நட்சத்திரங்களுடன் என் வானம்: கடிதம் வழியே மனிதம்

By சி.முருகேஷ்பாபு

ஒரு முறை செல்லும்போது, ‘உங்களுக்காக உழைக்கும் காலணிகள் இங்கே கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே…’ என்று எழுதப்பட்டிருக்கும். அடுத்த முறை செல்லும்போது, ‘அண்ணா… உங்கள் பாதுகைகளை நான் பாதுகாத்துக்கொள்கிறேன்… இப்படிக்கு பரதன்’ என்று எழுதப்பட்டிருக்கும். இன்னொருமுறை செல்லும்போது அலுவலக வரவேற்பறைக்குள் மரம் முளைத்திருக்கும். தரையெல்லாம் சருகான இலைகள் உதிர்ந்து கிடக்கும். பிரிதொரு முறை செல்லும்போது மணல் கொட்டியிருப்பார்கள்.


இத்தனை வித்தியாசம் காட்டுபவர் யாரென்று சொல்ல வேண்டுமா என்ன? இயக்குநர் இரா. பார்த்திபன் அலுவலகம் செல்வதென்றால் இப்படியான ஏதேனும் ஓர் ஆச்சரியத்தை எதிர்நோக்கியே நாம் செல்ல வேண்டியிருக்கும். அலுவலக வாசலில், ‘அனுமதிக்கு முன் அனுமதி வேண்டும்’ என இருக்கும் வாசகத்தைத் தாண்டி அனுமதி இல்லாமலே செல்வதற்கு எப்போதுமே பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் கொடுத்திருப்பவர் பார்த்திபன்.


வித்தியாசம் என்பதற்காக எதையும் முயற்சித்துப் பார்க்கும் மனிதர் பார்த்திபன். அவருடைய அறை மேசையில் ஒரு கோக் தம்ளர் கொட்டி கோலா மேஜையில் பரவியிருக்கும். ஐயோ என்று அதை எடுத்தால் அது கோக் சிதறியது போன்ற
பொம்மையாக இருக்கும்.
குடிப்பதற்குக் காப்பி கொடுத்தால்கூட அது காப்பியா காப்பி மாதிரியா என்று சந்தேகம் வரும். ஆனால், மிகச் சிறந்த காப்பியை நம்மை ருசிக்க வைப்பார். காப்பி குடித்த பிறகு அதன் பூர்வீகம், அது எப்படி அவரை வந்து அடைந்தது என்பதைச் சுவையாக
 விவரிப்பார்


உதவியாளரை தேடி வந்த வித்தகன்


ஒரு நாள் அதிகாலை ஐந்தரை மணிவாக்கில் அழைப்பு மணி ஒலிக்க, போய் வாசல் கதவைத் திறந்தால் பார்த்திபன் நின்றுகொண்டிருந்தார். என்னுடைய அறை நண்பர் கரு. பழனியப்பன் அப்போது அவரிடம் உதவி இயக்குநராக இருந்தார். கதை விவாதத்தில் முதல் நாள் பேசிய ஒரு விஷயத்தில் தனக்கு தோன்றிய ஒரு கருத்தைச் சொல்லி பழனியப்பனின் பதிலைத் தெரிந்துகொள்வதற்காக வந்திருந்தார். அழைத்தால் ஓடி வரவேண்டியவர்தானே உதவியாளர் என்று நினைக்காமல் அவரைத் தேடி வந்திருந்த பார்த்திபன் அப்போதுதான் வித்தியாசமா இருக்காரே என்று நினைக்க வைத்தார்.


நண்பர்களுக்கு அவர் தரும் பரிசுகள் ஆச்சரியமூட்டுவதாக இருக்கும். ஒருமுறை ஒரு போட்டோபிரேம் கொடுத்தார். அதில்


இதுதான்

நிரந்தரமென

இதனுள் எதையும்

நிரப்பாவிட்டால்

எதிர்சுவர் ஓவியம்

ஜன்னலோர குருவி

செல்ல நாய்க்குட்டி

முத்த மழலை

சுடிதார் மின்னல்கள்

நிஜ நிலா

மழைத் தோரணங்கள்
…

இப்படி,
விரும்பும் யாவும் -இந்த

வெற்றிடத்தை நிரப்பும்!


என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி நம் புகைப்படத்தை அதில் எப்படி வைக்க முடியும்? அவரது சொற்களோடு இன்றும் வரவேற்பறையில் இருக்கிறது அந்த போட்டோ பிரேம்! நினைவுப் பரிசு என்பது அவரைப் பொறுத்தவரையில்தான் எப்போதும் நினைவுப் பரிசாகவே இருக்கும்.


கடிதம் வழியே மனிதம்


தன்னுடைய இதயத்தை தானமாகக் கொடுத்து எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்த ஹிதேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம். அதை ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள், திரைப் பிரபலங்கள் வந்தால் இன்னும் கவனம் பெறும் என்ற அடிப்படையில் என்னிடம் பார்த்திபனை அழைக்க முடியுமா என்று கேட்டார்கள். அவரைக் கைபேசியில் அழைத்தபோது ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்புக்காக அம்பாசமுத்திரத்தில் இருக்கிறேன் என்றார். அப்படியே நான் வந்தாலும் உங்களுக்கே என்னை அடையாளம் தெரியாது. ஏனென்றால் என்னை அத்தனை கறுப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்றார். ஆனால் நல்ல விஷயத்தில் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவர் குரலில் தெரிந்தது.


நானும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நண்பர்களிடம் சொல்லிவிட்டு இயக்குநர் மெட்டி ஒலி திருமுருகனை அழைத்தேன். அவர் உடனே ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சி அன்று ஹிதேந்திரனின் ஊருக்குத் திருமுருகனின் காரில் செல்வதாகத் திட்டம். அன்று காலையில் பார்த்திபனின் உதவிஇயக்குனர் குமார் தொலைபேசியில் அழைத்தார். “சார் உங்ககிட்டே கொடுக்கச் சொல்லி ஒரு கவர் கொடுத்திருக்கார். நான் அதை எங்கே கொண்டு வந்து தரணும்?” என்றார். நானே போய் வாங்கிக்கொண்டேன்.


அந்த கவரில் இரண்டு கடிதங்கள் இருந்தன. முதலாவது கடிதம் எனக்கு. அதில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்து எழுதியிருந்தார். இன்னொரு கடிதத்தை அந்த நிகழ்ச்சியில் தன் சார்பாக வாசித்துவிட்டு ஹிதேந்திரனின் தந்தை அசோகனிடம் கொடுத்துவிடுமாறு எழுதியிருந்தார். அம்பாசமுத்திரம் படப்பிடிப்பிலிருந்த அவரிடம் அன்று நான் பேசிய பின்னர், சென்னைக்குப் புறப்பட்ட யூனிட் நண்பர் ஒருவரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அதைத் தனது உதவியாளர் குமார் மூலம் சேர்ப்பிக்கச் செய்திருந்தார். ஒரு நிகழ்வில் தன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவர் காட்டிய அக்கறை சிலிர்ப்பாக இருந்தது. நிச்சயம் அந்தக் கடிதம் ஹிதேந்திரனின் தந்தைக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.


பார்த்திபன் தன் நண்பர்களுக்குத் தரும் திருமண பரிசு அசத்தலாக இருக்கும். திரைப் பிரபலங்களின் திருமணமாக இருந்தாலும் சாதாரணர்களின் திருமணமாக இருந்தாலும் அவர் தரும் பரிசு ஒரே மாதிரிதான். ஒரு கடிகாரம்தான் அவர் தரும் பரிசு. ஆனால், அந்தக் கடிகாரத்தை அவரே உருவாக்கியிருப்பார். அதில் ஒரு பட்டு வேட்டியின் நுனியும் கூரைப் புடவையின் நுனியும் முடிச்சிடப்பட்டிருக்கும். சந்தோஷம் உங்களை நொடிமுள்ளாகத் துரத்தட்டும் என்று எழுதிக் கையெழுத்திட்டிருப்பார்.


என் திருமணத்துக்கும் அவர் தந்த பரிசு அதுதான். இன்றும் கிராமத்தில் என் வீட்டில் அந்தக் கடிகாரத்தின் நொடி முள் குடும்பத்தின் சந்தோஷத்தைத் துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது!



தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்