எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்று ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. 15 நாட்களில் 65 கோடி ரூபாய் வசூலித்தாகக் கூறப்படும் ‘காஞ்சனா- 2’ படத்தைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்து முடித்திருக்கும் படம். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர் அறிமுக இசையமைப்பாளர் அம்ரிஷ். அத்தனை சீக்கிரம் அறிமுக இசையமைப்பாளரை நம்பிவிடாத ராகவா லாரன்ஸைக் கவர்ந்த இந்த அம்ரிஷ் யார்?
70-களின் மத்தியில் தொடங்கி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னக மொழிகளில் சுமார் 150 படங்களில் கதாநாயகியாக நடித்து சாதனை படைத்த ஜெயசித்ராவின் மகன். ‘தி இந்து’ தமிழுக்காக அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
தமிழில் 2010-ல ‘நானே என்னுள் இல்லை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானீர்கள் இல்லையா?
ஆமாம்! அம்மா இயக்கிய அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமில்ல, அதற்கு இசையமைத்ததும் நான்தான். உண்மையில் எனக்கு இசையின் மீதுதான் தீராத ஆர்வம். ஆனால் ‘என் ஆசைக்காக ஒரு படத்திலாவது நடித்துவிடு’ என்று அம்மா கேட்டுக்கொண்டார்.
அவருக்காக நடித்தேன். சினிமாவுக்கான நடிப்பு என் ரத்தத்தில் இருக்கிறது என்றாலும் அதைவிட இசையே என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது என்று சொல்ல வேண்டும். வீடோ பள்ளிக்கூடமோ எங்கேயிருந்தாலும் நமது நிஜ வாழ்க்கையின் சூழ்நிலைக்கு ஏற்ப நமக்குள் ஒரு பிஜிஎம் ஒலித்துக்கொண்டிருக்கும் இல்லையா? எனக்கும் அப்படித்தான். எனது இசையார்வத்தைக் கண்டு என்னை ஐந்து வயதிலேயே அம்மா இசை கற்றுக்கொள்ளச் செய்தார்.
இளையராஜா சார் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் என பல ஜாம்பவான்கள் இசை கற்றுக்கொண்ட ‘மீயூசி மியூசிக்கல்’ இசைப் பள்ளியில்தான் என்னையும் சேர்த்துவிட்டார். அங்கே கீபோர்டில் வருடத் தொடங்கிய என் விரல்கள் வயலின், கிட்டார், மிருந்தங்கம், தவில், டோல், தாரை, தப்பட்டை என எதையும் விட்டு வைக்கவில்லை. எனது பசிக்குத் தீனிபோட சரியானவர் இசையமைப்பாளர் மணிசர்மாதான் என்று ஆறாம் வகுப்பு படிக்கிறபோது அவரிடம் என் அம்மா சேர்த்துவிட்டார். பள்ளிக் காலத்தில் தொடங்கி கல்லூரிக் காலம் வரை அவரிடம் உதவியாளராக இருந்தேன். அவர் சொல்லிக்கொடுக்காமலேயே அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
வெகு சிலரைத் தவிர இன்றைய புதிய இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் இரைச்சலான இசையையே கொடுக்கிறார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை எது?
மணிசர்மாவின் மாணவன் நான். பக்கா மாஸ், செம்ம க்ளாஸ் என்பார்கள். அதைத்தான் என் வழியாகத் தேர்ந்துகொண் டிருக்கிறேன். மெலடி பாடலையே குத்துப் பாடல் மாதிரி இசையமைக்கவும் குத்துப்பாடலை மெலடியின் மென்மை கலந்து தரவும் விரும்புகிறேன். அதேநேரம் கதையை விட்டு விலகிச் சென்று இசைமைப்பது என்ற இசையை என்னிடம் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் சந்தோஷ் நாராயண் தரும் கதைக்கான இசை எனக்குப் பிடித்திருக்கிறது. ஒலிகளைக் கையாள்வதில் தமன் அசத்துகிறார். புதிதாக வந்து வெற்றிபெற்றிருக்கும் என் வயதொத்த அனைத்து இசையமைப்பாளர்களின் அளவுகோலும் எனக்கு அத்துப்படி. இதைப் பெருமிதமாகச் சொல்லவில்லை. என்னைத் தனித்து நிலைநிறுத்திக்கொள்ள இன்றைய சினிமா இசையைக் கூர்ந்து கவனிக்கிறேன் என்பதைச் சொல்லவருகிறேன்.
‘காஞ்சனா-2’ படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்களைப் பயன்படுத்தியிருந்தார் லாரன்ஸ். அவர் உங்களைத் தேர்வுசெய்தது எப்படி?
ஜெயசித்ராவின் மகன் என்ற விசிட்டிங் கார்டுடன் சினிமாவில் சலுகை பெறுவதில் எனக்கு விருப்பமில்லை. எனது திறமைக்காக நான் அடையாளம் காணப்பட வேண்டும் என்று விரும்பினேன். சினிமா இசைதான் எனது பாதை என்று முடிவு செய்த பிறகு எனது ட்யூன்களை நண்பர்களிடம் கேட்கச் சொல்வேன். அப்படி ஒருமுறை என் ட்யூன்களைக் கேட்ட சினிமா மக்கள் தொடர்பாளர் மௌனம் ரவி, என்னை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் அறிமுகப்படுத்தினார். அவர் சில பாடல்களைக் கேட்டுவிட்டு “ஒன்ஸ்மோர் போடு” என்றார். நான் ஜெயசித்ராவின் மகன் என்பது அவருக்குத் தெரியாது. உடனே என்னை லாரன்ஸ் மாஸ்டரிடம் அனுப்பினார்.
ஆனால், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கு ஏற்கெனவே மூன்று இசையமைப்பாளர்களை முடிவு செய்து வைத்திருந்தார்கள். லாரன்ஸ் நடிகர், இயக்குநர் மட்டுமல்ல, தான் இயக்கிய ‘ரிபெல்’ தெலுங்குப் படத்துக்கு அதிரடியான மாஸ் இசையை அமைத்தவரும்கூட. சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வதும் அவருக்குப் பிடிக்காது. ஆனால், திறமையிருந்தால் கைதூக்கிவிடுவதில் அவர் இன்னொரு தனுஷ். அவரைத் திருப்திப்படுத்திவிட முடியும் என்று நம்பினேன்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஐந்து சூழ்நிலைகளுக்கு அவர் கேட்டபடி பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்தேன். பாடல்கள் படமாகும் முன்பு “ஐந்து பாடல்களையும் ஹிட் பாடல்களா கொடுத்து விட்டாய்” என்று சொன்னார். இவரை திருப்திப்படுத்திட்டா சினிமாவில் யாரை வேண்டுமானாலும் திருப்திபடுத்திவிட முடியும் என்று நினைத்தேன். அது சாத்தியமாகிவிட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பாடல் யூடியூபில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. விரைவில் மற்ற பாடல்களை வெளியிடவிருக்கிறோம்.
அடுத்து?
பரத், ராய் லட்சுமி நடிப்பில் ஜான்மேக்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் ‘பொட்டு’ படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். தெலுங்குப் படங்களுக்கும் வாய்ப்புகள் வருகின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago