நடனமாடத் தெரிந்த கடவுள்

பெயின் நாட்டின் அன்டலூசியா பகுதியிலிருந்து உருவான ஸ்பானிய நாட்டுப்புற இசைவடிவம் ப்ளமெங்கோ. கிரேக்கத் தோத்திரப் பாடல்கள், ஒப்பாரிகள், ஸ்பானிய கதைப்பாட்டுகள், ஆப்பிரிக்கத் தாளங்கள் மற்றும் ஈரானிய, ரோமானிய மெல்லிசை பாடல் வடிவங்கள் சேர்ந்த கூட்டு நடன, இசை வடிவம் இது.

இந்த இசைவடிவம் குறித்து இயக்குநர் கார்லோஸ் சாரா எடுத்திருக்கும் இந்த ஆவணப் படத்திற்கு வர்ணனை எதுவும் கிடையாது. சுற்றிலும் வேறு வேறு கோணங்களில் வைக்கப்பட்ட கண்ணாடிகளால் எதிரொளிக்கப்படும், மென்மையான மஞ்சள் ஒளி பரவிய மேடை. சரிவிகிதத்தில் இருட்டு. பாடல் மற்றும் கவிதையுடன் கூடிய 13 பாடல்களைத் தொடர்ச்சியாகக் கொண்ட நடனங்கள்தான் இந்த ஆவணப்படம்.

மொழியற்ற துக்க ஓலம்போல ஆண்களும், பெண்களும் பாடத் தொடங்குகின்றனர். அழகிய யுவதிகள், தேர்ந்த ஆண் நடனக்காரர்கள், வயது முதிர்ந்த பெண்கள், ஆண் கலைஞர்கள் ஒரு சீர்மையுடன் நடுநடுவே பேச்சைப் போலக் கவிதைகளைப் பாடத் தொடங்குகின்றனர்.

நான் உன்னைத் திருமணம் செய்யவேண்டும்

வெண் புறாவே

நீ க்யூபப் பேரழகி

உனது அப்பா நம்மைப் பார்த்தால்

உன்

அம்மாவிடம் சொல்லிவிடுவார்

நான் அனுமதி கேட்பேன்

எனது வீடு ஹவானாவில் உள்ளது

அதன் கூரை தந்தத்தால் ஆனது

காலையில் எனது காபியைப் பருகி

ஹவானாவின்

தெருக்களில் பற்றவைத்த சிகரெட்டுடன் நடப்பேன்

கையில் ஒரு தினசரியை வைத்திருப்பேன்

இந்த நகரத்திலேயே பெரும் பணக்காரன்

என்று உணர்வேன்

ஒரு எளிய காதல் கவிதையின் தொனியைக் கொண்ட இந்த நடனப் பாடலில் ஒரு பெண் வெண்புறாவைப் போலப் பொன் வெயில் பின்னணியில் வெண்ணிற உடையுடன் வந்து நிற்கிறாள். கையில் ஒரு சீன விசிறி. புறா தன் சிறகுகளை விரிப்பதைப் போல விரிக்கிறாள். அடுத்தடுத்து வெண்புறாக்கள் நடனத்தில் சேர கூட்டு நடனம் தொடங்குகிறது. கால்கள், மரத்தளத்தில் மோதும் ஒலி ஒரு சீரான தாளகதியை அடைகிறது. கிடாரின் இசை, கைதட்டல் எல்லாம் சேர்ந்து காட்சியும் இசையும் சீர்மையுடன் மழைபோலப் பொழியும் பிரதேசத்துக்குப் போகிறோம். சில பாடல்கள் இசையின்றி வெறும் குரலால் மட்டுமே உச்சமான உணர்வலைகளை உருவாக்குபவை. ஒரு பகுதியில் இசைக்கலைஞர் அமர்ந்திருக்க மறு சதுரத்தில் நிழல்களும் சேர்ந்து ஆடும் அரூபமான காட்சிகளும் மனத்தோற்றங்களும் எழுகின்றன.

ஒவ்வொரு பாடலுக்கும் அரங்கத்தின் ஒளியமைப்புகளும், வண்ண விளக்குகளின் இருப்பும் மாறி வேறு வேறு கற்பனை உலகங்களில் உலவுகிறோம்.

இப்படத்தில் குழந்தைகளில் தொடங்கி, அவர்களது பெற்றோர்கள், பாட்டி, தாத்தாக்கள் வரை ஆடிப்பாடும் ப்ளெமங்கோ இசைவடிவத்தில் வயது என்பது மறக்கடிக்கப்பட்ட, கூட்டிசை அனுபவமாக ஆகிறது.

மொழியைத் தாண்டி, அதன் அர்த்தங்களைத் தாண்டி பழங்குடித்தன்மையும் கூட்டுவாழ்வின் அடையாளமுமாக இன்னும் தொடரும் கூட்டிசையின் பரிணாமங்களையும் நினைவுபடுத்தும் இசை வடிவாகப் ப்ளமெங்கோ திகழ்கிறது.

பொழுதுபோக்கும் ஆடல் பாடல்களும் விளையாட்டு வடிவங்களும் ஆதிகால வாழ்விலிருந்து பிரிக்கப்படாதவையாக இருந்தன.நவீன காலத்தில்தான் விளையாட்டு, இசை, பாடல்கள், நிகழ்த்து கலைகள் அனைத்தும் தனித்தனியாக வீட்டிலிருந்தும் வாழுமிடத்திலிருந்தும் வெளியேறித் தனித்தனியான வடிவங்களைக் கொண்டன. ஆனாலும் நாட்டுப்புற இசை வடிவங்களும், நாட்டுப்புற விளையாட்டுகளும் கூட்டுவாழ்க்கையின் ஆற்றலையும் கனவுகளையும் ஏக்கங்களையும் தன் வடிவத்தில் சேகரித்து வைத்துள்ளதோடு மட்டுமின்றி நவீன வடிவங்களிலும் உயிர்ப்புடன் அவை தொடரவே செய்கின்றன. அதன் ஒரு அடையாளம்தான் இந்த ஆவணப்படம்.

ப்ளமங்கோ என்ற இசை வடிவம் இந்தியா போன்ற நாடுகளுக்கும் லத்தீன் அமெரிக்கக் கலாசாரங்களுக்கும் இடையே உள்ள ஒத்த பண்புகளை நினைவுபடுத்துகிறது. இங்குள்ள ஒப்பாரி மற்றும் உழவுப் பாடல்களை நினைவுபடுத்துவதாக ப்ளமெங்கோவின் கவிதைகள் உள்ளன. ஒரு வகையில் ஒவ்வொரு கலாசாரத்தின் தனித்தன்மையின் வேர்களை நோக்கிச் செல்லும்போது, ஒரு பொதுப்பண்பு புலனாகிவிடுகிறது.

ப்ளமெங்கோ ஆவணப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது, நமது காதில் கைகள் சேர்ந்து ஒலிக்கும் இசையும் கால்கள் மரத்தரையில் கொட்டும் ஓசையும் வீட்டுக்கு வெளியே பொழியும் பெருமழை போலக் காதில் கேட்டபடி இருக்கும். இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கார்லோஸ் சரா. இவர் ப்ளமெங்கோ நடனத்தை மையமாக வைத்து அடுத்து இரண்டு படங்களையும் எடுத்துள்ளார். இது ப்ளமெங்கோ ட்ரையாலஜி என்றழைக்கப்படுகிறது.

ப்ளமெங்கோ இசை வடிவத்தை என் சுவாசக் காற்றே படத்தின் பாடல்களில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார். தத்தியாடுதே தாவி ஆடுதே பாடலிலும், ஜூம்பலக்கா பாடலின் தொடக்கத்திலும் இதன் சாயலைக் காண முடியும்.

நடனமும் பாடலும் மனித வாழ்விலிருந்து பிரிக்கமுடியாதவை. ஆதிகாலத்திலிருந்து அவனை உயிர்ப்புடன் வைத்திருப்பவை. “நடனமாடத் தெரியாத ஒருவரை நான் ஒருபோதும் கடவுள் என்று நம்ப முடியாது. சாத்தான் தான் நம்மைப் புவியீர்ப்பு விசையால் தரையை நோக்கி ஈர்த்தபடி இருக்கிறான். நாம் அனைவரும் கூடி நடனமாடுவோம். அதன் வழியாகப் புவியீர்ப்பு விசையை மீறுவோம்” என்ற தத்துவஞானி நீட்சேயின் கூற்றுதான் ப்ளமெங்கோ ஆவணப்படத்தைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.

படத்தை சப் டைட்டில்களுடன் பார்த்தால் பாடல்களின் அர்த்தத்தையும் தெரிந்துகொள்ளலாம். அந்த அனுபவம் இப்படத்திற்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கும். நாம் நமது வயதை மறந்து, உடலை மறந்து, தன்னுணர்வை மறந்து துயர, சந்தோஷங்களைப் பாடி, ஆடத் தொடங்குவோம். அதற்கு ஒரு துவக்கமாக இப்படம் இருக்கட்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE