திரை விமர்சனம்: அனேகன்

By இந்து டாக்கீஸ் குழு

வீடியோ விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் மதுவுக்கு (அமைரா தஸ்தூர்) முந்தைய ஜென்மங்களின் நினைவுகள் அடிக்கடி கிளர்ந்தெழுகின்றன. புதிதாக வேலைக்குச் சேரும் அஸ்வினை (தனுஷ்) பார்த்ததும் மதுவுக்கு முன் ஜென்மத்துக் காதலன் நினைவுக்கு வருகிறான். முந்தைய ஜென்மங்களில் அவர்கள் காதலுக்கு என்ன நடந்தது, இந்த ஜென்மத்தில் என்ன நடக்கிறது, முன் ஜென்மத்தின் தொடர்ச்சி இப்போது எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் அனேகன்.

முதல் காதல் 60-களில் பர்மா, இரண்டாம் காதல் 80-களில் சென்னை வியாசர்பாடி, மூன்றாம் காதல் தற்காலத்தில் சென்னை. முதலாவதுக்கும் இரண்டாவதுக் கும் முன்னும் பின்னுமாக நிகழ் காலம் காட்டப்படுகிறது. இடை யிடையே கார்ப்பரேட் நிறுவன மர்மங்களும் தலைகாட்டுகின்றன. பர்மாவின் காட்சிகளும் அதற்குப் பின் வரும் நடப்புக் காட்சிகளும் விறுவிறுப்பாக உள்ளன. இடை வேளைக்குப் பின் வரும் வியாசர் பாடி காதல், ரசிகர்களைத் துள்ளிக் குதிக்கவைக்கும் அளவுக்கு மாஸ்.

வியாசர்பாடி காதல் வெளிப் படும்வரை விறுவிறுப்பாகப் போகும் படம் அதன் பிறகு யூகிக்கக் கூடிய காட்சிகளுடன் தடுமாறுகிறது. மறுஜென்மக் கதைக்குள் நடப்புலக நிகழ்வை மர்மக் கதைபோலச் சேர்த்துக்கொண்டு வருவது நல்ல யோசனைதான். ஆனால் அதைக் கையாண்ட விதத்தில் அழுத்தம் இல்லாததால் இதுவே பலவீனமாக மாறுகிறது. ஒரு வழியாக முடிவை நோக்கி வரும்போது நீண்ட வசனங்கள் குறுக்கிட்டு ஆயாசமூட்டுகின்றன.

திரைக்கதை முடிச்சுகள் பார்வை யாளர்களை உற்சாகப்படுத்து கின்றன. காதலர்கள் திரும்பத் திரும்ப பிறந்து வருவதைப் போலவே பிறரும் திரும்பப் பிறந்து வந்தார்களா இல்லையா என்பதைக் கையாண்ட விதம் ஆர்வமூட்டும் விதத்தில் உள்ளது. யாரெல்லாம் நாயகியைத் திரும்ப அடையாளம் கண்டுகொண்டார்கள், வில்லனால் நாயகியை அடையாளம் காண முடிந்ததா என்பதைப் புதிய வண்ணத்தில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள். வில்லனை யூகிக்க முடியாதபடி நகர்த்திச் சென்றதும் பாராட்டத்தக்கது.

வெவ்வேறு ஜென்மங்களில் விரி யும் கதையில் கதாபாத்திரங்களும் காலகட்டங்களும் சித்தரிக்கப்பட் டுள்ள விதம் புத்துணர்ச்சி தருகிறது. பர்மா காட்சிகள் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் முடிந்தாலும் அதில் வரும் காதல் ரசனையுடன் காட்டப் படுகிறது. வியாசர்பாடி காட்சிகளில் தனுஷை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

தனுஷுக்குள் இருக்கும் நடிகனையும் நட்சத்திரத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்தும் இன்னொரு படம் இது. வெவ்வேறு தோற்றங்களில் வெவ்வேறு பேச்சு, வெவ்வேறு உடல் மொழி என்று தனுஷ் கலக்கியிருக்கிறார். வியாசர் பாடி காளியாக அவர் அறிமுகமாகும் காட்சியில் விசில், கைத்தட்டல் சத்தங்கள் அடங்க வெகு நேரமாகிறது. காதலில் உருகுவதிலும் நெஞ்சை அள்ளுகிறார். கடைசிக் காட்சியில் கார்த்திக்கின் பாணியிலேயே அவரைக் கலாய்ப்பது ரசிக்கும்படி உள்ளது.

படத்துக்கு ‘அனேகி’ என்று வைத் திருக்கலாம். அந்த அளவுக்கு அமைரா தஸ்தூர் தன் பாத்திரங் களை நன்கு கையாண்டிருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அமைரா காட்டியிருக்கும் வேறுபாடு ஆச்சரியமூட்டுகிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் குறைந்துவரும் நிலையில் அழகும் நடிப்புத் திறமையும் கொண்ட அமைராவுக்கு வலுவான வேடம் கொடுத்துள்ள ஆனந்தைப் பாராட்ட வேண்டும்.

கார்த்திக்குக்கு இதைவிட அழுத்தமான மறு பிரவேசம் அமையுமா என்பது சந்தேகம்தான். மென்மையும் வன்மமும் கொண்ட கலவையை அவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம்.

வெவ்வேறு இடங்கள், மாறுபட்ட காலகட்டங்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியிருப்பதில் ஒளிப்பதி வாளர் ஓம் பிரகாஷின் பங்களிப்பு அற்புதம். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘டங்கா மாரி’க்குத் திரை யரங்கமே கூத்தாடுகிறது. மற்ற பாடல்கள் அந்த அளவுக்குக் கவர வில்லை. பின்னணி இசை பொருத் தம். ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குநர் கிரணின் பங்களிப்பும் படத்துக்குப் பெரும் பலம். குறிப்பாக வியாசர்பாடி சார்ந்த காட்சிகள்.

மறு ஜென்மத்தின் தொடர்ச்சி யாய் இந்த ஜென்மத்தின் சிக்கல் கள் என்பதே விறுவிறுப்பான திரைக் கதைக்கான பொருத்தமான களம் தான். இதைக் கவனமாக வளர்த் தெடுக்கும் இயக்குநர் நடப்பு கால கட்டத்துக்கான மர்மங்களை ஏன் சேர்க்கிறார் என்று புரியவில்லை. இந்தப் பகுதி நேர்த்தியாகவும் சொல்லப்படவில்லை என்பதால் மதிப்பைக் கூட்டுவதற்குப் பதில் குறைக்கிறது. அகலக் கால் வைக் காமல், எடுத்துக்கொண்ட கதையை வலிமைப்படுத்துவதில் ஆனந்த் கவனம் செலுத்தலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்த விமர்சனத் தைச் சேர்க்க முனையும் ஆனந்த் அதை மட்டையடியாகச் சொல்வ தும் நியாயமாகப் படவில்லை.

கதைக் களம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தமிழ் சினிமா கதாநாயகன் அசாதாரணமான சாகஸங்களைச் செய்வதில் சளைக்காதவன் என்ற செல்லரித்த கோலிவுட் கோட்பாட்டுக்கு இந்தப் படமும் விதிவிலக்கு அல்ல. தனுஷ் தனது எல்லா ஜென்மங்களிலுமே சாகஸக்காரராக இருக்கிறார். ஒரு ஜென்மத்திலாவது ஹீரோயிசத்தின் சுமையைக் குறைத்திருக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்