திரையை விட நாடகமே கடினமானது! - நடிகர் கணேஷ்பாபு பேட்டி

By ஜி.கனிமொழி

கவிஞர், நடிகர், இயக்குநர் எனக் கலையுலகின் பல தளங்களில் கடந்த 15 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருபவர் இ.வி.கணேஷ் பாபு. எடிட்டர் லெனின் இயக்கிய ‘ஊருக்கு நூறுபேர்’, அம்ஷன்குமார் இயக்கிய ‘ஒருத்தி’, சேரனின் ‘ஆட்டோ கிராஃப்’, ராமின் ‘கற்றது தமிழ்’ உட்பட 50-க்கும் அதிகமான படங்களில் தனது இயல்பான நடிப்பால் கவர்ந்தவர். இவரது இயக்கத்தில் வெளியான ‘யமுனா’ விமர்சகர்களின் பாராட்டினைப் பெற்றது. தற்போது ‘பனங்காட்டு நரி’. ‘இன்னும் பேரு வெக்கல’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இவருக்கு இந்திய இணையப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்திருக்கிறது.. அவரைச் சந்தித்தபோது...

கவிஞர், நடிகர், இயக்குநர் இந்த மூன்றில் எது உங்களுக்குப் பிடித்த அடையாளம்?

கவிஞர் , நடிகர் ஆகிய அடையாளங்களைக் காட்டிலும் இயக்குநர் என்ற அடையாளமே எனக்குப் பிடிக்கும். அதில்தான் நமது ஆளுமையை கற்பனைத் திறனை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். கவிஞர் பாடலாசிரியராக மாறலாம். ஒரு நாடக நடிகன் திரை நடிகராக மாறலாம். ஆனால் பாடலாசிரியரும் நடிகரும் திரையுலகில் இயக்குநரின் கீழ்தான் செயல்பட முடியும். எனவேதான் ஒரு இயக்குநர் என்ற அடையாளத்தை அதிகம் விரும்புகிறேன்.

தொலைக்காட்சித் தொடர்களில் உங்களைத் தொடர்ந்து பார்க்கமுடிகிறது. ஆனால் இப்போது சினிமாவில் எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. தொலைக்காட்சி தொடர் என்பது மீண்டு வரமுடியாத ஒருவழிப்பாதையா?

உண்மைதான். ஆனால் தொலைக்காட்சி தொடர்கள் எனக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளன. எனக்கு முக்கியக் கதாபாத்திரம் அமைந்த ‘ஆனந்தப் புறத்து வீடு’ திரைப்படம் நான் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. எனவே மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் தஞ்சம் அடைந்தேன். திரைப்படங்களில் நான் தோற்று நின்றபோது எனக்கு கை கொடுத்து உதவியது இந்தத் தொலைக்காட்சி உலகம்தான். தொலைக்காட்சி மட்டுமல்ல; சினிமாவை நேசித்து வரும் பலருக்கும் கூட அதுவும் மீண்டு வரமுடியாத ஒருவழிப் பாதைதான்.

நாடகத் துறை அனுபவங்கள் உங்கள் திரை நடிப்புக்கு எந்த அளவுக்கு உதவியது?

நாடகத்துறை சினிமாவை விடக் கடினமானது. மேடை நாடகங்களில் பல சவால்கள் நிறைந்திருக்கும் மேடையில் சினிமாவைப் போல் ரீடேக் போகமுடியாது. வசனங்களை நினைவில் வைத்து, காட்சியின் சூழலுக்கு ஏற்றத் தொனியில் சரியான உச்சரிப்புடன் பேசிப் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டியிருக்கும். இதற்கு ஞாபக சக்தி தேவை. தொடர்ச்சியான நாடக அனுபவம் நமது ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வரும்போது திரை நடிப்பு மிகவும் எளிதாக இருக்கும். இயக்குநருக்கு பிடித்தமான நடிகர்களாக நம்மால் இயங்கமுடியும்.

கடந்த 15 ஆண்டுகளாக பல இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம்தான் உங்களை இயக்குநர் ஆக்கியதா?

உதவி இயக்குநராக வேலைசெய்வதை விட ஒரு நடிகராய் இயக்குநரிடம் சுலபமாக நெருங்கிப் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும். ஏகலைவனாக இருந்து பல இயக்குநர்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அதுவே எனக்கு இயக்குநராகும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

தற்போது இந்திய இணையப் பல்கலைக் கழகம் உங்களைக் கவுரவித்திருப்பது பற்றிக் கூறுங்கள்?

கடந்த 25 ஆண்டுகளாகக் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் தொடர்ந்து இயங்கி வந்தமைக்காகப் பெங்களூருவில் செயல்பட்டுவரும் அமைதிக்கான இந்திய இணையப்பல்கலைக் கழகம் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. . மாட்டு வண்டிகள் கூட நுழையாத கிராமங்களில் என் பாட்டு வண்டிகள் நுழைந்தது என்று பணிவோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். அரசுத் திட்டங்கள் பற்றி விளக்கிச் சொல்லும் விழிப்புணர்வுக்காக அவற்றைப் பற்றி நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் வடிவில் பல கிராமங்களுக்கு எடுத்துக்கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறேன்.

தவிர இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டுப்புறக் கலைகளை வடமண்டலப் பண்பாட்டு மையம் மூலமாக வடமாநிலங்களிற்கும் கொண்டு சேர்த்திருக்கிறேன். தொலைக்காட்சி, சினிமா இயக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒரு கால இடைவெளியில் இந்தக் கலாச்சாரப் பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்