திரை விமர்சனம்: குறையொன்றுமில்லை

சமூக மாற்றத்துக்கான கருத்துகளை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. வணிக அம்சங்கள் நிறைந்த படத்தில் கருத்துச் சொல்வதற்கும், வணிக அம்சங்களைச் சிறிதும் கலக்காமல் மாற்றத்துக்கான திரைப் படத்தை உருவாக்குவதற்கும் வேறுபாடு இருக்கிறது. இதில் குறையொன்றுமில்லை இரண்டாவது ரகம்.

வெயிலிலும் மழையிலும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைக் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்கிறார்கள். அவை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாகக் கவர்ச்சிகரமான பேக்கிங் மூலம் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வரு கின்றன. உற்பத்தி செய்த விவசாயிகளால் வாங்கக்கூடிய விலையில் பொதுச் சந்தையில் அவை இல்லை. இதில் கொழுத்த லாபம் அடைவது இடையில் இருப்பவர்கள்தான். வணிக உலகம் நினைத்தால் விவசாயி களை இந்த வியாபார நெட்ஒர்க்கில் இணைத்துக்கொள்ள முடியும். விவசாயி களைத் தொழில்முனைவோர்களாகவும் உயர்த்த முடியும் என்ற பொருளாதார முன்மாதிரியைத் திரைக்கதையாக்கியிருக் கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் ரவி.

நாயகன் கிருஷ்ணா (கீதன்) ஒரு மார்க் கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்கிறான். பால்யத்தை கிராமத்தில் கழித்து, பிறகு மாநகரத்தில் படித்து வளர்ந்தவன். கிராமத் தின் ஆன்மா தெரிந்ததாலோ என்னவோ, விவசாயிகளுக்கு பொருளாதார உதவி செய்து அவர்களை சொந்தக் காலில் நிற்கவைத்தால் நிறுவனத்தின் விற்பனையை கிராமங்களிலும் எட்டலாம் என்ற திட்டத்தை முன்வைக்கிறான். தனது உயரதிகாரியால் இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டாலும், நிர்வாகி ஒருவர் கொடுக்கும் ஊக்குவிப்பால் இந்த திட்டத்தை முன்னெடுத்துச்செல்லத் தனது சொந்த கிராமத்துக்கு வருகிறான். தனது பால்ய நண்பன் கண்ணனுக்கும் இன்னும் சிலருக்கும் பயிற்சியளிக்கிறான். அங்குள்ள மருத்துவமனையில் மூன்று மாத முகாமுக்காக வருகிறார் பெண் டாக்டர் சங்கீதா (ஹரிதா). கிருஷ்ணாவும் சங்கீதாவும் நண்பர் களாகிறார்கள்.

கிராமத்துப் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து, போதிய மருத்துவ ஊழியர்கள் இல்லாத மருத்துவமனையில் அவர்களை செவிலியர்களாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறான் கிருஷ்ணா. முதலில் சங்கீதாவும் தலைமை மருத்துவரும் மறுத் தாலும், கிருஷ்ணாவின் விடாமுயற்சியால் ஒப்புக்கொள்கிறார்கள். கிருஷ்ணா மீது சங்கீதாவுக்குக் காதல் பிறக்கிறது. கிருஷ்ணா வந்த வேலையை கவனிக்க ஆரம் பிக்கிறான். ஆனால் அவனது திட்டத்துக்குத் திடீர் தடங்கல் ஏற்படுகிறது. கிருஷ்ணா - சங்கீதா காதலுக்கும் சிக்கல் வருகிறது. கிராமத்தை நேசிக்கும் கிருஷ்ணா தனது கனவை நனவாக்கி காதலையும் காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா என்பது மீதிக் கதை.

நல்ல நோக்கம், அதைச் சொல்ல நல்ல கதையமைப்பு இரண்டும் இருந்தும் படம் ஆயாசமூட்டுகிறது. இரண்டரை மணி நேரப் படம்தான் என்றாலும், ஐந்து மணி நேரம்போலத் திரைக்கதையை நிறையவே இழுத்துவிட்டார்கள். ஒரு அழகான கிராமம், அங்கே வாழும் யதார்த்தமான எளிய மனிதர்கள், அதேபோல மாநகரில் ஒரு கார்ப்பரேட் அலுவலகம் அதற்குள் இருக்கும் அரசியல் என யதார்த்தமாகக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் கதையை விரைவாக நகர்த்தவேண்டும் என்பதை மறந்துவிட்டு, கதாபாத்திரங்களை அழுத்தமாகச் சித்தரிப்பதிலும், அவர்கள் உறவு நிலைகளிலும் அதிக கவனம் செலுத்துகிறார். ஒரு கட்டத்தில் கதையின் மையக்கரு பின்தங்கிப்போய் கிருஷ்ணா - சங்கீதா காதல் ஓவர்டோஸாகி விடுகிறது.

படத்தில் பாராட்ட வேண்டிய அம்சங்கள் பல. முதலில் அடிப்படையான வாழ் வாதாரப் பிரச்சினையை இயக்குநர் எடுத்துக் கொண்டது. அடுத்து நட்சத்திரத் தேர்வும் அவர்கள் நடித்திருக்கும் விதமும். யாருமே புதுமுகங்கள் போலத் தெரியவில்லை. படத்தின் பிரச்சினையே திரைக்கதைதான். முக்கிய பிரச்சினையைப் பேசும் படங்கள் மெதுவாகத்தான் நகரவேண்டும் என்ற அணுகுமுறைகூட க்ளிஷேதான். கதையை வேகமாக நகர்த்தியிருந்தால் தரமான படங்களின் வரிசையில் இது அடையாளம் காணப்பட்டிருக்கும்.

வணிக அம்சங்களைக் கலக்காமல் மாற்றத்துக்கான திரைப்படத்தை உருவாக்கு வது நல்ல முயற்சி. ஆனால் வணிக சமரசங்கள் இல்லாமலேயே ஒரு கதையைச் சுவையாகச் சொல்ல முடியும் என்பதை இயக்குநர் நம்பியிருந்தால் குறையொன்றும் இருந்திருக்காது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE