பூமியைக் காக்கும் விளையாட்டு

பூமிக்கு வெளியில் மனிதனின் குடியேற்றம், வேற்று கிரகவாசிகளின் தாக்குதல்கள் போன்ற விஷயங்கள் குறித்துப் பேசும் ஹாலிவுட் படங்கள் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'ஆப்டர் எர்த்', 'எலிசியம்' போன்ற படங்களின் வரிசையில் நவம்பர் மாதம் வெளியாக உள்ள படம் 'என்டர்ஸ் கேம்'. 1984இல் இதே பெயரில் வெளிவந்த ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாவலை எழுதிய ஆர்சன் ஸ்காட் கார்டு, அறிவியல் புனைகதைகளுக்காக மட்டுமின்றி அரசியல் கட்டுரைகள், சமூகம் தொடர்பான விமர்சனங்களுக்காகப் புகழ்பெற்றவர்.

விண்வெளியின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வரும் வேற்றுக் கிரகவாசிகள், பூமி மீது கடுமையான தாக்குதல் நடத்துகின்றனர். இரண்டு முறை நடந்த ஏலியன் படையெடுப்புகளில் பெரிய பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்கின்றனர். மீண்டும் தாக்குதல் நடந்தால் அதை எதிர்கொண்டு முறியடிப்பது எப்படி என்ற தயாரிப்பில் பூமியில் வாழும் மக்கள் ஈடுபடுகின்றனர். மனித குலத்தை அழிவிலிருந்து காப்பாற்ற அறிவுக்கூர்மை மிக்க சிறுவனால்தான் முடியும் என்று முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சிறுவனைத் தேர்வு செய்ய, விண்வெளியில் ஒரு பயிற்சிப் பள்ளியும் நடத்தப்படுகிறது. இறுதியாக என்டர் விக்கின் என்ற சிறுவன் வேற்றுக் கிரகவாசிகளை எதிர்த்துப் போரிடும் வீரனாகத் தேர்வு செய்யப்படுகிறான். மாபெரும் வீரரான மேஸர் ராக்காமின் இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அச்சிறுவனிடம் வழங்கப்படுகிறது. கூச்சம் நிறைந்த அந்தச் சிறுவன் தனது நுட்பமான அறிவால், போர் தொடர்பான தொழில்நுட்பங்களை விரைவில் கற்கிறான். பூமியைக் காக்கத் தயாராகிறான்.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹாரிஸன் போர்டு, பென் கிங்க்ஸ்லி போன்ற பெரிய தலைகளும் நடித்துள்ளனர். 'ஸ்டார் வார்ஸ்' பட வரிசைக்குப் பின்னர் ஹாரிசன் போர்டு நடித்துள்ள விண்வெளி தொடர்பான படம் இது.

நாயகன் என்டர் விக்கின் பாத்திரத்தில், ஆஸா பட்டர்பீல்டு என்ற 16 வயதுச் சிறுவன் நடித்துள்ளான். மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய 'ஹியூகோ' படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த சிறுவன் இவன். 'ட்ரூ கிரிட்' படத்தில் தந்தையைக் கொன்றவனை ரேஞ்சர்களின் துணையுடன் பழிவாங்க அலையும் பிடிவாதச் சிறுமி வேடத்தில் நடித்த ஹெய்லி ஸ்டேன்பெல்ட் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தை இயக்கியுள்ள கேவின் ஹூட், 'எக்ஸ் மென் ஆரிஜின்: வோல்வரின்' படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர்.

விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கும் திறன் கொண்ட இயக்குநர் பிரசித்தி பெற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள இப்படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE