நம்முடைய முயற்சியை மீறி ஒரு செயல் நடந்திருக்கும். அது யாரோ ஒரு மனிதரின் உதவியால்தான் நடந்திருக்கும். ஆனால், அந்த மனிதருக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. நாம் அந்தச் செயலைச் செய்து முடிக்க உதவுவதற்காகத் தெய்வமே அந்த மனித உருவில் வந்தது என்று எண்ணிச் சிலிர்க்கும் வகையில் இருக்கும் அந்த அனுபவம். இப்படிப்பட்ட அனுபவத்தைத் தொடராக எழுதலாம் என்பது திட்டம். அந்தப் பகுதிக்கு ‘தெய்வம் நேரில் வந்தது’ என்ற பொதுவான தலைப்பும் இடப்பட்டது.
ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு பிரபலம் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் பட்டியல் தயாரானது. அந்தப் பட்டியலில் இருந்த பெயர்களில் பாடகி வாணி ஜெயராம் பெயரை நான் கேட்டு வாங்கிக்கொண்டேன்.
வல்லினச் சொற்களைக் கூட மெல்லினம்போல உணரச் செய்யும் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரரான வாணி ஜெயராமை நேரில் சந்திக்கும் ஆவல். தொலைபேசியில் அழைத்துப் பேட்டிக்கான நேரம் கேட்டதும், என்ன விஷயம் என்று கேட்டார். கட்டுரையின் தன்மையைச் சொன்னதும் அடுத்த நாள் மாலை வரச் சொன்னார்.
வாணி ஜெயராமின் குரலைப் போலவே அவருடைய தோற்றமும் வசீகரமாக இருக்கும். லேசாக மை எழுதிய கண்களும் நீள் கோபி வடிவத்தில் நெற்றிப் பொட்டும் வெளிறிய வண்ணப் புடவையுமாகக் கண்ணை உறுத்தாத அழகு அவருடையது.
வாணி ஜெயராமின் குரலில் தெரியும் தனித்தன்மை காந்தம் போல ஈர்க்கக்கூடியது. மெலடி என்று மட்டுமில்லாமல் எல்லா வகையுமே அவர் பாடல்களில் இருந்தாலும் வாணி ஜெயராம் என்ற பெயர் முடியும் முன்னரே காதில் ஒலிக்கக்கூடியது ‘மேகமே மேகமே’தான்!
வாணி ஜெயராம் வீட்டின் முன் வண்டி நின்றதும் மனதுக்குள் மேகமே… மேகமே… ஒலிக்கத் தொடங்கியது. மிகுந்த அமைதியோடு இருந்தது வீடு. அழைப்பு மணியில் கைவைத்ததுமே வீட்டினுள் மெல்லிசை பரவ, சில நொடிகளில் அவரே வந்து கதவு திறந்தார். பரந்து விரிந்திருந்த ஹாலில் ஊஞ்சலும் அதை ஒட்டிய சோபாவும் கண்களை நிறைத்தன. சோபாவில் அமரச் சொல்லிவிட்டு அவர் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டார்.
கட்டுரையின் உள்ளடக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை அமைதியாகக் கேட்டுக்கொண்டார். உள்ளே எழுந்து சென்று காபி எடுத்து வந்தார். “நீங்க காபி குடிக்கிற நேரத்தில் நான் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கறேன்…”என்று தனக்குள் பேசும் பாவனையில் கண்களை மூடி தலையை அசைத்து அசைத்துப் பார்த்துக்கொண்டார். காபி தம்ளர் டீப்பாயில் வைக்கப்படும் ஒலி கேட்டுக் கண் விழித்தார்.
“காபி நல்லாயிருந்துச்சா… நான் ஆரம்பிச்சுடட்டுமா..?” என்று கச்சேரி மனநிலைக்குப் போய்விட்டார். அதன் பிறகு கோர்வையாக ஒரு கச்சேரி போலத் தங்கு தடையில்லாமல் இருந்தது அவருடைய பேச்சு!
“இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக இமய மலைச்சாரலுக்குப் போயிருந்தேன். பொது வாகவே கச்சேரிக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னால் நிகழ்ச்சி நடக்கற அரங்கத்துக்குப் போயிருவேன். ஏன்னா, அரங்க அமைப்பு எப்படி இருக்கு… மக்கள் இருக்கைகள் எப்படி இருக்குன்னுல்லாம் பார்த்து வெச்சுக்குவேன். கடைசி நிமிடப் பதற்றத்தைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு. அன்னிக்கும் அப்படித்தான் புறப்பட்டேன். மலைப்பாதை அது. கார் வளைந்து நெளிந்து போயிட்டே இருந்துச்சு. ஒரு இடத்தில் டிராபிக் நெரிசல் ஆனதுபோல வண்டிகள் எல்லாம் நிற்க, நாங்கள் போன காரும் நின்றுவிட்டது. ஒட்டுநர் இறங்கிப் போய் விசாரித்துவிட்டு வந்தார்.
“சாலை பழுதாகிவிட்டது. இதற்கு மேல் வண்டி செல்வது கஷ்டம் என்று அவர் சொல்ல எனக்குப் பக்கென்றாகிவிட்டது. நிகழ்ச்சிக்கு அரை மணிநேரம்தான் இருக்கிறது. இறங்கிச் சாலை பழுதான இடம் வரையில் போய்ப் பார்த்தேன். பழுது பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்குச் சிக்கலாக இருந்தது நிலைமை. எப்படிச் செல்வது என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு நேபாளி இளைஞர், என்னிடம் என்ன விஷயம் என்பது போலச் சைகையில் கேட்டார். நான் கண்ணீர் மல்க நின்றதைப் பார்த்து, சரிவான பாதையைக் காட்டி, அதில் இறங்கிப் போனால், அந்தப் பக்கம் போய்விடலாம் என்றார். நான் பொதுவாகச் சென்னையிலேயே யாரையும் நம்பி இறங்க மாட்டேன். ஆனால், கையை நீட்டிய அந்த இளைஞரை நம்பி அவர் கையைப் பிடித்தேன். சரிவான பாதை… தெரியாத இடம் என்ற எதையும் நான் யோசிக்கவில்லை. அந்த இளைஞரும் கிடுகிடுவென்று என்னை அழைத்துக் கொண்டு முன்னே நடந்தார். சரியான நேரத்தில் கச்சேரி நடக்கும் இடத்தில் இருந்தேன். கச்சேரியைத் தொடங்கினேன்.
“எல்லோரும் தயங்கிக்கொண்டிருந்தபோது அவர் மட்டும் எப்படி முன்வந்தார்? நான் எப்படி முகம் தெரியாத அந்த இளைஞரை நம்பிச் சென்றேன் என்பது இதுவரை விடை தெரியாத கேள்விகள். என்னைப் பொறுத்த அளவில் தெய்வம் நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றதாகத்தான் நினைக்கிறேன்” என்று வாணி ஜெயராம் சொல்லிமுடித்தார். சொல்லும்போது சில இடங்களில் வாணி ஜெயராமின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. சில இடங்களில் நெற்றிச் சுருக்கம் ஏறி இறங்கியது. தெய்வத்தின் கருணை என்றபோது உதடுகள் துடித்தன. உருக்கமாகப் பேசி முடித்த பிறகு, இன்னொரு காபி வேண்டுமா என்றார்.
வேண்டாம் என்று தலையசைத்துவிட்டுக் கொஞ்சம் தயக்கத்தோடு, ‘நான் ஒன்று கேட்பேன்… கிடைக்குமா..?’ என்றேன். என்ன என்றார். “மேகமே… மேகமே… பாடலை எனக்காகப் பாட முடியுமா?” என்று கேட்ட நொடியில் குரலைச் செருமிக் கொண்டார். மேகமே… மேகமே… மழையாகப் பொழிந்தது.
அந்தப் பேட்டியை மறக்க முடியாத பேட்டியாக்கியது அந்தப் பாடல்.
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago