வலைப்பூக்களின் (Blogs) உலகில் பிரபலமான பெயர் கேபிள் சங்கர். திரை விமர்சனங்களை உடனுக்குடன் இணைய வாசகர்களுக்குத் தந்து, தனக்கெனத் தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். திரை விமர்சனம் என்ற தளத்திலிருந்து தற்போது திரை இயக்கத்துக்கு வந்திருக்கிறார். துவார் ஜி. சந்திரசேகர் தயாரிப்பில் ‘தொட்டால் தொடரும்’ படத்தை இயக்கி முடித்து, பின்னணி இசைக் கோர்ப்பில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்தோம்.
உங்கள் வலைப்பூவை எந்த ஆண்டு தொடங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய முதல் படம் எதுவென்று நினைவிருக்கிறதா?
2006ஆம் ஆண்டு எனது பிளாக்கை தொடங்கினேன். முதலில் நான் திரை விமர்சனம் எழுதவில்லை. சமூகம் சார்ந்து மக்களை அதிகமாக பாதிக்கும் விஷயங்களை சின்னச் சின்ன பதிவுகளாக எழுதிவந்தேன். பிறகு 2008 -ல் பத்துக்குப் பத்து என்ற சிறு முதலீட்டுப் படத்துக்குத்தான் முதலில் விமர்சனம் எழுதினேன். திரை விமர்சனத்தில் எனக்கென்று ஒரு பாணி உருவானதாக ஜீவா இயக்கி, ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தைச் சொல்ல வேண்டும். திரை விமர்சனம் சார்ந்து எனக்கு வாசகர்கள் கிடைத்தது மட்டுமல்ல, திரைப்பட விநியோகம், கேபிள் டிவி தொழில், சிறுகதைகள், கவிதைகள் என்று திரையுலகம், படைப்புலகம் சார்ந்து நான் எழுதிய எழுத்துக்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. ‘உங்களது சினிமா வியாபாரம் தொடரைப் படித்து அதிலிருந்து திரைப்பட விநியோகத்தைக் கற்றுக்கொண்டேன். இதுவரை மூன்று படங்களை வாங்கி வெற்றிகரமாக விநியோகித்து விட்டேன்’ என்று ஒருவர் என்னை நேரில் சந்தித்துச் சொன்னபோது மகிழ்ந்துபோனேன்.
இவ்வளவு காட்டமாக விமர்சனம் எழுதுகிறீர்களே, உங்களால் ஒரு நேர்த்தியான படத்தை எடுத்துக்காட்ட முடியுமா என்று திரையுலகில் இருந்து யாராவது உங்களை கேட்டிருக்கிறார்களா?
நிறைய பேர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தூவார் சந்திரசேகரனே எனக்கு அப்படித்தான் கிடைத்தார். அவர் தயாரித்த ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்துக்கு நான் எழுதியிருந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு என்னிடம் பேசினார். பிறகு என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர், அப்படியானால் நீங்கள் வந்து ஒரு படம் எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என்றார். சண்டை யிலும் விவாதத்திலும்தான் எங்கள் நட்பு தொடங்கியது.
விமர்சனம் செய்பவர் களால் நல்ல படம் எடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள். எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்திருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
நான் வெறும் விமர்சகன் மட்டுமல்ல.கடந்த 15 ஆண்டுகளாகத் திரைத் துறையில், திரைப்பட விநியோகம், திரையரங்க நிர்வாகம், தயாரிப்பு, விளம்பரம், திரைக்கதை, வசனம், நாவல், சிறுகதை எனத் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறேன். திரை இயக்கம் என்பது என் கனவு. என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் பல விஷயங்களை விமர்சிக்க முடியாதபடி என் படம் தரமும் நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
என்ன கதையைக் கையாள்கிறீர்கள்?
காதல் த்ரில்லர் வகைக் கதை. சிவா ஐடி நிறுவனமொன்றின் ஹெச்.ஆர். பிரிவில் வேலை செய்யும் மனித வளத்துறை அதிகாரி. இவர்தான் கதையின் நாயகன். மதுமிதா அமெரிக்க வங்கியொன்றுக்காக கால் சென்டரில் வேலை செய்யும் டெலிகாலர். ஒரு வாடிக்கையாளருக்கு செல்லும் அழைப்பின் வழியாக முதன்மைக் கதாபாத்திரங்களை நிழல்போலத் தொடரும் ஆபத்து என்ன என்பதுதான் கதை.முதல் பாதி லவ், ரொமான்ஸ் என்று நகரும் கதையின் மறுபாதி ஆக்ஷன் த்ரில்லராக வேகமெடுக்கும். சிவாவாக தமன், மதுமிதாவாக அருந்ததி நடித்திருக்கிறார்கள். இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் வின்சென்ட் அசோகன், ஹலோ எப்.எம். பாலாஜி நடித்திருக்கிறார்கள். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.சி. சிவன் இசையமைத்துவருகிறார். முந்தைய படங்களின் வெற்றியைப் பார்க்காமல் அதில் அவர்கள் காட்டியுள்ள திறமையை மட்டும் பார்த்து நட்சத்திரங்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்திருக்கிறோம்.
இதுவொரு சிறு முதலீட்டுப் படமா?
அப்படிச் சொல்ல முடியாது. கதைக்கும் காட்சியமைப்புக்கும் என்ன தேவையோ அதில் குறை வந்துவிடாதபடி படம் தயாராகியிருக்கிறது. ஒரு பெரிய படத்துக்கான உழைப்பில் இந்தப் படமும் குறைந்ததில்லை. ‘சிங்கம்-2‘ படத்துக்குப் பிறகு இந்தப் படத்திற்காக அமெரிக்காவிலிருந்து ப்ளைகேம் கேமரா வரவழைத்து பயன்படுத்தியிருக்கிறோம். எந்த விதத்திலும் ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்ற வாய்ப்பில்லை. முக்கியமாக விமர்சகர்களை!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago