ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘மாநகரம்’, அதற்குச் சற்று முன்பு வெளியாகி பாராட்டுபெற்ற ‘ஜோக்கர்’, கார்த்தி நடிப்பில் வெளியான `காஷ்மோரா’, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ உட்பட கடந்த சில ஆண்டுகளில் வெளியாகி கவனம் பெற்ற பல படங்களைத் தயாரித்திருக்கும் இளம் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு. நடிகர் விஷால் தலைமையில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் இவர், ‘நம்ம அணி’ சார்பில் நம்மிடம் பேசினார்:
‘நம்ம அணி’ உருவாகக் காரணம் என்ன?
ஒரு புதிய அணி வர வேண்டும் என்பதுதான் அடிப்படையான காரணம். இன்றைய தேதியில் படத் தயாரிப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளைத் தேடி அடையக்கூடிய ஆற்றல் உள்ள இளைஞர்கள் வர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தனிப்பட்ட முறையில் எந்த வகையிலும் ஆதாயம் தேவைப்படாத டீமாகவும் இது இருக்க வேண்டும் என்றுதான் `நம்ம அணி’யை உருவாக்கினோம். அதற்கு விஷாலின் தலைமை பொருத்தமாக அமைந்துவிட்டது.
தொழில்முறை தயாரிப்பாளர்களின் ஒரே அமைப்பாக இருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கத்தை, தொழில்முறை நடிகர்கள் நிறைந்த அணி கைப்பற்ற நினைப்பது தொழிற்சங்க மரபுகளுக்கு விரோதமானது என்று எதிரணியினர் கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள வேறு காரணங்கள் கிடைக்காததால் இதைச் சொல்கிறார்கள். தொழில்முறை தயாரிப்பாளர்கள் என்று சொல்வோர், வேறு தொழிலில் சம்பாதித்ததைத்தானே இங்கே வந்து முதலீடு செய்கிறார்கள். பட விநியோகம், திரையரங்கத் தொழில், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி எனப் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு வேறொரு பின்னணி இருக்கிறதல்லவா? அப்படியிருக்கும்போது எப்படித் தொழில்முறை தயாரிப்பாளர்கள் என்று பிரித்துப் பார்க்க முடியும்? சினிமா தயாரிக்க முதலீடு செய்யும் அனைவரையுமே தயாரிப்பாளர்களாகப் பார்க்க வேண்டும். அவர்களது அணியில் மட்டும் நடிகர்கள் இல்லையா என்ன? அவர்கள் மட்டும்தான் சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர்களின் அணி என்றால் நான் தயாரித்திருக்கும் பாதிப்படங்கள், மிஷ்கின் எடுத்திருக்கும் படங்கள், பிரகாஷ்ராஜ் எடுத்திருக்கும் படங்கள், அட்டக்கத்தியில் ஆரம்பித்து ஞானவேல்ராஜா தயாரித்த பல படங்கள் எல்லாம் சிறு முதலீட்டுப் படங்கள் இல்லையா?
‘நடிப்பைத் தள்ளி வைத்து விட்டு சங்கப்பணிகளை கவனிக்க உங்களால் வர முடியுமா; சம்பள விஷயத்தில் நடிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என்றால் யார் பக்கம் நின்று பேசுவீர்கள்’ என்று முன்னேற்ற அணி கேட்பதற்கு உங்கள் பதில் என்ன?
தேர்ந்தெடுக்கப்பட்டால் உறுப்பினர்கள் தந்த பொறுப்பை எப்படித் தட்டிக்கழிக்க முடியும்? ஓடி ஓடி உழைக்கும் விஷாலைப் பார்க்கிறார்கள்தானே. நாங்கள் அனைவருமே விஷாலை நம்புகிறோம். எல்லா இடங்களிலும் எளிதில் அணுக எங்களுக்கு அவரின் புரஃபைல் உதவுகிறது. திரையுலக நன்மைக்கு அவரைப் பயன்படுத்திக்கொள்கிறோம். நாங்கள் அவரை மன்னராக்க முயற்சிக்கவில்லை. யார் பக்கம் பேசுவீர்கள் என்றால், நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் பக்கம்தான் பேச முடியும். அதுதானே நியாயம்? யார் பக்கம் பேசுவீர்கள் என்று கேட்பதே தப்பான வாதம். அப்படியானால், நீங்கள் ஜெயித்தால் ஒரு பிரிவினருக்குச் சார்பாக பேசுவீர்கள் என்றுதானே இதற்கு அர்த்தம்.
