திரைப் பாடம் 2 - பொருளாதார விடுதலைக்கானப் போராட்டம் பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

திரைப்படங்கள் மூலம் வாழ்வியல்/ நிர்வாகப் பாடங்கள் நடத்தலாம் என்று மேனேஜ்மெண்ட் தியேட்டர் எனும் அமைப்பை நான் நிறுவியபோது என் மாணவர்கள் பரிந்துரைத்த முதல் படம் ‘பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’.

வில் ஸ்மித் மற்றும் அவரது மகன் சிறுவன் ஜேடன் ஸ்மித் இருவரும் சேர்ந்து நடித்த இந்த வெற்றிப் படம் அவார்டுகளையும் வசூலையும் அள்ளியது. இது நிஜக்கதை என்பதாலும் உலகின் எந்த மூலையில் உள்ளவரும் உணர்வுபூர்வமாக நெருங்கக்கூடிய கதை என்பதாலும் இந்த வெற்றி வியப்பைத் தரவில்லை.

அப்படி என்ன கதை?

போணியாகாத மருத்துவக் கருவியைத் தூக்கிச் சுமக்கும் விற்பனைக்காரன் நாயகன். மனைவியின் சொற்ப வருமானத்தில் மகன் ப்ளே ஸ்கூலில் படிக்கிறான். தனது பொருளாதார விடுதலை, திருமணத்தையும் மகனது எதிர்காலத்தையும் காப்பாற்றும் என்று நம்புகிறான். ஆனால் கை வைத்த அனைத்திலும் தடை, தோல்வி, நஷ்டம்.

மனைவி, பிரிய மகன் ஆகியோரைப் பார்க்கும் பொறுப்பும் கூடுகிறது. ஒரு முதலீட்டு ஆலோசகருக்கான பயிற்சியில் சேர நினைக்கிறான். உதவித்தொகைகூட இல்லாத அந்தப் பயிற்சியில் மிகுந்த பாடுபட்டுச் சேர்கிறான். மகனின் கனவைச் சிதைக்காமல் இல்லாமையிலும் உற்சாகம் காட்டுகிறான். தங்குமிடம் இல்லாமல் ரயிலடி கழிப்பறையில் மகனை மாயக்கதை சொல்லித் தூங்கவைக்கும் காட்சியைக் கண்ணீர் சிந்தாமல் காண்பது கடினம்.

ரத்த தானம் கொடுத்துப் பெற்ற பணத்தில் மகனுக்கு மிட்டாய் வாங்கித் தருவதும், இலவச முகாமில் மகனை மட்டும் தங்க வைத்து உறங்க வைத்து வெளியே வருவதும், திருடிப் போன ஆளைத் தேடி ஓடி, இருக்கும் பொருளையும் துறப்பதும், காசு இல்லாமல் டாக்ஸி டிரைவரிடம் தப்பி ஓடுவதும் என ஒவ்வொரு நெருக்கடி நிகழ்வையும் அத்தனை உயிரோட்டமாய்ப் படம் ஆக்கியிருப்பார் இயக்குநர் கேப்ரியல் மக்கினோ.

பல வசனங்கள் ஆழமான கவிதைகளுக்கு இணையானவை.

“அம்மா உங்களைப் பிரிய நான் தான் காரணமா?” என்று மகன் குற்ற உணர்ச்சியுடன் கேட்க, “அம்மா பிரிய அம்மாதான் காரணம்” என்கிறார் தந்தை.

மற்றொன்று தந்தை மகனிடம் சொல்வது. “க்ரிஸ், உன்னால் முடியாது என்று யார் சொன்னாலும் அதை நம்பாதே. நானே சொன்னாலும் நம்பாதே. யாருக்காகவும் உன் கனவுகளை இழக்காதே!”

ஆக் ஷன் ஹீரோவான வில் ஸ்மித்தை நாயகனாக ஆக்கியதும், அவரிடம் சோகத்தின் அதிர்வுகளுடன் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் இதமாக வெளிக்காட்ட வைத்ததும் இயக்குநரின் அபார வெற்றி எனக் கொள்ளலாம்.

கடைசியில் வெற்றி பெறும் நாயகன் அமெரிக்காவின் மிகப்பெரும் பங்குத்தரகு நிறுவனராக ஆகிறான். நிழல் நாயகன் தன் மகனுடன் நடந்து செல்கையில் நிஜ நாயகன் அவர்களைக் கடந்து செல்வதுடன் முத்தாய்ப்பாக முடிகிறது படம்.

கதை 80களின் தொடக்கத்தில் நடக்கிறது. அதை மிகத் தத்ரூபமாகக் காட்டுகின்றன கதை அமைப்பும் கலை இயக்கமும்.

யாருக்கான படம்?

தோல்வி மன நிலையில் உள்ளவர்கள் இந்தப் படம் பார்த்து வெளியே வருகையில் சிறிது நம்பிக்கை துளிர்க்கப் புன்னகைப்பார்கள். இந்தப் படத்தைப் பல முறை என் கருத்தரங்குகளில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முடிவில் அப்படி ஒரு கைத்தட்டல் கிடைக்கும்.

தன்னைத் தவிர அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைக்கும் ஆரம்பக் காட்சி முதல் தனக்கு வேலை கிடைத்ததாக அறியும்போது பொங்கும் கண்ணீரை அடக்கிக் கொண்டு கூட்டத்தின் இடையே நடனமாடியே தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் உச்சக் காட்சிவரை கார்ட்னராகவே வாழ்ந்திருப்பார் வில் ஸ்மித்.

ஏழ்மை, இல்லாமை, தோல்வி இவற்றை ஜெயித்துக் காட்டும் கதைகள் பெரும்பாலும் திரையில் வெற்றிபெறும் எனும் சூத்திரம் பலருக்குத் தெரியும். இதற்குச் சமீபத்திய உதாரணம் தமிழில் வெற்றிபெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’!

இப்படத்தைப் பரிந்துரைக்கக் காரணம் இது ஒரு உலகளாவிய கதை. பல கதைகள் கொண்ட கதை. பன்னாட்டு வியாபார விளையாட்டில் பகடைக் காயாகத் திரியும் விற்பனைக்காரன் என்று ஒரு கதை. பொருளாதாரத் தோல்வியால் நல்ல மனைவியை தக்கவைத்துக் கொள்ள முடியாத கணவன் என ஒரு கதை. தன் தகப்பன் போல் இல்லாமல் ஒரு பொறுப்பான தந்தையாக இருக்க வேண்டும் எனத் தன் மகனுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஊட்டும் அன்புத் தந்தை என ஒரு கதை. வீடு இல்லாத மனிதர்களின் வலியைச் சொல்லும் கதை எனப் பல கதைகள் இதில் செதில் செதிலாக அழகாகச் சிக்கல் இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கின்றன.

விறுவிறுப்பான திரைக்கதை, நகைச்சுவையும் நம்பிக்கையும் தோய்ந்த வசனங்கள், அற்புதமான பாடல்களும் இசைக் கோர்ப்பும், உயிரோட்டமான நடிப்பும் ஒரு நிஜ வாழ்க்கையை அற்புத சினிமாவாக ரசவாதம் செய்திருக்கின்றன.

சந்தோஷத்தைத் தேடிப்போகும் வாழ்க்கையில் நம்பிக்கைதான் ஆதார சக்தி. எந்த நிலையிலும் அதை இழக்காதவர்கள் தொடர்ந்து போராட உரம் பெறுகிறார்கள். வாழ்க்கையை ஜெயிக்கிறார்கள்.

இது தமிழில் செய்யத்தக்க படம். காப்புரிமை பெற்றுத் தயாரிக்கலாம். அல்லது இந்தக் கதையின் அடி நாதத்தில் நம் தமிழ் சூழலுக்கு ஏற்ற ஒரு உன்னதமான படைப்பைத் தரலாம். இங்குள்ள நடுத்தர வர்க்கப் போராட்டங்களும், கல்வி/ தொழில் சிக்கல்களும் பதிவு செய்யப்பட வேண்டியவை. அதிக செலவு இல்லாமல் ஒரு உலக சினிமா எடுக்கலாம்.

நாயகனாக யார் நடிக்கலாம்? என் தேர்வு பிரபு தேவா அல்லது பார்த்திபன்!

தொடர்புக்கு
Gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்