விலக்க இயலாத நெருக்கமும் விளக்க முடியாத இடைவெளியும் கொண்ட கணவன் மனைவி உறவு அந்தரங்கமானது; ஆத்மார்த்தமானது. அந்த உறவுக்கென மரபு சார்ந்த சில நியதிகளும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. தனி மனித மனம் விதிமுறைகளை மீறவே யத்தனிக்கும். இரு நபர்களுக்கிடையேயான அந்த உறவில் மூன்றாம் நபர் குறுக்கிடும்போது ஏற்படும் விரிசல் அல்லது விரிசல் காரணமாக மூன்றாம் நபர் உள்நுழைதல், சிக்கலுக்கும் அதே நேரத்தில் படைப்புக்கும் அடித்தளமிடும். ஆகவே, அதனடிப்படையில் அநேகப் படங்களை இயக்குநர்கள் உருவாக்கிவிடுகிறார்கள்.
சில நிர்ணயங்களுக்குள் வாழ்வதும் ஒரு வாழ்க்கை, சில நியதிகளை மீறி வாழ்வதும் ஒரு வாழ்க்கை. மீறிய இவர்கள் புதிய வார்ப்புகள் என்ற வாக்கியங்களுடன் நிறைவுபெறும், பாரதிராஜா திரைக்கதை இயக்கத்தில் தயாரான ‘புதிய வார்ப்புகள்’ (1979) படம். இந்தப் படத்தில் தன் மனைவி ஜோதியின் (ரதி) கழுத்தில் சுருக்குக் கயிறு போன்று தான் கட்டிய தாலியை அறுத்தெறிந்து, அவளை அவளுடைய காதலன் சண்முகமணியுடன் (கே.பாக்யராஜ்) அனுப்புவான் அமாவாசை (கவுண்டமணி). ஆர். செல்வராஜ் கதை எழுதிய இந்தப் படத்தின் வசனம் கே. பாக்யராஜ்.
அறுத்தெறியப்படும் தாலி
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இதே பாக்யராஜ் ‘எண்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும் ஆனால், உங்கள் மனைவி எனக்குக் காதலியாயிட்டு வராது’ என்று ‘அந்த 7 நாட்க’ளில் வசனம் பேசுவார். இது வெளியானது 1981-ல். பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1991-ல் வெளியான ‘புதிய ராகம்’ படத்தில் ஒருவருடைய மனைவியான பின்னரும் ஒரு பெண் தன் காதலருடன் இணைந்துவிடுவாள். ‘அந்த 7 நாட்க’ளில் பெண்ணின் பெருமையாக, மண்ணின் மகிமையாகப் போற்றப்பட்ட மஞ்சள் நிறத் தாலி, இந்தப் படத்தில் மலம் போல் டாய்லெட் கோப்பைக்குள் மூழ்கடிக்கப்படும். இதைத் தயாரித்து இயக்கியவர் நடிகை ஜெயசித்ரா. இது அவருடைய முதல் படம். இளையராஜாவின் இசையில் வெளியான இந்தப் படத்துக்கு ஜீவனளித்ததில் இசைக்கு முக்கியப் பங்குண்டு.
‘புரியாத புதிர்’ (1990) படத்தில் சந்தேகப்படும் கணவனாக நடித்த ரகுவரன் ‘புதிய ராக’த்திலும் அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் வெளியான ‘தொட்டாற்சிணுங்கி’யிலும் ரகுவரனுக்கு இதே போன்ற வேடம்தான். ‘புதிய ராகம்’ பட நாயகியான, பாடகி ஜெயசித்ராவின் வருமானத்தில் வாழும் ரகுவரனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை.
அனைத்தையும் தாலிக்காகப் பொறுத்துக்கொண்ட ஜெயசித்ராவால் அவன் தன் கர்ப்பப் பையை அறுத்தெறிந்ததை மட்டும் தாங்கிக்கொள்ள முடியாமல், தாலியைத் துச்சமாக மதித்து - அதையும் அவன்தான் அறுத்தெறிவான் - தூக்கி எறிந்துவிட்டுத் தன் காதலனுடன் வாழ வருவாள் நாயகி. கணவன் மனைவி உறவில் காதல் இல்லாமல் போகும்போது அங்கே விரிசல் உண்டாகிறது. இந்தக் காதலின் அவசியத்தை அழகாக உணர்த்தும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் வெளியான ‘த பிரிட்ஜெஸ் ஆஃப் மேடிசன் கவுண்டி’. தன் வாழ்நாளில் நான்கு நாட்கள் மட்டுமே நீடித்த காதல் நினைவுகளிலும் காதலன் ஞாபகங்களிலும் எஞ்சிய வாழ்நாளையே கழிக்கும் மனைவியின் கதை அது.
கணவனைப் பங்குபோடும் மனைவி
இயக்குநர் கே .ரங்கராஜ் இயக்கிய முதல் படமான ‘நெஞ்சமெல்லாம் நீயே’ (1983) படத்தில் கணவன் மனைவிக்கிடையேயான விரிசல் காரணமாகக் காதல் காணாமல்போகும். ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது’ என்னும் சங்கர் கணேஷின் பாடல் வழியே இந்தப் படத்தை எளிதில் நினைவுகூரலாம். ‘ஒரு மனைவி எதை வேண்டுமானாலும் பங்கு போட்டுக்கொள்வாள் ஆனால், தன் கணவனைப் பங்குபோட மாட்டாள்’ என்ற ஐதீகத்தைப் புறந்தள்ளிய படம் இது.
இதில் தன் தோழிக்காகத் தன் கணவனையே தந்துவிடுவாள் ஒரு மனைவி. தான் நேசித்து மணந்தவன் தன் தோழியின் கணவன் என்பதை அறிந்து உயிரையே விட்டுவிடுவாள் ஒரு பெண். தான் நேசிக்கும் மனைவியின் விருப்பத்துக்காக அவளுடைய தோழியை மணக்கச் சம்மதிப்பான் ஒருவன். யதார்த்தத்தில் சாத்தியப்படாத அசாத்திய விஷயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை. இதன் வழியே கணவன் மனைவி உறவு குறித்த பரிசீலனை மேற்கொள்ளப்படும்.
கே.பாக்யராஜின் ‘மௌன கீதங்க’ளில் ஒருமுறை மற்றொரு பெண்ணை நாடிய கணவனை விட்டு விலகிவிடுவாள் ஒரு மனைவி. திரும்பவும் அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்ற திரைக்கதை வழியே கணவன் மனைவி உறவில் மேற்கொள்ள வேண்டிய சில சமரசங்களைச் சுட்டிச் செல்வார் பாக்யராஜ். கே.ரங்கராஜின் ‘உன்னை நான் சந்தித்தேன்’ (1984) படத்தில் தன் மேல் சந்தேகப்படும் கணவனின் போக்கு பிடிக்காமல், எந்தத் தவறும் செய்யாத அந்த மனைவி கணவனை விட்டு விலகிவிடுவாள்.
அவள், தன் மனைவியின் நினைவில் வாழும் குடிகார மனிதர் ஒருவருடைய குழந்தையின் நல்வாழ்வுக்காக அவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பாள். அவர் இறந்த பின்னர் அந்த மகளுக்காகத் தன் பூவையும் பொட்டையும் இழப்பாள். அதே கோலத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு தன் கணவனைச் சந்திப்பாள். அதன் பின்னர் அவள் வாழ்வு என்ன ஆனது என்பது எஞ்சிய திரைக்கதை.
குறுக்கீடாக வரும் உறவு
எந்த நாடானாலும் தன் மனைவி மற்றொரு மனிதரின் கருவைச் சுமந்தால் அவளுடைய கணவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாதுதான்போல. ரஷ்யப் படமான ‘த பேனிஷ்மெண்’டில் (2007) ‘தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால், அந்தக் குழந்தை உன்னுடையதில்லை என்றும் ‘ஒரு மனைவி தன் கணவனிடம் கூறுவாள். அதைக் கேட்டு நொறுங்கிப்போவான் அந்தக் கணவன். ஏற்கெனவே அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் வேறு இருக்கும். இந்த நிலையில் இந்த விஷயத்தை எப்படி அணுகுகிறான் என்பதை அந்தப் படம் திரைக்கதையாக விரித்திருக்கும்; அதன் முடிவோ அதிர்ச்சி தரத்தக்கதாக இருக்கும்.
இந்தப் படத்தை இயக்கிய ஆந்த்ரேய் ஜயஜிந்த்சேவின் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தின் காட்சிக் கோணங்களும் படத்தின் பின்னணியில் ஒலிக்கும் சப்தங்களும் படமாக்கப்பட்ட நிலக் காட்சிகளும் கட்டிடங்களும் கதாபாத்திரங்களின் மவுனங்களும் காட்சியின் இடையே நீளும் அமைதியும் இவை எல்லாமும் சேர்ந்து கதாபாத்திரங்களின் உணர்வை அப்படியே பார்வையாளர்களுக்குள் ஊற்றும்.
கடந்த ஆண்டில் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் ஆஸ்கர் வென்ற ‘த சேல்ஸ்மேன்’ (2016) படத்திலும் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே குறுக்கீடாக வந்துசேர்ந்த ஒரு மனிதரால் நேரும் அலைக்கழிப்பே திரைக்கதையாகியிருக்கும். திரைப்படங்களின் வாயிலாக நாம் காணும் கணவன் மனைவி உறவை வைத்துப் பார்க்கும்போது, உலகின் எல்லாப் பகுதிகளிலும் கணவன் மனைவி உறவு என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிக்கல்களைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
ஆனால், நமது உறவுகளில் முக்கிய இடம் பெறும் மஞ்சள், குங்குமம், தாலி, பூ போன்ற விஷயங்களைப் பிற நாட்டுப் பார்வையாளர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது.
தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
50 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago