சினிமாலஜி 08 - ‘அவள் ஒரு தொடர்கதை’யில் படுகொலைகள்!

By சரா

‘மேக தாக தாரா’ கதையை விவரிக்கத் தொடங்கினாள் கவிதா.

“ஒரு ஏழைக் குடும்பம். தம்பி, தங்கை எல்லாருக்குமே நீதாவின் சம்பளம்தான் வாழ்வாதாரம். அண்ணனுக்குப் பாடகனாவதே லட்சியம். கலை மீது கொண்ட மோகத்தால் குடும்பப் பொறுப்பைச் சுமக்க மறுக்கிறான். நீதா ஒற்றை ஆளாக மொத்தக் குடும்பத்துக்கும் சோறுபோடுகிறாள்.”

“ஆமா, இதே மாதிரி தானே ‘அவள் ஒரு தொடர்கதை’யும்?!” என்று ஆர்வமானான் பார்த்தா.

“ஆனா, தமிழ்ல பல படுகொலைகள் நடந்திருக்கு. நீதாவின் காதலன், அவள் தங்கையை மணப்பது பக்குவமான உணர்வுபூர்வ விஷயம். ‘அவள் ஒரு தொடர்கதை’யில ரொம்ப கேவலமா காட்டியிருப்பாங்க. ஸ்ரீப்ரியாவோட நிழல் தெரியும். அது ரொம்ப செக்ஸியா இருக்கும். அதைப் பார்த்து கவிதாவின் காதலன் திலக் கவிழ்ந்திடுற மாதிரி இருக்கும். என்ன கொடுமை இது?”

“நீதான் சொன்னியே. எடுத்தாளுறதுண்ணு. அதான் இது” என்று நக்கலாகச் சொன்னான் மூர்த்தி.

“உன் பேர்லயே அந்தப் படத்துல ஒரு கேரக்டர் இருக்கும். ஜெய்கணேஷ் நடிச்சிருப்பாரு. குடிகாரனா, உதவாக்கரையா சித்தரிச்சிருப்பாங்க. கடைசில திருந்துற மாதிரி காட்டிட்டு க்ளோஸ் பண்ணிடுவாங்க. அந்த கேரக்டர்தான் ரொம்ப ரொம்ப மட்டமான தன்மை கொண்டது. கவிதா கேரக்டரைத் தூக்கிப் பிடிக்கிறதுக்காக, அவளோட அண்ணனான மூர்த்தியோட கதாபாத்திரத்தையே கொச்சைப்படுத்தியிருப்பாங்க.”

இன்னும் நம் கவிதாவின் ஆத்திரம் அடங்குவதாக இல்லை. “உண்மையிலேயே ‘மேக தாக தாரா’வுல நீதாவை முழுசா புரிஞ்சிகிட்ட ஒரே ஜீவன் அவளோட அண்ணன்தான். தான் வெளியூர் போய்ப் பெரிய பாடகனாகிட்டு ஊருக்குத் திரும்புனதும் நீதாவோட நிலைமையைப் பார்த்துட்டுத் துடிச்சிப் போயிடுவான். காசநோயுடன் மனசு உடைஞ்சு சீர்குலைஞ்சுபோன தங்கையை அவன்தான் மீட்டெடுப்பான். எவ்ளோ அற்புதமான கேரக்டரை எப்படித்தான் அசாசினேட் பண்ண மனசு வந்துச்சோ” என்று பொங்கினாள் கவிதா.

“சரி விடும்மா, ஒருவேளை அந்த அண்ணன் தமிழ்நாட்ல பொறந்திருந்தா அப்படித்தான் இருந்திருப்பான்போல. இதல்லாம் ஒரு மேட்டரா? நம்ம சமூகச் சூழலை எவ்ளோ சிறப்பா நம்ம ‘அவள் ஒரு தொடர்கதை’ பிரதிபலிச்சுது? இதைவிட வேறென்ன வேணும்?”

“கிழிச்சிது. அதுல முதல் சீன்... நீதா வேலைக்குப் போவா. அவளோட ரப்பர் செருப்பு பிஞ்சிடும். அதை பின் குத்தி சரி பண்ணிட்டு நடந்து போவா. தமிழ்ல அதே சீனை பஸ்ல வெச்சிருப்பாங்க. நீதாவோட கதை முடிஞ்சதும், அதே மாதிரி ஒரு சீன். ஆனா, அது வேற ஒரு இளம்பெண். அதாவது, நீதாக்கள் பிறந்துட்டே இருக்காங்க. நம்ம சமூக நிலைமை அப்படியே இருக்குன்னு இதைவிட சிறப்பா எப்படிக் காட்ட முடியும்? ஆனா, தமிழ்ல அதே கவிதாவை கடைசில முதல் சீன்ல காட்டின மாதிரியே காட்டி, தன்னோட கேரக்டர் மீது மட்டும் இரக்கம் வர வைக்கிறமாதிரி ரொமான்டிசைஸ் பண்ணியிருப்பாங்க. இதான் கொடுமை” என்று சற்றே அடங்கினாள் கவிதா.

“இந்த விஷயத்துல பாலுமகேந்திரா எவ்ளோ பெட்டர்னு தோணுது. ‘ரெட்டைவால் குருவி’, ‘ஜூலி கணபதி’ மாதிரியான ‘காப்பி’யங்களை எந்த விதமாவும் சீர்குலைக்காம அப்படியே அச்செடுத்திருப்பார்” என்று கிளப்பிவிட்டான் ப்ரேம்.

“இதுல காப்பியின் உச்சம்னா, அது ‘ஜூலி கணபதி’தான். ஃப்ரேம் பை ஃப்ரேம் உருவப்பட்டிருக்கும். அந்தப் படத்தைப் பார்த்துட்டு மிரண்டு போயிட்டேன். ச்சே... பாலுடா!-ன்னு காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சி டிவில ‘மிசரி’-ன்னு ஒரு படம் பார்த்தேன். செத்துட்டேன். அப்படியே ஜூலி கணபதியை அட்ட காப்பி அடிச்சியிருந்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சுது, மிசரி ரீலீஸ் ஆனது 1990. ஜூலி கணபதி 2003” என நொந்தான் பார்த்தா.

“இன்னொரு கொடுமை... ஜூலிகணபதியில சரிதா செம்மயா நடிச்சிருப்பாங்க. அவங்களோட ஈடுபாடும் அர்ப்பணிப்பும் எவ்ளோ வேஸ்ட் ஆவுது. இந்த மாதிரியான திறமையை அசலான படத்துல காட்டுற வாய்ப்புக் கிடைச்சா அது அவங்களுக்கு ரொம்பப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்தானே!” என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னாள் மேனகா.

“உங்களை எல்லாம் பார்த்தா, பெரிய பெரிய ஜாம்பவான்களை காப்பின்னு கழுவியூத்தியே தங்களை அறிவுஜீவின்னு காட்டிக்கிற கோஷ்டியோன்னு டவுட்டா இருக்கு” என்று சூடானான் மூர்த்தி.

“அப்படி இல்லை மூர்த்தி. இங்க மட்டும் இல்லை, எல்லா நாட்டுலயுமே காப்பின்றது தொன்றுதொட்டு வந்துட்டுதான் இருக்கு. பாலச்சந்தரும் பாலுமகேந்திராவும் எப்பவுமே நாம கொண்டாட வேண்டிய லெஜெண்ட்ஸ்தான். அவங்க நமக்குக் கொடுத்துட்டுப் போன பொக்கிஷங்கள் ஏராளம். ஆனா, அவங்க கிட்டயும் இன்ஸ்பிரேஷன் - காப்பி மேட்டர்ல தடுமாற்றம் இருந்திருக்கு. அது இன்னிக்கு வரைக்கும் நீடிக்குது. அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றாள் கவிதா.

“இதெல்லாம்கூடப் பரவாயில்லை. நீங்கள்லாம் கேள்விப்படாத, தியேட்டருக்கு வந்ததே தெரியாத எவ்ளோ காப்பிப் படங்கள் இருக்கு. அதுல ரெண்டு மூணு படங்கள் பார்த்து நான் நூடுல்ஸான அனுபவங்களைக் கேட்டா, உங்க காதுல ரத்தம் வரும். அதெல்லாம் சுட்ட படத்தைப் பார்த்து சூடு போட்டுகிட்ட சொல்லப்படாத உண்மைக் கதை” - இது பார்த்தா.

மேலும் தொடர்ந்தவன், “ஒருநாள் யூடியூப்ல பெருசு-ன்ற படத்தை பார்ட் பார்ட்டா பார்த்தேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு படத்தைத் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏன் கொண்டாடலைன்னு வருத்தப்பட்டு, நண்பர்களுக்கு லிங்க் அனுப்பினேன். அதுல ஒருத்தன் என்னை வெச்சி செஞ்சிட்டான். அப்புறம்தான் தெரிஞ்சுது அது ‘சிட்டி ஆஃப் காட்’ படத்தோட ஜெராக்ஸுன்னு. அதுகூடப் பரவாயில்லை. ‘லியோன்’ படத்தைப் புரட்டிப் போட்டு ‘சூர்ய பார்வை’ன்னு அர்ஜுன் நடிச்ச படத்தைக் கூட விட்ருலாம். ஆனால், அவரோட ‘துரை’ எதுல இருந்து காப்பி அடிச்சதுன்னு சொன்னா நீங்கள்லாம் சினிமாலஜி கோர்ஸுக்கே முழுக்குப் போட்டுடுவீங்க?”

“அப்படி என்ன படம்?” என ஆர்வம் காட்டினான் ப்ரேம்.

“கிளாடியேட்டர். அது என்ன மாதிரியான படம்! அந்தப் படக் கதையை அப்படியே ராவிட்டு ‘துரை’யா எடுத்த விதம் இருக்கே... அதெல்லாம் நமக்கு வாழ்க்கைப் பாடம்டா. முடியல...” என்று புலம்பினான் பார்த்தா.

“எனக்கும் அப்படி நிறைய அனுபவம் இருக்கு. அதுல அல்டிமேட் ‘காதல் கிறுக்கன்’. ரிச்சர்டு கியர், எட்வர்ட் நார்டன் அசத்துன ‘பிரைமல் ஃபியர்’ படத்தைக் கலைச்சிப் போட்ட அந்தப் படத்துல பார்த்திபனும் வினீத்தும் நடிச்சிருப்பாங்க. செம்ம காமடி அது. ம்... இப்பவும் காப்பி போடுறது நிறைய நடக்குது. ஆனா, கொஞ்சம் நாசூக்கா நடக்குது. கடந்த சில ஆண்டுகளை எடுத்துப் பார்த்தா, நாம கத்துக்குறதுக்கு நிறைய ஸ்கோப் உள்ள மேட்டர்களும் இதுல அடங்கியிருக்கு” என்று தன் பங்குக்குக் குறிப்பு ஒன்றைக் கிள்ளிப் போட்டான் ப்ரேம்.

எல்லோரும் ஆர்வமாக இருக்க, அவனே தொடர்ந்தான். “எஸ்.பி.ஜனநாதன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கினோட சில படங்களை ரெஃபரன்ஸா எடுத்துகிட்டா, இன்ஸ்பிரேஷன்ஸ் - காப்பி பற்றி இன்னும் ஆழமா கத்துக்க முடியும்?”

“என்னது... எஸ்.பி.ஜனநாதனா?” - வாய்ப்பிளந்தான் மூர்த்தி.

அவன் வியப்பு அடங்குவதற்குள் ‘இயற்கை’, ‘பேராண்மை’ பற்றிப் பேசத் தொடங்கினான் ப்ரேம்.

தொடர்புக்கு: siravanan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்