உலக அளவில் ‘பாகுபலி 2' 1500 கோடியைத் தாண்டி வசூலித்துவருகிறது. அப்படத்துக்கு ‘கான்செப்ட்' ஓவியங்கள் வரைந்த விஸ்வநாத் சுந்தரம் தற்போது கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சங்கமித்ரா' படத்துக்கான கான்செப்ட் ஓவியங்களையும் வரைந்துள்ளார். ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியிருக்கும் பரபரப்புக்கு மத்தியில், அது பற்றிய எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாத விஸ்வநாத், மீண்டும் ஒரு பிரம்மாண்ட வரலாற்றுப் படத்தில் பணியாற்றும் மகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசினார்...
நீங்கள் பணிபுரிந்த ‘பாகுபலி 2' படத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளதே...
ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. படக்குழுவின் உழைப்புக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு உண்மையாக உழைக்கிறோமோ, அதற்காக அங்கீகாரத்தையும் சரியான முறையில் செய்துவிடுவார் ராஜமௌலி சார். ‘பாகுபலி' இரண்டு பாகங்களும் சேர்த்து, நிறைய புதுமையான காட்சிகள் படத்தில் இடம்பெற்றன. அதைப் படம் பார்க்கும்போதே உணர்ந்திருப்பீர்கள். எந்தவொரு காட்சியுமே தேவையில்லாமல் இருக்காது. எனக்கு வரையும்போதே அவ்வளவு புதுமையாக இருந்தது.
‘சங்கமித்ரா' வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
சாபுசிரில் சாரிடம் ஒரு படத்தின் கதையைக் கூறி சம்மதிக்கவைப்பது மிகவும் கடினம். ‘பாகுபலி’யில் பணியாற்றியக் கொண்டிருந்தபோது,“அடுத்து ஒரு படம் இருக்கிறது. அதுவும் இதே மாதிரி ஒரு ஃபேண்டஸி கதைதான். அட்டகாசமான போர்க் களக் காட்சிகள் இந்தக் கதையிலும் இடம்பெற்றிருக்கின்றன. ‘பாகுபலி' பணிகள் முடித்தவுடனே, அந்தப் பணிகளைத் தொடங்கிவிடலாம்” என்றார்.
கதாசிரியர் பத்ரி ஒரு நாள் அறிமுகமாகி முழுக் கதையும் நடித்துக்காட்டிக் கூறினார். அவ்வளவு அற்புதமாகச் சொன்னார். இரண்டு பாகத்தின் கதைகளையும் கூறியவுடனே, ஒவ்வொரு காட்சியுமே மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஜெயம் ரவி, ஆர்யா இருவருமே போர் வீரர்கள். இருவருக்குமான காட்சியமைப்புகளுமே பிரமிக்க வைத்தன. முடியாட்சி இருந்த காலகட்டத்தில் ஒரு அரசாங்கத்தின் உள்ளே எப்படியெல்லாம் சூழ்நிலைகள் இருக்கும் எனக் கூறியபோது, நிறைய சவால்கள் நிறைந்த படம் என்பதை உணர்ந்தேன். 'பாகுபலி' படப் பணிகள் முடிந்தவுடனே, இப்படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டோம். அரங்கு அமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடந்துவருகின்றன.
‘பாகுபலி' படத்தோடு ஒப்பிடும்போது, ‘சங்கமித்ரா' எப்படி?
இப்படமும் அந்தளவுக்குப் பிரம்மாண்டமான படம்தான். இரண்டையும் ஒப்பிட்டால் ஒன்று 'மகாபாரதம்' என்றால் மற்றொரு ‘ராமாயணம்' எனலாம். அது வேறொரு களம், இது வேறொரு களம். ‘பாகுபலி' மாதிரியான படம்தானே என்று ரசிகர்களுக்கு ஒரு குழப்பம் இருப்பது உண்மைதான். ஆனால், காட்சிகளாகப் பார்க்கும்போது வித்தியாசம் தெரிந்துவிடும். படத்தின் டீஸர், ட்ரெய்லரைக் காணும்போது ரசிகர்களின் மனம் கண்டிப்பாக மாறிவிடும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
நீங்கள் வரைந்த ‘சங்கமித்ரா' ஓவியங்கள், பிரசித்தி பெற்ற கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன…
கான் திரைப்பட விழாவில் வெளியிடப்போகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்த அளவுக்கு அவற்றை ஸ்கிரீன் செய்வார்கள் என நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷப்பட்டேன். வெளிநாட்டுப் பத்திரிகைகளில் நான் வரைந்த ஓவியங்களை வெளியிட்டிருந்தார்கள். இந்த மாதிரி செய்யப்போகிறோம் என்று சொல்லியிருந்தால், இன்னும் பிரமாதப்படுத்தியிருக்கலாமே என்று நினைத்தேன்.
ராஜமெளலி - சுந்தர் .சி இருவருடைய காட்சியமைப்புகளை எப்படி ஒப்பிடுவீர்கள்?
பத்ரி சாரிடம் கதை கேட்டுவிட்டு, சாபு சாரும் நானும் படத்தின் வடிவமைப்புகள் அனைத்தையும் முடிவுசெய்து வருகிறோம். ராஜமெளலி சாரின் எண்ண ஓட்டத்துடன் இணைந்து பணியாற்ற எனக்கு ஏழு மாதங்கள் ஆனது. ஒவ்வொரு ஓவியத்தையும் அவர் ஒகே செய்யும்போதுதான், காட்சியே இதுதானா என்று தோன்றும். அவர் எனது பணிக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் சொல்வார். படமாகப் பார்க்கும்போதுதான் இந்த ஓவியத்தை இதற்குத்தான் கேட்டிருக்கிறார் என்று தெரியும்.
சுந்தர்.சி சாரோடு இன்னும் காட்சியமைப்புக்கான விவாதம் தொடங்கவில்லை. ஓரிரு முறை சந்திருந்தாலும், முழுமையாக இன்னும் அவரோடு பணிபுரியும் சூழல் அமையவில்லை. படப்பணிகள் முழுவீச்சில் தொடங்கியவுடன் அவருடைய பணிபுரியும் முறை தெரிந்துவிடும்.
உங்களுடைய பணிக்குச் சிற்பக் கலை என்பது மிகவும் முக்கியம். அதை எங்கிருந்து கற்றீர்கள்?
எனது கணினியில் நிறைய சிற்பங்களின் ஒளிப்படங்களை வைத்துள்ளேன். அது எனது பொழுதுபோக்கு. எந்த ஊரில் எந்தக் கோவிலில் அல்லது கட்டிடத்தில் உள்ள சிற்பம் என்பதை விவரத்துடன் பதிந்துவைத்துள்ளேன். சிற்பக் கலை சம்பந்தமான முகநூல் பக்கங்களை விருப்பத் தேர்வுசெய்து வைத்துள்ளேன். எனது வாழ்நாள் லட்சியமே நம் ஊரில் உள்ள அனைத்துக் கோயில்களின் சிற்பங்களையும் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். பணி இல்லாதபோது இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து சிற்பங்களைக் காண வேண்டும். எனது ஓவியங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமே கோயில் சிற்பங்கள்தான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago