகருக்குள் ஒளிந்துகிடந்த தாயன்பு அந்தக் கணத்தில் மலை அருவியின் ஒற்றை விழுதாய் நிலத்தைத் தழுவும். இப்படியான காட்சிகளில் கிடைக்கும் சிலிர்ப்பும் திருப்தியும் ‘வளவள’ என்ற வசனங்களிலோ யதார்த்தத்துக்குப் பொருந்தாத காட்சிகளிலோ கிடைக்காது.

ராஜ் கிரணின் ‘அரண்மனைக் கிளி’ படத்தில் தாய் மகன் உறவு ஓரளவு யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருக்கும் என்பதாக ஞாபகம். அதிலும் தாய் இறந்த பின்னர் ராசைய்யாவாக நடித்திருக்கும் ராஜ் கிரண் பாடும் இளையராஜாவின் பாடல் காட்சிகள் மிகையானவையே. தமிழ் சினிமாவில் இத்தகைய காட்சிகள் மிகையுணர்ச்சியின் வெளிப்பாடுகளாகவே பல நேரங்களில் அமைந்துவிடுவது தமிழ் சினிமாவின் சாபமோ?

மிகையுணர்ச்சி

நீள நீளமான வசனங்களாலும் நாடகத் தனமான உடல்மொழி களாலும் மட்டுமல்ல துண்டு துண்டான வசனங்களாலும் மட்டுப்படுத்தப்பட்ட உடல்மொழியாலும்கூட நாடகத்தனமான உணச்சியைத் திரையில் கட்டமைக்க முடியும் என்பதை மணிரத்னம் ‘தளபதி’ படத்தில் செய்து காட்டியிருப்பார். வசனமே இல்லாத காட்சிகளிலும் ஆறாய்ப் பெருகியோடும் மிகையுணர்ச்சி. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சின்னத்தாயவள்’ பாடல் பின்னணியில் ஒலிக்க சூர்யா தன் தாயைக் கோயிலில் பின் தொடரும் காட்சி இதற்கு உதாரணம்.

அதிலும் இறுதியாகத் தன் தாயின் தலையிலிருந்து உதிரும் பூவை பக்தி சிரத்தையுடன் எடுத்து சூர்யா கைகளில் பொதிந்துகொள்ளும் காட்சி அதன் உச்சம். அதே போல் சூர்யாவை வீட்டில் வந்து அவன் தாய் பார்க்கும் காட்சி ஒன்று உண்டு. ரஜினி காந்த் வித்யாவின் மடியில் ஒரு குழந்தைபோல் தலைவைத்துப் படுத்துக்கிடப்பார். இந்தக் காட்சியில் வெளிப்படும் மிகையுணர்ச்சி பார்வையாளர்களை நெளியச் செய்யும்.

ஏன் ‘தளபதி’யில் சூர்யா தன் தாயின் மடியில் தலைவைத்து அழுகிறான்? ஏன் என்றால் ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவி தன்னை அவனது தாய் என்று அடையாளப்படுத்தும் காட்சியில் தாயின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பான் கர்ணன். ஒரே வித்தியாசம் ‘தளபதி’யில் வசனம் குறைவு, நாடகத்தனமான உடல்மொழி மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இரண்டிலும் ஆதார சுருதி மிகையுணர்ச்சியே. ஆனால் இத்தகைய காட்சியமைப்புகளால்தான் மணி ரத்னம் பார்வையாளர்களால் சிறந்த இயக்குநராகக் கொண்டாடப் படுகிறார் என்பது நகைமுரணே.

தாய் தந்த விடுதலை

தமிழ்ப் படங்களில் சென்டிமெண்ட் பொங்கி வழியும் அதே வேளையில் லோகிததாஸின் திரைக்கதையில் சிபி மலயில் இயக்கத்தில் மம்மூட்டி, திலகன், முகேஷ், சரிதா உள்ளிட்டோர் நடித்த ‘தனியாவர்த்தனம்’ படத்தை நினைத்துப் பார்க்கும்போது தென்படும் வித்தியாசம் மலையளவு. இவ்வளவுக்கும் ‘தனியாவர்த்தன’மும் வணிகத்துக்காக உருவாக்கப்பட்ட படமே. ஆனால் படமாக்கத்தில், திரைக்கதையின் பயணத்தில், யதார்த்தத்தை உணர முடியும். எந்த இடத்திலும் உணர்ச்சிகள் தம் வரம்பை மீறாது.

எடுத்துக்கொண்ட கதையை வலுப்படுத்தும் விதத்திலான வலுவான திரைக்கதை படம் பார்ப்பதை ரசனைபூர்வ அனுபவமாக மாற்றும். பரம்பரை பரம்பரையாகக் குடும்பத்து ஆண்களில் ஒருவருக்கு மனநோய் கண்டுவிடுகிறது. மனநோய் கண்டிருந்த மாமன் இறந்தபிறகு, நல்ல மனநிலையுடன் உலவும் மம்மூட்டிக்கு மனநோய்க் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்று உறவும் சமூகமும் சந்தேகம் கொள்கிறது. இந்தச் சந்தேகக் கண்ணோட்டம் முற்றிவிட மம்மூட்டியை மனநோயாளி என்றே உறவும் சமூகமும் முடிவுகட்டிவிடுகிறது.

அவருடைய மாமன் பூட்டப்பட்ட அறையிலேயே அவரையும் பூட்டிவிட, மம்மூட்டியின் தாய் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்டு, மகனுக்கும் விஷம் கொடுத்து கொன்று அந்த நகரகத்திலிருந்து மகனுக்கு விடுதலை கொடுக்கிறார். இந்தப் படம் 1987-ல் வெளியானது. மனநோயைப் பழமைவாதப் பார்வையுடன் அணுகும் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டும் இந்தப் படம். மனநோய் குறித்த சமூகத்தின் அறியாமையை அப்பட்டமாக்குகிறது. இப்படியான மாறுபட்ட கதைகளைக் கையாள இன்னும் தமிழில் ஓர் இயக்குநர்கூட முன் வராதது ஆச்சரியம்தான்.

நந்தாவின் முகம்

‘தனியாவர்த்தனம்’ படத்தின் தாய் மகன் உறவு, சாபம், தாய் விஷம் கொடுத்து மகனைக் கொல்தல் ஆகிய அம்சங்களுடன் ‘தளபதி’யின் அநீதியைத் தட்டிக் கேட்கும் அம்சத்தையும், தேவா சூர்யா பிணைப்பையும், இலங்கைத் தமிழர் என்னும் அம்சத்தையும் ஒன்றுசேர்த்து ஒரு படம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பாலாவின் ‘நந்தா’ நினைவில் தட்டுப்படும். ‘தனியாவர்த்தன’த்தில் தன் மகனைக் கொல்வதற்கு அந்தத் தாய்க்கு நியாயமான காரணம் இருக்கும் ஆனால் ‘நந்தா’வில் தகப்பனின் தொந்தரவால் தாய் படும் பாட்டைச் சகிக்க மாட்டாமல் தந்தையைக் கொன்றுவிடுவான் அந்த மகன்.

அதனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பப்படுவான். திரும்பிவந்த பின்னர் அவன் தாய் மீது பிரியத்துடன் வருவான். ஆனால் தாய் அவன் மீது பாசங்கொண்டிருந்தும் அவனைத் தள்ளிவிடுவாள். இறுதியில் அவனுடைய தாயே அவனை விஷம் தந்து கொல்வாள். ‘தனியாவர்த்த’னத்தின் திரைக்கதை சீராகப் பயணப்படும். படமாக்கத்தில் சிபி மலயில் வெளிப்படுத்தியிருந்த நேர்த்தி ‘நந்தா’வில் தவறியிருக்கும். இந்தப் படங்களை எல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது எது நல்ல திரைக்கதை என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in | படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்