சமைத்தவன் வேதனை மிகவும் கொடியது: விஜய் சேதுபதி பேட்டி தொடர்ச்சி

By கா.இசக்கி முத்து

உங்கள் சமீபத்திய பேட்டிகளில் பொதுநலம் சார்ந்த கொந்தளிப்பு தெரிகிறதே என்று கேட்டு பேட்டியைத் தொடர்ந்தேன் பளிச்சென்று பதில் வந்தது.

என்னிடம் அந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் சொல்கிறேன். என்னிடம் ஏன் இந்த மாதிரிக் கேள்வி கேட்கிறீர்கள் என்று கேட்டேன். உங்களைப் போன்றவர்களிடம்தான் கேட்க முடியும் என்றார்கள். என்னை மதித்து கேள்வி கேட்டால், நான் பதில் சொல்லியாக வேண்டும்.

பேரறிவாளன், காவிரி பிரச்சினை குறித்துக்கூடப் பேசினீர்கள். இது அரசியல் - சமூக விவகாரங்களிலும் தொடருமா?

பேரறிவாளன் அண்ணன் பற்றி நண்பர் மூலம் அறிந்தேன். நீங்கள் பேசினால் நல்ல ரீச் கிடைக்கும் என்றார் நண்பர். அப்படியா நல்ல விஷயம், பேசலாமே என்று பேசினேன். இப்போதும் சிறையில் இருக்கிறார். அதைப் பற்றி சொல்வதில் எனக்கு என்ன தயக்கம்? இந்தச் சமூகத்தின் சகமனிதன்தானே பேரறிவாளனும். அவருடைய பெயரே என்னை ஆச்சரியப்படுத்தும். பேரறிவாளன் என்ற பெயருள்ள பிள்ளையை அற்புதம்மாள் என்ற தாயார் பெற்றெடுத்துள்ளார். அவரை வெளியே கொண்டுவரப் பலர் போராடிவருகிறார்கள். சினிமாக்காரன் என்பதால்தான் வெளிச்சம் வந்து விழுகிறது. என்னைவிட இதைப் பற்றி பேசி, உளப்பூர்வமாகப் போராடிவரும் நிறைய பேர் களத்தில் இருப்பவர்கள்.

சின்னப் படங்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்குமா?

சின்னப் படம், பெரிய படம் என்று சொல்வதே தப்பு. நீங்கள் படத்தின் பொருட்செலவைக் குறிப்பிடலாம். எனக்குக் கிடைத்துள்ள பெயரும் செல்வாக்கும் என் படங்கள் மூலம் கிடைத்தவை. அதிகளவில் விளம்பரப்படுத்தும் அளவுக்கு நான் இன்னும் எந்தப் படமும் நடிக்கவில்லை. அப்படி இருந்தும் நான் நடிக்கும் படங்கள் வரவேற்பு பெறுகின்றன என்றால், அது கதையாலும் இயக்குநராலும்தான். ஒரு படத்தின் சிந்தனையும் உள்ளடக்கமும் கொடுக்கிற உத்வேகமும் வசூலும்தான் அதைப் பெரிய படமாக எனக்குக் காட்டுகின்றன.

சில படங்கள் முழுமையாகத் தயாராகியும் வெளியாகாமல் இருக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

படம் வெளியாகாமல் இருக்கிறதே என்பதை விட, அப்படத்துக்குப் பின்னால் சில நிஜக் கதைகள் நடக்கும். அவற்றை வெளியே சொல்ல முடியாது. அதைக் கேட்டால் திரையுலகில் இப்படி நடக்கிறதா என்று நினைப்பீர்கள். சமைத்ததை வீட்டில் பூட்டிவைக்காமல், அதைப் பரிமாறி நிறை குறைகளைத் தெரிந்துகொள்வதில்தான் சுகம் இருக்கிறது. அதுதான் சமைத்தவனின் சந்தோஷம். பரிமாறப்படாமல் இருந்தால் உள்ளே இருந்து கெட்டுப் போய்விடும். சமைத்தவன் வேதனை மிகவும் கொடியது. இயக்குநர் ஆத்மார்த்தமாக உள்ளே இறங்கி வேலை செய்கிறார். ஒரு தயாரிப்பாளர், நடிகர் உள்ளிட்டோர் அதை நம்புகிறார்கள். கூட்டு ஆன்மாவோடு சினிமா ஒவ்வொரு சினிமாவும் உருவாகிறது. அது தேங்கி நிற்கும்போது கிடைக்கும் வலி அதிகம். ஆனால், அதற்காக வருத்தப்பட்டு உட்கார்ந்தால், அடுத்த நிலைக்குப் போக முடியாது.

குறும்படங்களைத் தயாரித்து இளைஞர்களை ஊக்குவிக்கும் எண்ணம் உள்ளதா?

ஒரு படம் தயாரிப்பதற்கு நான் தாங்க வேண்டும். ஒரு கடனை அடைத்து, மீண்டும் படம் செய்து, அது வெளியாக வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பேன் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியும். ஆனால், அது பொய்யாக இருக்கும். எனக்காகத் தோன்றினால் செய்வேன். ஏற்கெனவே அடிபட்ட காயங்கள் இருக்கிறது. புண்ணோடு சண்டையில் குதித்தால் மறுபடியும் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலில் மருந்து போட்டுக்கொள்கிறேன். புண் சரியான பிறகு முடிவு செய்யலாம்.

‘மக்கள் செல்வன்' பட்டம் ஏன்?

என் குருநாதர் சீனு ராமசாமி அன்புகொண்டு வைத்தது. “எல்லாருக்கும் உன்னை பிடிச்சிருக்குடா, அதனால்தான் வைத்தேன்” என்று காரணம் சொன்னார். இப்போது மக்களும் அந்தப் பெயரை வைத்து என்னை அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். முதலில் கூச்சப்பட்டேன், இப்போது நன்றாக இருக்கிறது. “ ‘மக்கள் செல்வன்’ என்ற பெயர் சும்மா வைக்கலடா.. நீயே பின்னாளில் ஏதாவது ஒரு செயலைப் பண்ணும்போது, இந்தப் பெயர் உன்னைத் தடுக்க வாய்ப்பிருக்கிறது. பெரிய பொறுப்பை உனக்கு இந்தப் பெயர் கொடுக்கும்” என்று குருநாதர் சொன்னதை முக்கியமான கருத்தாக எடுத்துக்கொண்டேன்.

‘தென்மேற்கு பருவக்காற்று' உருவாகாமல் இருந்திருந்தால் விஜய் சேதுபதியின் தற்போதைய நிலை எப்படி இருந்திருக்கும்?

தெரியவில்லை. டைம் மிஷின் இருந்தால் கொடுங்கள், பின்னால் போய்விட்டு வந்து சொல்கிறேன். அதை அலசி ஆராய்வது எல்லாம் தேவையில்லாதது. வாழ்க்கை எப்போதுமே நமக்கு வாய்ப்புகளோடு வரும். ஒவ்வொரு இடத்திலும் போய் முட்டும்போது, இடதா, வலதா, நேராகவா என்று கேட்கும். அதில் நாம் எதைத் தேர்ந்தெடுத்துப் போகிறோம் என்பது நம் கையில் உள்ளது. இப்படிப் போய்க்கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் அவ்வளவுதான் உனக்கு என்ற நிலை வரும்போது, பெட்டியைக் கட்டிக்கொண்டு போய்விட வேண்டியதுதான்.

‘தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்காக நடிகர் அண்ணன் அருள்தாஸ் என்னை அழைத்துப் போவதற்கு முன்பு, “ஏப்ரல் 4-ம் தேதி முதல் படப்பிடிப்பு. இன்னும் நாயகன் முடிவாகவில்லையாம். நீங்க போய் பாருண்ணே” என்று நண்பன் பெனிட்டோ சொன்னான்.

‘‘ஒரு வாரத்தில் நடக்கவுள்ள படப்பிடிப்புக்கு நான் எப்படிடா நாயகன், வாய்ப்பே இல்ல’’ என்று சொன்னேன். ‘நான் மகான் அல்ல' படப்பிடிப்பில் அருள்தாஸ் அண்ணனோடு பழக்கம் ஏற்பட்டு, சீனு ராமசாமி சாரிடம் என்னை அழைத்துச் சென்றார். அதன் பின் எல்லாம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்