ரோட்டுக்கடையில் சாப்பிட்ட கதாநாயகி

By ஆர்.சி.ஜெயந்தன்

“கையில் நூறு ரூபாய் கூட இல்லாத நெருக்கடி. செல்போனில் உள்ள நண்பர்களின் எண்களை ஸ்குரோல் செய்து யாரிடம் பணம் கேட்கலாம் என்று தேட ஆரம்பித்தேன். 25 ஆண்டுகால நண்பர் ‘கலைக்கோட்டுதயம்’ எண் கண்ணில்பட்டது. உடனடியாக அவருக்கு போன் செய்தேன். நேரில் வாருங்கள் என்றார். ‘அண்ணே உங்களுக்கு நான் ஏதாவது செய்தே ஆகவேண்டுமே! சின்ன பட்ஜெட்டில் எனக்கொரு படம் இயக்கித் தாருங்கள். இதை முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். உதவி கேட்கச் சென்ற என்னை, இயக்குநராக உயர்த்திவிட்டார்” என்று நெகிழ்வுடன் பேச ஆரம்பித்தார் பிரபல பத்திரிகையாளர் முத்துராமலிங்கன். ‘சினேகாவின் காதலர்கள்’ திரைப்படம் பற்றி ‘தி இந்து’வுக்காக அவரிடம் பேசியதிலிருந்து…

பத்திரிகையாளர்கள் சினிமா இயக்க வருவதன் பின்னணியில் இருக்கும் பொதுவான காரணம் என்ன?

பத்திரிகையாளரானால் சினிமாவில் நுழைய ஒரு வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம் முக்கிய காரணம். அது உண்மையும் கூட. அதேநேரம் சினிமா நோக்கமே இல்லாமல் பத்திரிகையில் தடம்பதித்து பிறகு சினிமாவுக்குள் நுழைந்தவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பிலுமே திறமையும் முயற்சியும் இருப்பவர்களை திரையுலகம் கொண்டாடியிருக்கிறது.

இதில் நீங்கள் எந்தவகை?

சினிமாவை நேசித்தே நான் சென்னையில் அடியெடுத்து வைத்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கும் சினிமாவுக்கும் நெருக்கமான பந்தம் உண்டு. நானும் அந்தக்கல்லூரியின் மாணவன்தான். இளங்கலை முடித்த கையோடு அரசு திரைப்படக்கல்லூரியில் சேர சென்னை வந்தேன். டைரக்‌ஷன் பிரிவில் இடம் கிடைக்காததால் நடிப்புப்பிரிவில் சேர விண்ணப்பித்தேன். நடிகை எம்.என்.ராஜம்தான் தேர்வாளர்.

என்னை நடித்துக் காட்டச் சொன்னார். நான் நடிக்க ஆரம்பித்ததும் அவர் தூங்கிவிட்டார். டிஎஃப்டி கனவு கலைந்ததைத் தொடர்ந்து பத்திரிகைத் துறையில் நுழைந்தேன். ஒரு முன்னணி நாளிதழிலும், பிறகு நக்கீரன் வார இதழிலும் வேலை செய்தேன். அதைத் தொடர்ந்து ரமேஷ்செல்வன் இயக்கிய ’அதர்மம்’, ‘பகைவன்’, ‘தடயம்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். உதவி இயக்குநராக இருந்தால் ஊதியம் கிடைக்காது. ஆனால் அவன்தான் படப்பிடிப்புக்கு முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக செல்பவன்.

உதவி இயக்குநர் வாழ்க்கை போதும் என்று முடிவுசெய்த நேரத்தில் ‘குமுதம்’ வார இதழில் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. பத்திரிகை, சினிமா என்று 25 ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்தநேரத்தில்தான் தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர், என்னை நன்கறிந்த என் நண்பர் கலைக்கோட்டுதயம் எனக்கு இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார்.

‘சினேகாவின் காதலர்கள்’ என்று தலைப்பு வைத்ததுமே சர்ச்சை கிளம்பியதே?

ஆமாம்! ஆனால் நடிகை சினேகாவுக்கும் இந்தப் படத்துக்கும் துளியும் தொடர்பில்லை. நடிகை சினேகா எனக்கு மிகநெருங்கிய தோழி. என்னைப்பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். இப்படியொரு தலைப்பு வைக்கிறேன் என்று நானும் அவருக்குச் சொல்லவில்லை. அவரும் ஏன் இப்படியொரு தலைப்பு வைத்தீர்கள் என்று என்னைக் கேட்கவில்லை. என்றாலும் நட்புக்கு மரியாதை கொடுத்து, வெளியீட்டுக்கு முன் அவருக்கு படத்தைப் போட்டுக்காட்ட இருக்கிறேன்.

படத்தின் கதை என்ன?

கடும் தணிக்கைமுறை கொண்ட ஈரான் நாட்டு சினிமாவில் கூட அதிக எண்ணிக்கையில் பெண் இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய சினிமாவில் பெண் இயக்குநர்கள் தொடர்ந்து இயங்க முடியவில்லை. அதற்குக்காரணம் இங்கே திரைப்படத்துக்கு முதலீடு செய்பவர்கள் அத்தனைபேரும் ஆண்கள். பெண்களின் திறமைகளை குறைத்து மதிப்பிடும் போக்கே தொடர்கிறது. இதனால் ஆண்களால் காட்சிப்படுத்த முடியாத பெண் மனத்தின் ஏக்கங்களையும் உணர்வுகளையும் திரைமொழியில் கொண்டுவரவேண்டிய பெண் இயக்குநர்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டார்கள்.

இந்த வருத்தத்தோடு, ஒரு பெண் இயக்குநரின் பார்வையில் நின்று நான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். சினேகா கதாபாத்திரம்தான் திரைக்கதையின் மையம். அவளது 5 ஆண்டு கால கல்லூரி நாட்கள் வழியாக, முதல்காதல், முதல் நட்பு என ஒரு தமிழ்ப் பெண்மையின் வாழ்க்கையை, பெண் மனதின் பார்வையில் நின்று துணிச்சலாக விசாரணை செய்யும் படம் இது.

உங்கள் கதாநாயகியை எங்கே கண்டுபிடித்தீர்கள்?

நீண்ட தேடலுக்குப்பிறகு ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்த கீர்த்தி ஷெட்டி பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன். அவரைச் சந்தித்து கதைசொல்ல பெங்களூர் சென்றேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. பிறகு ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் பணியாற்றிய என் நண்பர்கள் பாஸ்கர் சக்தி, தேனி ஈஸ்வர் இருவருக்கும் போன் போட்டுக்கொடுத்தேன். அவர்கள் என்ன பேசினார்களோ எனக்குத் தெரியாது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், படப்பிடிப்பில் எந்த பந்தாவும் காட்டவில்லை. கோயம்பத்தூரில் படப்பிடிப்பு நடந்தபோது மொத்த படக்குழுவும் ரோட்டுக்கடையில் சாப்பிட்டோம். நாங்கள் படம்பிடித்த இடத்தில் ஒரு பாட்டி சாலையோரம் இட்லிகடை வைத்திருந்தார். அதில் அவரும், அவருடைய அம்மாவும் வெறும் 25 ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டு பிரேக்பாஸ்டை முடித்து விடுவார்கள். ஒரு அருவியில் படம்பிடித்தபோது 50 அடி உயரத்திலிருந்து பயப்படாமல் குதித்து நடித்தார்.

கதாநாயகி மட்டுமல்ல, உதய், அத்திஷ், ரத்னகுமார், திலக் என்று நான்கு இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறேன். அவர்களும் அப்படித்தான். எனக்கு கிடைத்த மொத்த படக்குழுவுமே பந்தா எதுவுமில்லாத ஆட்கள். ஆனந்த் ஒளிப்பதிவு செய் கிறார். ஷைஜித்குமரன் படத்தொகுப்பு செய்கிறார். என் நண்பர் இரா.பிரபாகர் இசையமைத்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இந்தப்படம் இருக்கும். அதேநேரம் கலாச்சார காவலர்களுக்கு சில காட்சிகள் அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்