திரைப் பார்வை: சய்ராட் (மராத்தி) - அடுத்த தலைமுறையின் ரத்தச் சுவடுகள்!

By ஆசை

ஏப்ரல் மாதம் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற மராத்திப் படமான ‘சய்ராட்’ பல வகையிலும் இந்திய சினிமாவில் முக்கியத்துவம் பெறுகிறது. முதன்முறையாக நூறு கோடி வசூலைத் தாண்டிய மராத்தி மொழிப் படம் இது. மிகவும் பேசப்பட்ட படம் என்றாலும் தமிழ்நாட்டில் இந்தப் படம் வெளியிடப்படவில்லை. சினிமா ரேண்டவூ என்ற திரைப்பட ரசனைக் குழுவினரின் முயற்சியால் பி.வி.ஆர் திரையரங்கில் கடந்த சனிக்கிழமை இது திரையிடப்பட்டது.

கடந்த சாதிக்கு எதிராக ஏற்கெனவே தனது ஃபான்றி படத்தின் மூலம் பெரும் கல்வீச்சு தொடுத்த நாகராஜ் மஞ்சுளே இதிலும் தனது கல்வீச்சைத் தொடர்ந்திருக்கிறார். வழக்கமாக, சாதியத்துக்கு எதிராக எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு கிடைப்பதில்லை. அதையும் தாண்டி வெற்றிபெற்ற படங்கள் மிகச் சிலவே. தமிழில் ‘காதல்’ ஒரு உதாரணம். மராத்தியில் இப்போது ‘சய்ராட்’.

‘சய்ராட்’ என்றால் ‘கட்டுக்கடங்காத’ என்று அர்த்தம். இது கட்டுக்கடங்காத காதலை மட்டும் குறிக்கவில்லை, கட்டுக்கடங்காத சாதி வெறியையும் குறிக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் கதை ஏறத்தாழ பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ படத்தைப் போன்றதுதான். அரசியல் செல்வாக்கு, சாதி செல்வாக்கு, பணபலம் போன்றவை கொண்ட ஆதிக்க சாதிக் குடும்பத்தின் பெண் அர்ச்சனா பட்டீல் (ரிங்கு ராஜ்குரு). ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் கலே (ஆகாஷ் தொஸார்).

படத்தின் தொடக்கத்தில் அர்ச்சனா (செல்லமாக அர்ச்சி) மீது பிரசாந்த் (சுருக்கமாக பர்ஷ்யா) ஈர்ப்பு இருப்பது காட்டப்படுகிறது. பிறகு இருவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்கிறார்கள். அர்ச்சி மீது பர்ஷ்யாவுக்கு உள்ள ஈர்ப்பு அர்ச்சிக்குத் தொற்றிக்கொள்ள, அந்தக் கிராமத்துப் பின்னணியில் அவர்கள் காதல் அற்புதமான தருணங்களுடன் வளர்கிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் வெளிப்பட்டுவிட பர்ஷியா அடித்து வெளியூருக்குத் துரத்தப்படுகிறார்.

அர்ச்சிக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. அதிலிருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி பர்ஷ்யாவிடம் வந்துவிடுகிறாள் அர்ச்சி. அங்கிருந்து தப்பிச்செல்லும் அந்த ஜோடியும் நண்பர்களும் வெகு சீக்கிரமே காவல் துறையிடம் சிக்க, பாலியல் பலாத்கார வழக்கின் கீழ் பர்ஷியாவும் அவனது நண்பர்களும் கைதுசெய்து அடைக்கப்படுகிறார்கள்.

இப்படிப் பல்வேறு நெருக்கடிகளயும் வன்முறையையும் துயரங்களையும் சந்தித்தாலும் எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் நல்ல வேலை, அழகான குழந்தை என்று அவர்களின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், சாதிவெறி பிடித்த சமூகம் அவர்களை நிம்மதியாக வாழ விடவில்லை.

சாதித் திமிர் தலைவிரித்தாடும் கிராமமொன்றில் ஆதிக்க சாதிப் பெண்ணும் தாழ்த்தப்பட்ட சாதிப் பையனும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதால் முடிவு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும் என்பதால் அடுத்து ‘அது’ நடந்துவிடுமோ என்ற பயம் இடைவேளைக்குப் பிறகு நம்மைத் தொற்றிக்கொள்கிறது. முதல் பாதி கொண்டாட்டமாகக் கழிந்தாலும் பயத்தின் சுவடுகள் அங்கேயும் நமக்குத் தலைகாட்டுகின்றன.

அன்றாடம் இதுபோன்ற சாதி ஆணவக் கொலைகளைப் பற்றிப் படித்து மரத்துப்போன நமது மனங்களை இந்தப் படத்தின் முடிவு பெரிதும் திடுக்கிடச் செய்யாதுதான் (இப்போதெல்லாம் நேரடிக் காட்சிகளாகக் கூட இதையெல்லாம் ஒளிபரப்பு செய்துவிடுகிறார்கள்). ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கடைசிக் காட்சியில் அந்தக் குழந்தையின் காலடி பதிக்கும் சுவடுகள்தான். குழந்தையின் பாதங்கள் ரத்தச் சுவடுகளை ஒவ்வொன்றாகப் பதித்துக்கொண்டே செல்கின்றன.

அடுத்த தலைமுறையின் சுவடுகளிலும் நமது சாதியத்தின் ரத்தக் கறையை நாம் படியச் செய்துவிட்டோமே என்ற வலுவான குற்றவுணர்வை இதன் மூலம் இயக்குநர் நம்மிடம் ஏற்படுத்திவிடுகிறார். ஒருவகையில் அந்தக் குழந்தையைப் பார்வையாளர்களுடனும் ஒப்பிட்டுக்கொள்ளலாம். நாம் அறிந்தோ அறியாமலோ நம் கால்களிலும் கைகளிலும் ரத்தக் கறைகள் படிந்திருக்கின்றன. அடுத்த தலைமுறையினரின் பாதங்களுக்கும் இந்தக் கறைகளை நாம் கடத்திவிடுகிறோம்.

இந்தப் படத்தில் இயக்குநரின் ஆளுமைக்கு இணையாக வெளிப்பட்டிருப்பது கதாநாயகி ரிங்கு ராஜ்குருவின் ஆளுமை. துணிச்சலைக் காட்டும் காட்சிகளானாலும் சரி, காதல் உணர்வைக் காட்டும் காட்சிகளானாலும் சரி, புகுந்து விளையாடியிருக்கிறார். ‘காப்பாற்றுபவர்’ வேடத்தைப் பெரும்பாலும் ஆண்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதில் ரிங்கு ராஜ்குரு அந்த வேடத்தை ஏற்றுக்கொள்கிறார். ஆகாஷ் தொஸார் அழகான அறிமுகம். சுறுசுறுப்பும் காதலும் நிரம்பி வழிகிறது அவரிடம்.

வழக்கமாக தலித் இளைஞர் என்றால் திரைப்படங்களில் கருப்பாகவே காட்டப்படுவார்கள். இதில் அதற்கு மாறாக வெளுத்த நிறம் கொண்ட ஆகாஷ் தலித் இளைஞராகவும் மாநிறம் கொண்ட பெண் ஆதிக்கச் சாதியினராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். சமூகத்தினரால் தொடர்ந்து முத்திரை குத்திவைக்கப்படும் விஷயங்களை இப்படித்தான் மாற்ற வேண்டும்.

கொண்டாட்டமான இசை சில இடங்களில் இளையராஜாவை நினைவுபடுத்துகிறது. படத்தின் பாடல்களும் மிகவும் பிரபலமாகியிருக்கின்றன. முதல் பாதியின் மனநிலைக்கு ஏற்ப பிரகாசமான ஒளிப்பதிவும் இரண்டாம் பாதியின் மனநிலைக்கு ஏற்பச் சற்றே இருட்டான ஒளிப்பதிவும் படத்துக்கு வலுசேர்க்கிறது.

‘காதல்’ படத்துக்கும் ‘சய்ராட்’ படத்துக்கும் இடையிலான ஒப்பீடு தவிர்க்க முடியாதது. எனினும் இரண்டு படங்களுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. ‘காதல்’ படத்தின் சாதி வெறியர்கள் ‘இரக்க உணர்வு’(!) கொண்டவர்கள். தாலியை அறுத்துப்போட்டால் விட்டுவிடுபவர்கள். ஆனால், ‘சய்ராட்’ சாதி வெறியர்கள் அப்படியல்ல.

ஏனெனில் ‘சுத்த ரத்தம்’ காக்கப்பட வேண்டும் என்ற அவர்கள் ‘லட்சிய’த்துக்குக் குறுக்கே பந்தபாசத்துக்கோ இரக்க உணர்வுக்கோ இடம் இல்லை. அந்த அளவுக்குக் ‘கர்ம வீரர்’களைச் சாதியம் உருவாக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ‘உத்தம’ சாதி வெறியர்களை முழுமையாகத் தோலுரித்துக் காட்டும் படம் என்பதால் ‘சய்ராட்’ ஒரு படி மேலே நிற்கிறது.

‘சய்ராட்’ படம் பெரு வெற்றி அடைந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சிதான். அதை விட முக்கியமானது இந்தப் படம் நம் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு நீடித்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். வெறும் சினிமா ரசனை தொடர்பான ஒரு அனுபவமாக ‘சய்ராட்’ மாறிவிடக் கூடாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

40 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்