கை போ சே: மதம் பிரித்த நட்பு

By கோ.தனஞ்ஜெயன்

இந்தி சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் கை போ சே. இந்தப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத், ராஜ்குமார் என்ற இரண்டு சிறப்பான நடிகர்கள் கிடைத்தார்கள். ‘3 இடியட்ஸ் (தமிழில் நண்பன்) படத்தின் கதாசிரியரான சேதன் பகத் எழுதி அனைவராலும் பாராட்டப்பட்ட ‘தி 3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்’ என்னும் நாவலின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை இது.

கை போ சே வின் ‘வேர்ல்ட் ப்ரீமியர் ஷோ’ 63ஆவது பெர்லின் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் நடந்தது. உலக பனோரமா பகுதியில் முதன் முறையாகத் திரையிடப்பட்ட இந்தியப் படம் இது. இதைத் தமிழில் எடுத்தால் அதில் நடிக்கப் பிரபல தமிழ் நடிகர்கள் ஆசைப்பட்டார்கள்.

படத்தின் கதை என்ன?

இஷான் பட் (சுஷாந்த் சிங் ராஜ்புத்), ஓம்கார் சாஸ்திரி (அ) ஓமி (அமித் சாட்), கோவிந்த் (ராஜ்குமார்) மூவரும் இணை பிரியா நண்பர்கள். இஷான் தாலுக்கா அளவில் வெற்றிகண்ட கிரிக்கெட் வீரன். கிரிக்கெட் ஆட்டத்தில் உள்ள அரசியலால், தகுதி இருந்தும் பெரிய வாய்ப்புகள் பெறாதவன். ஓமியின் தாய்மாமன் இந்துத்துவ அரசியல்வாதியான பிட்டு.

கோவிந்த் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையை ஆரம்பிக்கிறான். அந்தக் கடை மூலமாக விளையாட்டுப் பயிற்சி நிறுவனத்தையும் இஷான், ஓமியுடன் இணைந்து தொடங்குகிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள சிறுவர்களுக்கு இஷான் பயிற்சி தருகிறான். கடையும் நிறுவனமும் நன்றாக வளர்கின்றன.

இஷான் தன் தங்கை வித்யாவுக்கு (வித்யா பூரி) கணிதம் கற்றுத் தருமாறு கோவிந்தைக் கேட்கிறான். கோவிந்தும் வித்யாவும் காதல் வயப்பட்டு ஒரு விழா நாளில் ஒன்றாகிறார்கள்.

மூன்று நண்பர்களும், கிரிக்கெட்டில் திறமையுள்ள அலி (திக்விஜய்) என்கிற சிறுவனைக் கண்டெடுத்து, இஷான் மூலம் பயற்சி அளிக்கிறார்கள். கோவிந்த் தன் வியாபாரத்தை விரிவாக்க, புதிதாக உருவாகி வரும் ஒரு பெரிய மாலில் பிட்டுவின் பண உதவியுடன் ஒரு கடையை வாங்குகிறான். ஆனால் குஜராத்தில் ஏற்படும் பெரும் நிலநடுக்கம், அவர்களின் புதிய கடையை நாசமாக்கி கோவிந்தைப் பெரிய கடனாளியாக்குகிறது.

மாமாவிடம் வாங்கிய பணத்தை ஈடுசெய்ய, பிட்டுவின் கட்சியில் வேலை செய்யத் தொடங்குகிறான் ஓமி. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை இஷான் கூட்டி வரும்போது பிட்டுவின் ஆட்கள் தடை செய்கிறார்கள். இஷானுக்கும் ஓமிக்கும் தகராறு நடக்கிறது. அவர்கள் நட்பில் இடைவெளி விழுகிறது. எனினும், கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி காணும்போது நட்பு புதுப்பிக்கப்படுகிறது.

ஓமி கட்சிப் பணியில் தீவிரமாகிறான். கோவிந்துக்கு வித்யா ஆதரவாக இருக்கிறாள். இஷான், அலிக்குத் தீவிர பயிற்சி தருகிறான்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பிட்டு அயோத்திக்கு யாத்ரீகர்களை அனுப்பியிருந்தான். ஓமியின் பெற்றோர்களும் அவர்களில் அடக்கம். அவர்கள் திரும்பும்போது கோத்ரா ரயில் தீவைப்பில் கொல்லப்படுகிறார்கள். ஓமி அதிர்ச்சியடைகிறான். ரயிலை எரித்த முஸ்லிம்கள் மீது பகை தீர்க்க பிட்டு ஓமியைத் தூண்டுகிறான். ஓமியும் பிட்டுவின் கட்சியைச் சேர்ந்த தீவிரவாதிகளும் பெரிய கலவரத்தை உண்டாக்கி முஸ்லிம்களைக் கொல்கிறார்கள்.

பிட்டுவின் ஆட்கள் அலியின் வீட்டுக்கும் வருகிறார்கள். அலியின் தந்தைக்கும் பிட்டுவுக்கும் ஏற்படும் சண்டையில் அலியின் தந்தை பிட்டுவைக் கத்தியால் குத்திவிடுகிறார். பிட்டு சாகிறான். ஓமி கோபம் கொண்டு, துப்பாக்கியுடன் அலியின் வீட்டுக்கு வருகிறான்.

அதே நேரம், கோவிந்த் தன் தங்கை யைக் காதலிப்பதை அறிந்துகொள்ளும் இஷான், கோவிந்தை அடிக்கிறான். ஓமி அலியின் வீட்டுக்குள் நுழைந்து, அலியையும் அவன் தந்தையையும் கொல்லத் துடிக்கிறான். இஷானும் கோவிந்தும் ஓமியைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஓமி அலியைச் சுடுகையில் இஷான் அந்த குண்டைத் தன் மார்பில் வாங்கிச் சாகிறான்.

பத்து வருடம் கழித்து ஜெயிலில் இருந்து வெளி வரும் ஓமியை, கோவிந்த் அழைத்து வருகிறான். திருமணமான கோவிந்துக்கும் வித்யாவுக்கும் இப்போது ஒரு மகன். பெயர் இஷான்.

அலி, இந்திய அணியில் தேர்வு பெற்று, ஆஸ்திரேலியாவிற்கு எதிராகக் களம் இறங்குகிறான். இமானைப் போலவே ஷாட் அடித்து முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்புகிறான்.

ஓமி, கோவிந்த், வித்யா ஆகிய மூவரும் இஷானை நினைத்தபடி அதைக் கண்டு சிலிர்க்கிறார்கள்.

படத்தின் சிறப்புகள்

மூன்று நண்பர்களின் தூய்மையான நட்பு எவ்வாறு அரசியல், காதல் மற்றும் மதம் ஆகிய மூன்று காரணிகளால் கால்பந்துபோல உதைபடுகிறது என்பதை அபிஷேக் கபூர் அற்புதமாகக் காண்பித்து நம் மனதைக் கவர்கிறார்.

தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் அறிமுகமான படத்திலேயே அழுத்தமான நடிப்பால் தனக்கென ஒரு நல்ல இடத்தைப் பெற்றார்.

122 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படத்தில் நட்பு, காதல், அரசியல், விளையாட்டு, மதப் பிரிவினை, வாழ்க்கைப் போராட்டங்கள் என பல பரிமாணங்களில் கதையைப் பிரமாதமாக நகர்த்திச் சென்ற அபிஷேக் கபூர் தன்னை ஒரு முதன்மை இயக்குநராக நிலை நிறுத்திக்கொண்டார். ஃபர்தான் அக்தருடன் இணைந்து அவர் உருவாக்கிய ராக் ஆன் (2008) என்ற படத்திற்குப் பிறகு சில வருடங்கள் உழைத்து இந்தத் திரைக்கதையை உருவாக்கி மாபெரும் வெற்றி கண்டார்.

ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களாலும், ஊடகங்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இப்படம், 2013இன் முக்கியப் படங்களில் ஒன்றாக ஆனதற்கு, சேதன் பகத்தின் கதையும், அபிஷேக் கபூரின் நேர்த்தியான இயக்கமும் காரணம்.

ரூபாய் 20 கோடியில் தயாரான இந்த படம், இந்தியாவில் மட்டும் ரூ.48 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதித்தது. பல விருதுகளைப் பெற்றுவரும் இப்படம் பல வருடங்கள் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புக்கு (dhananjayang@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்