திரைப் பார்வை: விதிகளை மீறும் அனைவருக்கும்... - யூ டர்ன் (கன்னடம்

By கருந்தேள் ராஜேஷ்

கன்னட இயக்குநர் பவன் குமாரின் ‘லூஸியா', சென்னையிலும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற படம். தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ என்று மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியான படம். பிரபல நடிகர்கள் யாரும் இவர் படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளாததால், ‘Crowd Funding’ முறையில் நிதியைத் திரட்டி பவன் குமார் எப்படியெல்லாம் லூஸியாவை எடுத்தார் என்பது மிகவும் சுவாரஸ்யமான, துணிவு நிரம்பிய கதை. லூஸியாவுக்கு முன்னரே ‘லைஃபு இஷ்டெனே’ என்று 2011-ல் தனது முதல் படத்தை இயக்கிவிட்டார் பவன் குமார். கர்நாடகத்தில் மிகப் பிரபலமான இயக்குநரான யோக்ராஜ் பட்டின் உதவி இயக்குநர். தியேட்டரில் நாடகங்களுக்கும் வசனங்கள் எழுதியிருக்கிறார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

லூஸியாவின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பவன் குமார் எடுத்து வெளியிட்டிருக்கும் படம்தான் ‘யூ டர்ன்’. பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற ஒரு படத்துக்குப் பிறகு, அடுத்த படத்தை எப்படி எடுக்கிறார்கள் என்பது பல இயக்குநர்களுக்கு ஒரு கடினமான பரீட்சை. அப்படிப்பட்ட பரீட்சையில் வெற்றிகரமாகத் தேறியிருக்கிறார் என்றே பவன் குமாரைப் பற்றிச் சொல்ல வேண்டும். லூஸியாவின் விறுவிறுப்புக்குக் கொஞ்சம் கூடக் குறையாமல் அட்டகாசமான திரைக்கதையோடுதான் ‘யூ டர்ன்’ வெளியாகியுள்ளது. படத்தின் நீளம் இரண்டே மணி நேரங்கள்தான். பாடல்கள் இல்லை. ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதைச் சுற்றி ஒரு சுவாரஸ்யமான கதையை எழுதியிருக்கிறார் பவன் குமார்.

இருக்கை நுனி அனுபவம்

படத்தில் கையாளப்பட்டுள்ள அந்த முக்கியமான பிரச்சினை என்ன என்பதை நீங்கள் திரையரங்கில் பார்த்துக்கொள்ளலாம். இந்தியாவில் எல்லா ஊர்களிலும் நடக்கும் பிரச் சினைதான் அது. வேண்டுமென்றே விதிகளை மீறும் நபர்களால், அவர்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத நபர்கள் எப்படிப் பாதிப் படைகிறார்கள் என்பதே படத்தின் கரு.

படத்தில் ரச்னா என்ற பிரதான நாயகி வேடத்தில் ஷ்ரத்தா நாத் நடித்திருக்கிறார். இவர் உண்மையில் ஒரு வக்கீல். லீகல் அட்வைஸராகச் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு மாடலிங்கிலும் நடிப்பிலும் இறங்கி, இந்தப் படத்தின் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கிறார். இதுபோலவே ஹாலிவுட்டில் சில படங்கள் நடித்து ஓரளவு பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கும் ரோஜர் நாராயண் (Hola Venki!, The Man Who Knew Infinity) இதில் ஒரு முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கிறார். படத்தின் மிக இயல்பான நடிப்பு இந்த இருவருடையதே. இன்னொரு முக்கியமான வேடத்தில் நடிகர் திலீப் ராஜ் நடித்திருக்கிறார்.

பொதுவாக, த்ரில்லர்களை எழுதி இயக்குவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை, படம் பார்ப்பவர்களுக்கு அடுத்து வரும் சம்பவங்களை யூகிக்க இடம் கொடுத்துவிடுவதுதான். பல த்ரில்லர்களில், வில்லன் யார், கொலைகள் எப்படி நடக்கின்றன போன்ற விஷயங்கள் எல்லாமே எளிதில் யூகிக்கப்பட்டுவிடுகின்றன. அதிலும் பவன் குமார் நன்றாகவே தேறியிருக்கிறார். ஒரு சிறிய முடிச்சு, அது அவிழும்போது அதைவிடப் பெரிய முடிச்சு, அதைத் தெளிவாக்கும்போது இன்னொரு மிகப் பெரிய முடிச்சு என்று படிப்படியாக வரும் திருப்பங்கள் சுவாரஸ்யமானவையே. இவற்றோடு, உணர்வுகளுக்கும் நல்ல முக்கியத்துவம் அளித்திருப்பதால், கிட்டத்தட்ட படம் முழுக்கவுமே, இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்கும் அனுபவமே ஏற்படுகிறது. எங்குமே இழுவை இல்லாமல், ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிப்படியான சிக்கல்கள் மூலம் நம்மைத் திரையரங்கில் மிகுந்த கவனத்துடன் படம் பார்க்க வைத்திருப்பதே பவன் குமாரின் வெற்றி.

படத்தின் ஒரே பிரச்சினை

இருந்தாலும், இந்தப் படத்தில் எனக்குத் தோன்றிய ஒரே பிரச்சினை, இதன் க்ளைமாக்ஸ். பொதுவாக, இதுபோன்ற நல்ல த்ரில்லர்களில், படிப்படியாக ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்திக்கொண்டேவந்து, படத்தின் இறுதியில் மிகப் பெரிய, எதிர்பாராத முத்தாய்ப்பான சுவாரஸ்யம் மூலம் படத்தை முடிப்பதே நல்ல இயக்குநர்களின் பாணி. பவன் குமாரும் அந்த வழியில்தான் இந்தப் படத்தையே எடுத்திருக்கிறார் என்றாலும், படத்தின் தன்மைக்கே சம்பந்தம் இல்லாத க்ளைமாக்ஸ் ஒன்றின் மூலம் ஆரம்பத்திலிருந்து எழுந்த அத்தனை மர்மங்களுக்கும் விடை அளித்திருக்கிறார். படம் தொடக்கத்திலிருந்து எப்படிப் பயணித்ததோ, அதற்குச் சற்றும் சம்மந்தமில்லாத க்ளைமாக்ஸ் மூலம் ஒரு வகையான ஏமாற்றமே நமது மனதில் தங்குகிறது. இதுதான் படத்தின் ஒரே பிரச்சினையாக எனக்குத் தோன்றியது.

ஆமிர் கான் நடித்து 2012-ல் வெளியான ‘தலாஷ்’ என்ற த்ரில்லருக்கும் யூ டர்னுக்கும் ஒருசில தொடர்புகள் உண்டு. இரண்டுமே போலீஸ் சம்மந்தப்பட்ட படங்கள். இரண்டிலும் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இரண்டிலுமே, சில மர்மமான முடிச்சுகள் உண்டு. அதேபோல், இரண்டிலுமே க்ளைமாக்ஸ்களில் அளிக்கப்பட்டுள்ள தீர்வுகள், படத்தின் தன்மைக்கே பொருந்தாமல் துருத்திக்கொண்டு தெரிகின்றன. நம்மூரில் வெளியான மிஷ்கினின் ‘பிசாசு’ படத்துக்கும் ‘யூ டர்’னுக்குமே ஓரளவு தொடர்பு உண்டு. ‘யூ டர்ன்’ பார்த்தால் இதைப் புரிந்துகொள்வீர்கள்.

ஏற்கெனவே சொல்லியதுபோல், இப்படிப்பட்ட க்ளைமாக்ஸ்களை மிக எளிதில் எப்படிப்பட்ட படத்திலும் வைத்துவிடலாம். அதற்குப் பெரிதாக மூளையைக் கசக்கத் தேவையில்லை. உதாரணமாக, படம் முழுக்க விறுவிறுப்பாகவும் மர்மமாகவும் சென்றுகொண்டிருக்கும்போது, க்ளைமேக்ஸில் திடீரென்று ஏதோ ஒரு கதாபாத்திரம் தோன்றி, படத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம், வேற்றுக் கிரகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு ஏலியன் என்று சொல்லி அந்த ஏலியனை அறிமுகமுப்படுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ‘யூ டர்’னில் ஏலியன் வருவதில்லை. ஆனால் கிட்டத்தட்ட நான் சொன்னதைப் போன்ற ஒரு விஷயம் நடப்பதால், அதுவரை சுவாரஸ்யத்துடன் உட்கார்ந்து பார்த்த அத்தனை பேரின் கவனமும் சிதறிவிடுகிறது.

விதிகளை மீறும் அனைவருக்கும்

படத்தின் அடுத்த சிறிய பிரச்சினை, இதில் முக்கியமான கதாபாத்திரங்களுடனேயே படம் முழுக்க நாம் பயணித்த பின்னர், அவர்களுக்கான தீர்வுகளோ முடிவுகளோ படத்தில் சரியாகக் காட்டப்படவில்லை. உதாரணமாக, படத்தில் வரும் போலீஸ்காரரான நாயக், க்ளைமாக்ஸுக்கு முன்னரே பட்டென்று காணாமல் போய்விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு வேலையே இல்லை. அதேபோல் படத்தின் நாயகி ரச்னாவும், க்ளைமாக்ஸில் பெரிதாக எதுவுமே செய்வதில்லை. படத்தின் பிரதானக் கதாபாத்திரங்கள் யாருமே இல்லாத க்ளைமாக்ஸ் இதுவாகத்தான் இருக்கும். ஒருவிதத்தில் இது ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இவர்கள் யாரும் இல்லாதாதால், க்ளைமாக்ஸில் வரும் தீர்வு மனதில் ஒட்ட மறுக்கிறது. ஏற்கெனவே அது படத்தின் தன்மைக்கே சம்பந்தமற்ற க்ளைமாக்ஸ்; இத்தோடு சேர்த்துப் பிரதான கதாபாத்திரங்களும் இல்லை என்பதால், அதுவரை மிகவும் சுவாரஸ்யமாகப் படம் பார்க்கும் ஆடியன்ஸ், க்ளைமாக்ஸில் கொஞ்சம் அலுப்படைய வாய்ப்பு உண்டு.

க்ளைமாக்ஸை மட்டும் அகற்றிவிட்டால், அவசியம் ‘யூ டர்ன்’ ஒரு நல்ல கமர்ஷியல் படம்தான். கமர்ஷியல் படத்துக்கான எந்தச் செயற்கை அம்சங்களும் திணிக்கப்படாமல் இரண்டே மணி நேரத்தில் ஒரு நல்ல த்ரில்லரை எடுப்பது அவசியம் சவால்தான். அதுவும் கன்னடத்தில். அதை வெற்றிகரமாகச் சாதித்திருக்கிறார் பவன் குமார் என்பதால், இந்தக் க்ளைமாக்ஸ் பிரச்சினையை மறந்துவிடலாம்.

யூ டர்ன், அவசியம் திரையரங்கில் நாம் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு படம். இதில் பேசப்படும் கரு அப்படிப்பட்டது. இந்தியாவில், விதிகளை மீறுவதை ஜாலியாகச் செய்பவர்கள் நாம் அனைவரும் என்பதாலும் இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அப்போதுதான், விதிகளை மீறுவதன் பாதிப்புகள் கொஞ்சமாவது நமது மனங்களில் ஒட்டும். பவன் குமாரின் ‘லூஸியா’ தமிழில் ரீமேக் செய்யப்பட்டதைப்போல், ‘யூ டர்’னும் ரீமேக் செய்யப்படுவதற்கான பலமான சாத்தியங்கள் உண்டு. ஆனால் அப்படித் தமிழில் ரீமேக் செய்யும்போது இதன் க்ளைமாக்ஸை அவசியம் மாற்ற வேண்டும். இல்லையேல் படம் பரவலாக விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பது என் கருத்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்