நிஜமும் நிழலும்: மாயமாகும் நடிகர்களின் மர்மப் பின்னணி!

By ஆர்.சி.ஜெயந்தன்

இருபத்தியெட்டு நாட்கள் மட்டுமே கொண்ட கடந்த பிப்ரவரி மாதத்தில் 28 படங்கள் (நேரடித் தமிழ்ப் படங்கள் 18, மொழிமாற்றுப் படங்கள் 10) வெளியாகியிருக்கின்றன. இது எண்ணிக்கையில் வேண்டுமானால் சாதனையாக இருக்கலாம். ஆனால் இவற்றில் எத்தனை படங்கள் வசூல் செய்தன என்று பார்த்தால் படத்தைத் தயாரித்தவர்களுக்கும், வாங்கியவர்களுக்கும் பெருத்த அடி. ஏதாவது புதிதாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றம்தான்.

இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர், ரசிகர்கள் ஆகிய தரப்புகளைத் தாண்டி, படத்துடன் நேரடித் தொடர்புகொண்ட ஒரு தரப்பை எல்லோரும் மறந்தே போய்விடுகிறார்கள். அவர்கள், அறிமுக நடிகர்கள். ஒரே இரவில் புகழ் ஒளியில் குளிக்கும் நட்சத்திரமாகிவிடலாம் என்ற கனவுடன் அறிமுகமாகும் இவர்கள் என்னவாகிறார்கள்? இவர்கள் கண்டுகொள்ளப்படாததற்குக் காரணம்தான் என்ன?

ஊறுகாய்க்கு உதவி இயக்குநர்கள்

அனுபவம் பெற்ற உதவி இயக்குநர்களைத் தங்களுக்கு ஆலோசனைக்கும் படப்பிடிப்பு வேலைகளுக்கும் இவர்கள் வைத்துக்கொண்டாலும், அவர்கள் ஆலோசனைகளை இவர்கள் காதில் வாங்கிக்கொள்வதே இல்லை என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இதுபோன்ற படங்களில் சினிமாவுக்கான குறைந்தபட்ச இலக்கணம்கூட இருப்பதில்லை. இந்தப் படங்களை யாரும் வாங்கவோ வெளியிடவோ முன்வருவதில்லை. இந்தக் கோபத்தில் சொந்த ரிலிஸ் செய்யும் இந்த சினிமா ஆர்வலர்களின் படங்களைக் கண்டால் ரசிகர்கள் ஓட்டமெடுக்கிறார்கள்.

தீர்மானிக்கும் வெற்றி

பணத்தைக் கொண்டு படமெடுத்து, அதில் நடித்துப் புகழை வாங்கிவிடலாம் என்று வரும் குபீர் நட்சத்திரங்கள், இயக்குநர்கள் எடுக்கும் படங்களில் ஒரு சில ஆச்சரியமளித்தாலும், இவற்றில் அறிமுகமாகும் பெரும்பாலான நட்சத்திரங்களுக்கு நடிப்பு பற்றி எதுவும் தெரியாது. நாயகன் மண் வாசனையுடன் இருப்பார். அல்லது பருத்தி வீரன் கார்த்தி மாதிரி தாடி மீசையுடன் பயமுறுத்துவார். இத்தகைய நாயகர்களுக்கு ஜோடி தேடி, பல லட்சங்களைச் செலவழித்து, மும்பை, டெல்லி, பஞ்சாப், லூதியானா என்று சுற்றி, மாடல்களை அழைத்து வந்து கதாநாயகி ஆக்குவார்கள். இருவரும் இடம்பெறும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சுடச்சுட வெளியாகி ரசிகர்களைக் கிச்சு கிச்சு மூட்டும். கதாபாத்திரத்துக்கான நட்சத்திரத் தேர்வு என்பதே இந்த வகைப் படங்களில் இருக்காது.

புகழை வாங்க நினைப்பவர்கள்

சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் “கடந்த ஆண்டு வெளியான 164 படங்களில் 180 புதுமுக நடிகர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் எத்தனை பேர் மேலே வந்திருக்கிறார்கள்? இந்த எண்ணிக் கையை நினைத்துப் பாராட்டுவதா, பயப்படுவதா என்று தெரியவில்லை” என்றார். இதற்கு என்ன காரணம்?

டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு 30 லட்சம் இருந்தால் ஒரு படத்தைத் தயாரித்துவிடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஓரளவு செலவு செய்யும் சக்தி படைத்த பலர், தங்களது பிள்ளைகளை நடிகர் களாக்கி அழகுபார்க்க ஆசைப்பட்டுப் படமெடுக்க வருகிறார்கள். இன்னும் சிலர் இயக்குநர் ஆகி குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிலர் முதல் படத்திலேயே டாம் க்ரூஸ் அளவுக்கு ஆக் ஷன் ஹீரோ ஆகிவிட நினைக்கிறார்கள். சினிமா தயாரிக்கவும், நடிக்கவும், இயக்கவும், விநியோகம் செய்யவும் அனுபவம், பயிற்சி தேவை என்பதைப் பற்றி இவர்கள் அலட்டிக்கொள்வதே இல்லை.

என்னதான் கோதுமை நிற அழகிகளைக் கதாநாயகி ஆக்கினாலும் இத்தகைய படங்கள் ஓடுவதில்லை. காரணம், அழுத்தமான கதையோ, திரைக்கதையோ, காட்சிப்படுத்தலோ, இல்லாததுதான் காரணம். தொழில்நுட்ப விஷயங்களும் குப்பையாக இருக்கும். இதனால் இந்தப் படங்களில் நடிக்கும் அறிமுக நட்சத்திரங்களில் திறமைசாலிகள் சிலர் அறிமுகமானாலும் அவர்களுக்கும் ரசிகர்களின் கடைக்கண் பார்வை கிட்டாமலேயே போய்விடுகிறது. சிறு முதலீட்டுப் படத்தின் வெற்றியும், சாதகமான விமர்சனங்களும் மட்டுமே அவற்றில் அறிமுகமாகும் நட்சத்திரங்களின் பயணத்தைத் தீர்மானிக்கிறது. திறமையான நட்சத்திரங்கள் என்றாலும் படம் கவனம் பெறாமல் போய்விட்டால், அடுத்த வாய்ப்பு தேடி வருவதில்லை; தேடிப்போனாலும் கிடைப்பதில்லை. போதிய அனுபவத்துடன், பொருத்தமான நட்சத்திரத் தேர்வுடன் எடுக்கப்படும் சிறு முதலீட்டுப் படங்கள் தோல்வியடைந்தாலும் அதில் அறிமுகமான நட்சத்திரங்களும் மீண்டும் தலையெடுக்க முடிவதில்லை. இதற்குப் ‘பத்தாயிரம் கோடி’ படத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

விளம்பரமும் பேனரும்

ஆனால் இந்த வகையிலிருந்து விலகித் திரையுலகப் பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து அறிமுகமாகும் எல்லோரையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மிகப் பெரிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அறிமுகமாக வேண்டும். படம் வெளியாகும்போது அவர்களுக்கு மாநிலம் முழுவதும் விளம்பரப் பலகைகள் அமைக்க வலு வேண்டும், ரசிகர் மன்றம் அமைக்க வேண்டும், ஊடகங்களின் கவனத்தைக் கவர வேண்டும். இப்படியெல்லாம் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தால்தான் கவனம் பெற முடியும். கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், ஏ.ஆர். முருகதாஸின் தம்பி திலிபன் உட்படப் பலர் இந்தப் பாணியில் ரசிகர்களைச் சென்று அடைந்துவிட்டாலும், ‘புத்தகம்’ படம் மூலம் அறிமுகமான ஆர்யாவின் தம்பி சத்யா, ‘வெள்ளச்சி’யில் அறிமுகமான பாண்டு மகன் பிண்டு, ‘விழா’ படத்தில் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன், ‘பொன்மாலைப் பொழுது’ ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் படத்தின் தோல்வியாலும், படங்களுக்குப் போதிய விளம்பரம் இல்லாததாலும் ரசிகர்களை எட்ட முடியாமல் போய்விட்டது. வாரிசுக் கதாநாயகிகளில் ராதா மகள் துளசி மட்டும் தப்பிவிட்டார்.

அறிமுகப் படமும், அதன் பிறகு கிடைக்கும் ஒரு சில படங்களும் தோல்வி என்றால், கதாநாயகிகள் அதிரடியாகத் தேர்வு செய்யும் அடுத்த பாதை, திருமணம் அல்லது படிப்பு. ராட்டினம் பட நாயகி சுவாதி, 555 மிரித்திகா, விழா பட நாயகி மாளவிகா மேனன் என்று பலர் இதற்கு உதாரணம்.

தேறியவர்கள்

ஓரளவு கவனம் பெற்ற சிறு முதலீட்டுப் படங்களில் கவனம் பெற்று ஓரளவு காலூன்றிக்கொண்டவர்களும் உண்டு. ‘நேரம்’ நிவின் பாலி, ‘பீட்சா 2’ அசோக் செல்வன், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ , ‘மத்தாப்பு’ ஜெயன், ‘குறும்புக்காரப் பசங்க’ சஞ்சீவ், ‘நேரெதிர்’ பார்த்தி, ‘சூது கவ்வும்’ சஞ்சிதா ஷெட்டி, ‘அழகன் அழகி’ ஆருஷி, ‘கௌரவம்’ யாமி கௌதம், ‘புத்தகம்’ ராகுல் ப்ரீத் சிங், ‘இவன் வேற மாதிரி’ சுரபி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

ஆனால் ‘கள்ளத் துப்பாக்கி’, ‘ஹரிதாஸ்’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் அறிமுகமான குழந்தை நட்சத்திரங்களுக்கு அதன் பிறகு வாய்ப்பில்லை. இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் சோகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்