எண்ணங்கள்: திரும்பிப் பார்க்க வைத்த திரிஷ்யம்

டிசம்பர் 19ஆம் தேதி வெளிவந்து ஒரு மாதமாகக் கேரளாவில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் படம் திரிஷ்யம். மசாலாத்தனம் எதுவும் இல்லாமல், ஒரு படம் மாபெரும் வெற்றி அடைய முடியும் என்பதை மீண்டும் நிரூபித்த படம். இப்படத்தின் சிறப்பைப் பாராட்டி திரிஷியம் இயக்குநர் ஜிது ஜோஸப்புக்கு கே. பாலசந்தர் கடிதம் அனுப்பியுள்ளார்.

திரிஷியம் படத்தின் கதை என்ன?

ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு அனாதை. ரியல்எஸ்டேட் தொழில்மூலம் முன்னேறி, தற்போது ராஜக்காட் என்ற சிறிய நகரில் லோகல் கேபிள் டிவி நடத்திவருபவர். ராணி (மீனா) என்ற பெண்ணைக் காதலித்து மணக்கிறார். அவர்களுக்குப் பிளஸ்டூ படிக்கும் அஞ்சு, மூன்றாம் வகுப்பு படிக்கும் அனு என இரு பெண் குழந்தைகள். ஜார்ஜ் ஒரு கறார் பேர்வழி. அனாவசியமான செலவுகள் அவருக்குப் பிடிக்காது. அவருக்குக் குடும்பத்தின் மீது அபரிமிதமான பிரியம். சினிமா மீது அளவில்லாத ஒரு மோகம். அவர் சில முக்கியமான முடிவுகளை எடுக்க சினிமாக்களை உதாரணம் கொள்ளக்கூடியவர். அவரின் குடும்பத்தாரைத் தொல்லைப்படுத்தாமல் இருக்க, பல நாட்கள் கேபிள் டிவி அலுவலகத்தில் தங்கி இரவில் சினிமா பார்ப்பவர்.

வெளியூரில் நடக்கும் பள்ளி மாணவர்களுக்கான முகாமில் அஞ்சு கலந்துகொள்கிறாள். அங்கு அஞ்சு குளிக்கும்போது சக மாணவன் வருண், குளியலறையில் கேமராவை மறைவாக வைத்துப் படம் பிடித்துவிடுகிறான். அவன், கேரள போலீசின் தலைமை அதிகாரி கீதா பிரபாகரின் மகன்.

முகாமில் இருந்து அஞ்சு வந்த மறு நாள், அவளைத் தேடி வரும் வருண், அன்று இரவு அவள் வீட்டின் பின்புற அறைக்கு வரவேண்டும் என மிரட்டுகிறான். சிறு பெண்ணான அவள் பயப்படுகிறாள். அவள் ஒத்துழைக்க மறுத்தால், வீடியோவை இன்டெர்நெட்டில் போடப் போவதாக மிரட்டுகிறான்.

வருண் அவள் வீட்டின் பின்புற அறைக்கு வந்து அவளை உறவுக்கு அழைக்கிறான். அப்போது அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக ராணியும் அங்கே காத்திருக்கிறாள். தன் மகளைக் காப்பாற்ற, அஞ்சு ஒரு சிறு பெண், அவளின் வாழ்க்கையைப் பாழாக்க வேண்டாம் எனவும், அந்த வீடியோ க்ளிப்பை நீக்கி விடுமாறும் கோருகிறாள் ராணி. வருண் மறுக்கிறான். மகள் மீது அவ்வளவு பிரியம் எனில், நீ என்னோடு உறவுகொள் என்று ராணியிடம் இளக்காரமாகக் கூறுகிறான். இதனால் கோபப்படும் அஞ்சு , ஒரு இரும்புக் கம்பி கொண்டு அவனைத் தாக்குகிறாள். அவன் மொபைல் போனையும் உடைத்துவிடுகிறாள்.

அஞ்சுவின் செயலால் ராணி அதிர்ச்சியடைகிறாள். காரணம் வருண் இறந்துவிடுகிறான். அம்மாவுக்கும் மகளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதற்றத்துடன் தொலைபேசியில் அழைத்தால், அதை எடுத்து வைத்துவிட்டு ஜார்ஜ் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து வருணின் உடலை வீட்டின் தோட்டத்தில் ஜார்ஜ் தோண்டி வைத்திருந்த குழியில் போட்டுப் புதைத்துவிடுகிறார்கள்.

மறுநாள் அதிகாலை வீட்டுக்குத் திரும்பும் ஜார்ஜ், நடந்த நிகழ்வுகளைக் கேட்டு அதிர்ச்சி அடையவில்லை, குடும்ப மானத்தைக் காக்க அவர்கள் செய்தது சரிதான் என்று சொல்லிவிட்டு, இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளி வருவது என்று ஆலோசிக்கிறார். அவர் பார்த்த பல படங்களின் புத்திசாலித்தனமான ஐடியாக்கள் மூலம் அவர்களது குடும்பம் பிரச்சினையிலிருந்து வெளிவருகிறது. இவற்றை அற்புதமாக இயக்குநர் இப்படத்தின் மூலம் நமக்குச் சொல்கிறார்.

சிறப்புகளும் சாதனைகளும்

ஜார்ஜ் குடும்பம் ஒரு கொலை செய்திருந்தாலும், அவர்கள் எந்த விதத்திலும் பிடிபடக் கூடாது எனப் பார்வையாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கும்படியாகத் திரைக்கதை சிறப்பாக உள்ளது. ஒரு குடும்பப் படத்தில், அதி புத்திசாலித்தனமான ஒரு திரைக்கதையை இயக்குனர் உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படம் 34 நாட்களில், தொடுவிழா என்ற நகரத்தில் எடுக்கப்பட்டது. இயக்குநர் படத்தின் மொத்த வசனங்களோடு தயாராக இருந்தது இதற்குக் காரணம். படத்தின் பட்ஜெட் – ரூபாய்.5 கோடி மட்டுமே. ரூபாய் 20 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான 26 நாட்களில், 10,000 காட்சிகள் இப்படம் திரையிடப்பட்டது. இது மலையாள சினிமா உலகில் ஒரு சாதனை. இப்படத்தின் மொழி மாற்று உரிமைகள் விற்கப்பட்டுவிட்டன. தெலுங்கில் பிரியா இயக்க வெங்கடேஷ் நடிக்க உள்ளார். தமிழில், விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘த டிவோஷன் ஆஃப் ஸஸ்பெக்ட் X (2005)’ என்ற மிகப் பிரபலமான ஜப்பானிய நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், இப்படத்தின் மலையாளத் தன்மை, புத்திசாலித்தனம், கதையை அளித்த விதம், கதாபாத்திரங்களின் மேன்மையான நடிப்பு அதை மறக்கச் செய்துவிடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்