வெளியீட்டுச் சிக்கலில் தவித்த விஷால் படம், ஞானவேல் ராஜா படங்கள் ஆகியவற்றுக்கும் பிரச்சினையைத் தீர்க்க முன்னின்றோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகச் சங்கத்தில் எதுவுமே நடக்கவில்லை என்று விஷால் கூறியது சரியல்ல என்கிறார்களே?
பிரச்சினைகளுக்குப் பெரிய படங்கள் மட்டுமே காரணமல்ல; இன்று ஒட்டுமொத்தமாக ஆடியன்ஸ் திரையரங்குக்கு வருவது குறைந்துவிட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு பெரிய படம் குறிப்பிட்ட தேதியை அறிவித்து அதில் வெளியாக முடியாமல் போவது, பத்து நாட்களுக்கு முன்பு திடீரென்று வெளியீட்டுத் தேதியைக் கொண்டுவந்து போடுவது இவையெல்லாம்தான் பிரச்சினையே. பெரிய படங்களுக்கே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது, சின்னப் படங்கள் வெளியீட்டுத் தேதியை தீர்மானிக்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடுகிறது. ஆண்டுக்கு 75 முதல் 100 படங்கள் வந்த காலம் போய் இன்று ஆண்டுக்கு 200 முதல் 250 படங்கள் என வெளிவரும் படங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துவிட்டது.
ஆனால் தரமான திரையரங்குகள் என்று பார்த்தால் 750 கூடத் தேறாது. ஆகக் குறைந்த இருக்கைகள் கொண்ட திரையரங்குகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தாலே திரையுலகில் பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். அதைப் பற்றிக் கடந்த பத்தாண்டுகளில் யாருமே சிந்திக்கவில்லை. திரையரங்க டிக்கெட் விலை சார்ந்து, கேளிக்கை வரி சார்ந்து பல பிரச்சினைகளுக்கு தயாரிப்பாளர் சங்கம்தான் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல்தான் அதிகம். செயல்பாடு இல்லை. பிரச்சினையோடு சென்றால், `காலை பத்து மணிக்கு வா’ என்று சொல்லிவிட்டு மதியம் 1 மணிக்கு வருவார்கள்.
இப்படித்தான் சங்கம் கடந்த காலங்களில் நடந்துவந்திருக்கிறது. 1,200 பேர் இருக்கக்கூடிய ஒரு அமைப்பில் 150 பேர் வாக்காளர்களாக வந்து நிற்கிறார்கள் என்றால் தொழில் முடக்கத்தால் எவ்வளவு மன அழுத்தம் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அவர்களால் முடிந்ததைச் செய்தார்கள்; ஆனால் அது மட்டுமே இன்று இருக்கும் பிரச்சினைகளுக்கு போதாது.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக நடிகர் சங்கக் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவை விஷால் நடத்துவது சந்தர்ப்பவாதம் இல்லையா என்று கேட்கிறார்களே?
சி.எம்.டி.ஏ அனுமதிக்காகக் காத்திருந்தது நடிகர் சங்கச் செயற்குழு. அது கிடைத்ததும் அடிக்கல் நாட்டுகிறார்கள். அது நடிகர் சங்க விவகாரம். அதை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுடன் தொடர்புபடுத்துவது, விஷாலைத் தொடர்ந்து குறைசொல்லி வரும் எதிரணியின் இயலாமை தவிர வேறேன்ன?!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago