வணிக ரீதியான வெற்றியை மனதில் வைத்துத் திரைக்கதை அமைப்பதில் கெட்டிக்காரர் இயக்குநர் சுந்தர்.சி. முழுநேரக் கதாநாயகனாக நடிக்கத்தொடங்கிய இவர், ஒரு கட்டத்தில் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பினார். விரைவில் வெளியாகவிருக்கும் 'முத்தின கத்திரிக்கா' படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகக் களம் இறங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தபோது…
‘வெள்ளிமூங்கா' மலையாளப் படம்தான் தமிழில் ‘முத்தின கத்திரிக்கா'வாக மாறியிருக்கிறதா?
ஆமாம்! ஆனால் எப்படி மாற்றியிருக்கிறேன் என்று கேளுங்கள். மலையாளத்தில் ஒரு படத்தின் கதையை ஒரே நேர்கோட்டில் சொல்லுவார்கள். அப்படித் தமிழில் சொல்ல முடியாது. திரைக்கதையில் காமெடி, பாடல்கள் எல்லாம் சேர்த்துச் சொல்ல வேண்டும். ‘வெள்ளிமூங்கா'வில் ஒரே ஒரு பாடல்தான். ஆனால் இதில் பல பாடல்களை இணைத்திருக்கிறோம். அக்கதையில் இருந்து 20% மட்டும் எடுத்துக் கொண்டு முழுக்க தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறோம்.
அனைவருமே தலைப்பு வேறு வைத்திருக்கலாமே என்று கேட்கிறார்கள். தலைப்பு எல்லாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற காலம் எல்லாம் போய்விட்டது. ‘முத்தின கத்திரிக்கா' கதைக்கு மிகச் சரியாகப் பொருந்தும் என வைத்தோம். நான்தான் இப்படத்தில் முத்தின கத்திரிக்காவாக நடித்திருக்கிறேன்.
ஒரு கட்டத்தில் இனிமேல் நாயகனாக நடிக்க மாட்டேன் என்றீர்கள். மீண்டும் நாயகன் வேடம் ஏன்?
நான் நடிக்கும் படங்கள் எல்லாம் நான்கு சண்டைக் காட்சிகள், நாயகியுடன் நடனம் என வழக்கமான ஒன்றாக இருந்தன. எல்லாமே ரவுடி பாத்திரமாகவே இருந்தன. குழந்தையிடம் ஒரு புது பொம்மை கொடுத்தால் சூப்பராக இருக்கிறதே என்று விளையாடும். அது போல இயக்கத்தை விட்டு நடிப்பு என்றவுடன் நல்லாயிருக்கே என நடிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பு என்பதே வெறுக்க ஆரம்பித்தது.
‘அரண்மனை', ‘அரண்மனை 2' படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில்தான் நடித்தேனே தவிர, நான் நாயகன் அல்ல. வேறு ஒரு நாயகனைக் கேட்டால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தினமும் ஒரு படம் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. அப்படி ‘வெள்ளிமூங்கா' படத்தைப் பார்க்கும் போது, மீண்டும் எனக்குள் இப்படத்தில் ஏன் நாம் நடிக்கக் கூடாது என்ற ஆசை வந்தது.
ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் இயக்கிவிட்டீர்கள். ஏன் மீண்டும் அவர்களை இயக்கவில்லை?
முன்பு நாயகன் தேதி கிடைத்தால் அவருக்காக ஒரு கதை பண்ணும் சூழல் இருந்தது. இல்லையென்றால் ஒரு தயாரிப்பாளர் வந்து இந்த நாயகன் தேதிகள் கொடுத்திருக்கிறார், படம் இயக்கிக் கொடுங்கள் என்று கேட்பார். பண்ணிக் கொடுத்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இனிமேல் என்னுடைய திருப்திக்காக மட்டுமே படம் பண்ணலாம் என்று முடிவு பண்ணினேன். ஒரு கதை எழுதி முடித்துவிட்டு, அக்கதைக்கு ஒரு பெரிய நாயகன் தேவை என்றால் போய் கேட்கப் போகிறேன். சில கதைகளுக்குத்தான் பெரிய நாயகர்கள் தேவைப்படுவார்கள். இப்போதும் கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து படம் பண்ணுகிறேன்.
‘அரண்மனை 2' படத்தில் என்னுடைய வேடத்துக்கு ஒரு பெரிய நாயகன் நான் நடிக்கிறேன் என்று கேட்டார். அவருக்காகக் கதையை நான் மாற்றியிருந்தால், கதை போயிருக்கும். அதனால் மனதைக் கல்லாக்கிக்கொண்டு வேண்டாம் என்று தெரிவித்துவிட்டேன்.
‘அரண்மனை 3' எப்போது திட்டம்?
இப்போதைக்குக் கண்டிப்பாக கிடையாது. ஆளுக்கு ஆள் பேயைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது பேயைத் தொட்டால் பேயே வந்து அடிக்கும்.
உங்களுடைய குழந்தைகளுக்கு நடிகர் மற்றும் இயக்குநரில் எந்த சுந்தர்.சி பிடித்திருக்கிறது?
கண்டிப்பாக இயக்குநர்தான். ஏனென்றால் நான் வேறு யாருடனோ டூயட் பாடினால் என் குழந்தைகளுக்குப் பிடிக்காது. படத்தில் என்னை யாராவது அடித்தாலும் பிடிக்காது. ‘தலைநகரம்' படத்தை என் குழந்தைகள் பார்க்கவே இல்லை, ஏனென்றால் அப்படத்தின் இறுதியில் நான் இறந்துவிடுவேன். திரையில் மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு நடிப்பதால் என் குழந்தைகளுக்கு அப்பாவைப் பிடிக்க மாட்டேன் என்கிறது. அவர்கள் இயக்குநர் சுந்தரைப் பார்த்துப் பழகியிருப்பதால், அதுதான் பிடித்திருக்கிறது.
பழைய படங்களை ரீமேக் செய்யும் காலகட்டம் இது. உங்களுடைய படங்களில் எதை ரீமேக் செய்யும் திட்டம் இருக்கிறது?
நானே எடுத்த படத்தை நான் கண்டிப்பாக ரீமேக் பண்ண மாட்டேன். புதிதாக யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. மற்றவர்கள் யாராவது பண்ணினால் ‘உள்ளத்தை அள்ளித்தா' பண்ணலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அப்படத்தில் கார்த்திக் சாருக்கும், கவுண்டமணி அண்ணன் வேடத்துக்கும் வேறு எந்த ஒரு நடிகரைப் போட்டாலும் எடுபடாது. அதில் அவர்கள் மட்டுமே நடிக்க முடியும்.
ஃபிலிமில் படம் இயக்கி இருக்கிறீர்கள். டிஜிட்டல் மாற்றம் உங்களுக்கு நன்மையாக இருக்கிறதா?
டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தவுடன், சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறையப் பேர் சினிமா எடுக்க வந்துவிடுகிறார்கள். பல பேருடைய வாழ்க்கை அதில் அழிந்துவருவது ஒரு வருத்தமான விஷயம். என்னை மாதிரியான இயக்குநர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது ஒரு வரப் பிரசாதம். நிறைய தவறுகளைத் திருத்திக்கொள்ள முடிகிறது. ஃபிலிம் படப்பிடிப்பு செய்யும் போது, ரீ-டேக் போனால் பயமாக இருக்கும். டிஜிட்டலில் அந்த பயம் கிடையாது. சிலர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 4 கோணத்தில் படப்பிடிப்பு செய்து எடிட்டரிடம் கொட்டிவிடுகிறார்கள். நான் ஒரு அன்னப்பறவை போல, எது நல்லதோ அதை மட்டும் எடுத்துக் கொண்டேன்.
உங்களது அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறதே…
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தை நான் இயக்குகிறேன். பெரும் பொருட்செலவில் தயாராகிறது. அப்படத்திற்கான முதற்கட்ட பணிகளில் தான் இருக்கிறேன். அனைத்தும் முடிவானவுடன் அறிவிப்பு வரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago