மனிதன் எத்தனையோ புதிர்களை அவிழ்த்துவிட்ட பிறகும் மரணம் இன்னும் அறிய இயலாத புதிராகவே இருக்கிறது. நெருங்கியவர்களின், ரத்த பந்தங்களின் மரணம்தான் வாழ்க்கை என்றால் என்ன என்ற ஆழ்ந்த தத்துவக் கேள்வியை நம்மையெல்லாம் கேட்கத் தூண்டுகிறது. தி ட்ரீ ஆஃப் லைப் படத்தின் ஆதாரமான கேள்வி இதுதான் என்று எளிமையாகச் சொல்லிப் பார்க்கலாம். ஒரு குடும்பத்தின் தோற்றம், வளர்ச்சி, வெற்றிகள், இழப்பு மற்றும் மரணத்தைச் சுற்றிய கதை இது.
நெடிய மரங்கள் கொண்ட அமைதியான இடத்தில் இருக்கிறது திருமதி ஓ பிரையனின் வீடு. அவள் மூன்று குழந்தைகளின் தாய். அவள் இயற்கையின் கருணை வடிவான தாய்மையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து இயற்கையின் எதிர்பாராத தன்மையையும் தாங்க முடியாதவளாக இருப்பவள். தந்தை ஓ பிரையன், கடவுளின் உதவியுடன் இந்த உலகில் சாதிக்க இயலாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் பகுதியளவு அன்பும், பகுதியளவு கண்டிப்பும் செலுத்தி குழந்தைகளை வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டவர். ஒரு கட்டத்தில் பொறியியல் நிறுவனம் ஒன்றில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து உழைத்த அவரை அந்த நிறுவனம் வெளியேறச் சொல்கிறது. அவருக்கு தான் வைத்திருந்த நம்பிக்கைகள் எல்லாம் சிதறிப் போகிறது. குழந்தைகளிடம் தான் காட்டிய கண்டிப்புக்கு மூத்த மகனிடம் மன்னிப்பு கேட்கிறார்.
ஓப்ரையன் குடும்பத்தின் மூத்த மகனும் கட்டிட வடிவமைப்பாளருமான ஜாக் தனது தம்பியின் மரணம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த சம்பவத்தை மறக்கமுடியாமல் விசாரம் கொண்டவனாகவும், விரக்தியில் இருப்பவனாகவும் இருக்கிறான்.
அச்சம்பவத்துக்கு முன்னும் பின்னும் பிரபஞ்சத்தின் தோற்றம், அமீபா முதல் ஜெல்லி மீன்கள், டினோசர்கள் வரை உயிர்கள் பிறந்து நிலைகொள்ளும் நிகழ்வுகள் அனைத்தும் காட்சிகளாக நம்முன் பெருகுகின்றன. கருணை மற்றும் ஒழுங்குடன் மனிதர்களுக்கு சில நேரங்களில் தெரியும் இயற்கையின் இன்னொரு முகம் கோரமாகவும் ஈவிரக்கமற்றதாகவும் ஆகும்போது அவர்கள் பெரிய நெருக்கடிக்குள்ளாகிறார்கள். கடலுக்குள் வெடித்து கனலாக குழம்பை வெளியிடும் எரிமலையை கடல்நீர் மோதி அணைக்கிறது. அனலும் குளிருமாக இயற்கை மாறி மாறித் தோற்றம் கொள்கிறது.
கொடுக்கும் கரங்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். பறிக்கும் கரங்களை அறியும் வல்லமை மனிதர்களுக்கு இல்லை என்று இப்படத்தில் ஒரு தேவாலயப் பாதிரியார் கூறுகிறார். இந்த பூமிக்கு வந்த எல்லாரும் அடுத்தடுத்து பயணித்துக் கொண்டே தான் இருக்கவேண்டும், இவ்விடம் நிரந்தரம் அல்ல என்றும் கூறுகிறார்.
இயற்கையின் கருணை மற்றும் கோரதாண்டவங்களை காட்சிகளாக்கி மனித இருப்பின் அர்த்தம் காண முயல்வதே இந்தப் படத்தின் சிறப்பு அம்சம். பிரபஞ்சத்தின் எல்லையற்ற ரகசியத்துக்கு முன், கருப்பையின் சிறுதுளைக்குள் வரும் ஒளியளவே மனித ஞானம் என்பதைச் சுட்டிக்காட்ட முயல்கிறது இத்திரைப்படம்.
இந்தப் படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, குழந்தைகள் வளரும்போது கொள்ளும் ரகசிய மாற்றங்களையும், அவர்களிடம் குடிகொள்ளும் விலகல் மற்றும் வன்முறைகளையும் மிகவும் நுட்பமாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கிறார். தாயுடனான நேசம், செல்லமாக அவர்களிடம் தொடர்ந்தபடி இருக்கிறது. தாயால் அவர்களது உலகத்துக்குள் கூடுதலாக சென்று புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஆனால் தந்தை ஒரு கட்டத்தில் அந்நியமாகிறார். தந்தையிடம் கொள்ளும் முரண்தான் அவர்கள் வெளியில் செய்ய விரும்பும் குற்றச் சாகசங்களுக்கு அடித்தளமாகி விடுவதை அருமையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். திரைப்படம் முழுவதுமே அம்மா ஓ ப்ரையன் வயதாகாமலேயே இருக்கிறார். தந்தை, குழந்தைகள் அனைவரும் வயதானவர்களாகின்றனர்.
திருமதி ஓ ப்ரையன் வானத்தைப் பார்த்து சொல்கிறாள். 'நான் அவனை உன்னிடம் தந்தேன். நான் எனது மகனைத் தந்தேன்” என்கிறாள். இது தம்பியின் மரணத்தால் தொடர்ந்து துயருற்றிருந்த ஜேக்குக்கு ஒரு தரிசனத்தைப் போல இக்காட்சி வருகிறது. அவன் தான் பணிபுரியும் கட்டிடத்தை விட்டு முகத்தில் சாந்தப் புன்னகளையுடன் வெளியேறுகிறான். மீண்டும் இருட்டுக்குள் ஒரு ஒளி ஊடுருவுகிறது.
இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றாற் போலவே நெடிய மரங்கள் முக்கியப் படிமமாக தொடர்ந்து வருகின்றன. பூமியில் வேர்பிடித்து, சொர்க்கத்தில் கிளை பரப்புவதாக நம்பப்படும் மரங்களே நமது வாழ்க்கையையே பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இணைக்கின்றது என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது. மரங்களில் சிறுவர்கள் ஒவ்வொருவராக ஏறி ஒவ்வொரு கிளைகளிலும் அமரும் காட்சிகள் ஆழ்ந்த அர்த்தத்தையும், சகல இழப்புகளைத் தாண்டியும் கிளைநீட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் நீடித்த தன்மையையும் நமக்கு அர்த்தப்படுத்துகின்றன.
இப்படத்தின் இயக்குனர் டெர்ரன்ஸ் மாலிக். பிராட் பிட் கண்டிப்பான, தனிமை நிரம்பிய தகப்பனாகவும், ஜெசிகா சேஸ்டைன் இயற்கையைப் பிரதிபலிக்கும் தாயாகவும், மூத்த மகன் ஜேக்காக சீன்பென்னும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் இசை அலெக்சாண்டிரா டெஸ்பிளாட். சிறந்த இயக்கம், ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருதுக்கு 2012 இல் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் இது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
33 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago