‘குற்றமே தண்டனை’ படத்தின் மூலம் மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர், இயக்குநர் ‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டன். இம்முறை விஜய் சேதுபதியுடன் களமிறங்கியிருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
‘ஆண்டவன் கட்டளை' படத்தின் கதைக்களம் என்ன?
பாஸ்போர்ட், லைசென்ஸ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட விஷயங்களில் வழக்கமான வழிமுறைகளில் சென்றால் நீண்ட நாட்களாகும் என நினைத்துக்கொள்கிறோம். இடைத்தரகர்களை நாடுகிறோம். அவர்கள் சில சமயம் நம்மைப் பெரிய சிக்கலில் மாட்டிவிட்டுப் போய்விடுவார்கள். அப்படி ஒருவன் இடைத்தரகர்களின் பேச்சைக் கேட்டு ஒரு பெயரைத் தவறாகப் போடுகிறான். அந்தப் பெயர் மாற்றம் அவனுடைய வாழ்க்கையையே மாற்றுகிறது.
அருள்செழியனின் கதைக்கு நான் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறேன். இப்போதுள்ள அவசர வாழ்க்கைக்கு மிகவும் தேவையான கதை. அவசியமான சிறு நேர்மையில்லாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தை காமெடியாக, குடும்பத்துடன் ரசிப்பதுபோல எடுத்திருக்கிறேன்.
நாயகனாக விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்யக் காரணம் என்ன?
விஜய் சேதுபதி மாதிரியான ஒருவர் நடிக்கும்போது, என்னுடைய கவனம் காட்சியமைப்பில் இன்னும் அதிகமாக இருக்கும். பெரிய நடிகர் என்று நான் சொல்லுவது சம்பளத்தை வைத்து அல்ல, நடிப்பை வைத்துத்தான். என்னைப் பொறுத்தவரை எவன் நன்றாக நடிக்கிறானோ அவன் பெரிய நடிகன். அவனுக்குக் காட்சிகள் எழுதும்போது ரொம்பவே கவனமாக எழுத வேண்டும். இந்தக் காட்சி இவ்வளவு நல்லாயிருக்கே எப்படி நடிப்பது என நடிகனுக்குத் தோன்ற வேண்டும். அவ்வாறு இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன.
‘ஆண்டவன் கட்டளை'யில் 9 பாடல்கள் வைக்கக் காரணம்?
பாடல்கள் எல்லாமே கதையோடுதான் இருக்கும். ஒவ்வொரு பாட்டுமே கதையை முன்னிறுத்தும். 30 காட்சிகளை 5 நிமிடத்தில் சொல்ல வேண்டும் என்றால் பாட்டால் சொல்லிவிடலாம். அனைத்தையுமே காட்சியாகச் சொல்லியிருந்தேன் என்றால் படம் மூன்றரை மணி நேரம் போய்விடும்.
‘காக்கா முட்டை' வெற்றிக்குப் பிறகு ஏன் மீண்டும் சிறு முதலீட்டில் ‘குற்றமே தண்டனை' படம் பண்ணினீர்கள்?
‘காக்கா முட்டை' வெற்றிக்குப் பிறகு பெரும் பொருட்செலவில் படம் பண்ணுவதற்குத் தயாரிப்பாளர்கள் முன்வந்தார்கள். ஆனால், குறைந்த பொருட்செலவில் ஒரு நல்ல சினிமா பண்ண வேண்டும் என ‘குற்றமே தண்டனை' பண்ணினேன். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நல்ல படம் எடுத்தால் மக்கள் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். ஒரு விழா எடுக்கக்கூடிய செலவில், ஒரு பெரிய இசையமைப்பாளருக்குச் சம்பளம் கொடுத்துவிடலாம். பகட்டுக்கான செலவைக் குறித்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சம்பளத்தைக் கூட்ட வேண்டும்.
‘குற்றமே தண்டனை' வெளியீட்டில் தடங்கல் இருந்தே…
சுமார் ஏழு தயாரிப்பாளர்கள் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது. ஆனால், மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரியவில்லை; அதனால் வாங்க முடியாது எனக் கூறிவிட்டார்கள். நாங்கள் வருத்தப்படவே இல்லை. ஏனென்றால் அனைவருமே படம் பிடித்திருக்கிறது என்று சொன்னார்கள். இறுதியில் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் முன்வந்தார்கள். அவர்களும் இல்லையென்றால் இன்னும் கடினமானதாக இருந்திருக்கும். நான் ஒரு அற்புதமான படத்தை எடுத்திருக்கிறேன் எனச் சொல்லவில்லை. ஒரு எளிமையான நல்ல படம். அவ்வளவுதான்.
முக்கியமான தயாரிப்பாளர்களால் நிராகரிப்பட்ட படம், சாதாரண மக்களால் ஓடுகிறது என்று நினைக்கும்போது சரியாகத்தான் எடுத்திருக்கிறோம் எனத் தெரிகிறது. ரசிகர்கள் சுத்தமாக இருக்கிறார்கள் எனும்போது சந்தோஷமாக இருக்கிறது.
‘குற்றமே தண்டனை' படத்தில் ஒவ்வொருவரும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கிடைக்கிறது. ஆனால், விதார்த்துக்கு உள்ள குறைபாடு மூலமாகத்தான் பார்வை போகிறது. அப்படியிருக்கும்போது அவர் செய்த குற்றத்துக்கு எப்படி அது தண்டனையாக முடியும்?
விதார்த் பண்ணிய தப்புக்கு இந்தத் தண்டனை போதாது என்றால், அது உங்களுடைய பார்வை. என்ன பணம் இருந்தாலும், அழகான மனைவி இருந்தாலும், குழந்தைகள் பிறந்தாலும் பார்க்க முடியாதே என்ற கண்ணோட்டத்தில் நான் வைத்தேன். குறுகிய பார்வை ஒட்டத்தோடு வாழ்க்கையைப் பார்க்காதீர்கள் என்பதற்காகத்தான் TUNNEL VISION என்பதை வைத்தேன். பிழைகள் இல்லாத படமே கிடையாது.
‘குற்றமே தண்டனை' படத்தில் முதல் காட்சியில் இருந்தே பிழைகள் இருக்கின்றன. ஒரு இயக்குநர் படத்தில் தவறு பண்ணியிருக்கிறார் என்றால், வேறு ஒரு பெரிய பிழையை மறைக்கத்தான் வைப்பார். எனது அடுத்தடுத்த படங்களில் இதுபோன்ற பிழைகளை சரிசெய்துகொள்ள முயற்சிப்பேன்.
பெரிய நாயகர்களை எப்போது இயக்கப் போகிறீர்கள்?
அடுத்த வருஷம் பெரிய நாயகர்கள் படம் பண்றேன். எவ்வளவு பெரிய நாயகர்கள் நடித்தாலும் அது மணிகண்டனுடைய படமாகத்தான் இருக்கும்.
உங்களுடைய கதைகள், காட்சியமைப்புகளை எப்படி எழுதுவீர்கள்?
2 மணி நேர முடிவில் படம் பார்ப்பவர்களுக்கு என்ன சொல்லியிருக்கிறேன் என்று யோசிப்பேன். அப்போது ஒரு ஐடியா வரும். இக்கதையில் இந்த உணர்வுகளை எல்லாம் சொல்லலாம் எனத் தோன்றி எழுத ஆரம்பிப்பேன். ‘காக்கா முட்டை'யில் நான் சொன்ன உணர்வுகளை எல்லாம் ‘குற்றமே தண்டனை'யில் வைக்கவே முடியாது. அதே போல ‘குற்றமே தண்டனை'யில் சொன்னதை ‘காக்கா முட்டை'யில் வைக்கவே முடியாது.
தயாரிப்பாளர் மணிகண்டனை எப்போது காணலாம்?
சீக்கிரமே.
இயக்குநராக வாய்ப்பு தேடும்போது உங்களுடைய கதைகளைத் தயாரிப்பாளர்கள் நிராகரித்திருப் பார்கள். இப்போது உங்களை நம்பி முதலீடு செய்யப் பல தயாரிப்பாளர்கள் முன்வரலாம். இவ்விரண்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
வாய்ப்பு இல்லை என்று சொன்னபோது, எனக்குக் கோபம் வரவில்லை. தமிழ் சினிமாவில் வழக்கமாக இருக்கும் கதையின்றி, வேறு ஒரு கதை சொல்கிறான் எனும்போது எப்படி என்னை நம்புவார்கள்? கோபமே படாமல், இவ்வளவு முதலீடு, இவ்வளவு நாட்கள், இவ்வளவு தொலைக்காட்சி உரிமை என்று விளக்குவேன். படம் தோல்வியடைந்தாலும், உங்களுக்கு லாபம் வரும் என்று சொல்வேன். நிறைய தயாரிப்பாளர்கள் சரியாக வராது எனும்போது வெளியே வந்துவிடுவேன். பணத்தை எப்படி வரவழைக்கலாம் என்று தேடிக்கொண்டிருப்பவர்தான் தயாரிப்பாளர். அவரிடம் போய் யதார்த்தம், உலக சினிமா என டார்ச்சர் பண்ணக் கூடாது. அவருக்குத் தேவை முதலீடு செய்தால் லாபம் வர வேண்டும். நாளைக்கே நான் ஒரு தோல்விப் படம் கொடுத்தால் யாரும் வர மாட்டார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago