‘காதலின் உணவு இசை என்றால், அதை இசைக்க விடுங்கள்' என்பார் ஷேக்ஸ்பியர். நாம் எல்லோரும் பாடல்கள் கேட்கிறோம். எல்லா சமயத்திலும் கேட்கிறோம். எனினும், காதல் குளத்தில் மூழ்கி மூச்சுத் திணறும்போதுதான், இசை தன்னுடைய உண்மையான வேலையைக் காட்ட ஆரம்பிக்கிறது. ஆம், அது நமக்குச் சுவாசமாக மாறி நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. காயங்களுக்கு மருந்திடுகிறது. காத்திருப்புக்குச் சுகம் கூட்டுகிறது.
இசையையும் காதலையும் இணைத்து ஹாலிவுட் தொடங்கி, கோலிவுட் வரை அனைத்து மொழித் திரை நிலங்களிலும் ஓரளவு தரமான படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘லா லா லேண்ட்' எனும் படம் இதுவரை வந்த ‘ரொமான்டிக் மியூஸிக்கல்' வகைப் படங்களிலிருந்து தனித்து நிற்கிறது. அதற்கு, அந்தப் படம் 14 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிசீலனையில் இருப்பது மட்டும்தான் காரணமா?
ஒரு நட்சத்திரம் ஒரு கலைஞன்
ஹாலிவுட்டில் நுழைந்து மிகப் பெரிய நட்சத்திரமாக வர வேண்டும் என்ற கனவுடன் வாழ்பவள் மியா. கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கும் ஜாஸ் இசையைத் தன் திறமையால் மீண்டும் உயிர்ப்பிக்க வைத்துவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்பவன் செபாஸ்டியன். நடிகையாக வாய்ப்புக் கேட்டு பல இடங்களில் அலைகிறாள் மியா. செபாஸ்டியனோ இரவு நேர ‘பப்'கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் இசைப்பவன். அங்கெல்லாம், ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட பாடல்களை மட்டும் இசைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், தன்னுடைய சொந்த இசை முயற்சிகளைத் தள்ளி வைத்துவிட்டு, வயிற்றுப் பிழைப்புக்காக அந்த ‘செட்லிஸ்ட்' பாடல்களை மட்டும் இசைத்துவருகிறான் செபாஸ்டியன்.
அப்படி ஒரு நாள், தான் இசைக்கும் விடுதியில், பட்டியலில் இல்லாத, தானே சொந்தமாகக் கோத்த இசையை இசைக்கிறான். அதனால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறான். அந்த இரவில், அந்த விடுதிக்கு வரும் மியா அவனை முதன்முதலாகச் சந்திக்கிறாள். அதற்குப் பிறகு அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்ள, அவர்களுக்கிடையில் மெள்ளக் காதல் வளர்கிறது. திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள்.
மியாவுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்பதற்காக செபாஸ்டியன், தன் நண்பன் நடத்திவரும் இசைக் குழு ஒன்றில் பியானோ இசைக் கலைஞனாகச் சில வருடங்களுக்கு ஒப்பந்தமாகிறான். ஆனால் அது மியாவுக்குப் பிடிக்கவில்லை. தனக்காக, அவன் தன் லட்சியத்தை விட்டு வேறு பாதையில் செல்வதை மியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இருவரும் பிரிகிறார்கள். இருவரும் தங்களின் கனவுகளை நோக்கி வேறு வேறு திசையில் பயணிக்கிறார்கள். அந்த இருவரும் தங்களின் லட்சியங்களை அடைந்தார்களா, திருமணத்தில் இணைந்தார்களா என்பதெல்லாம்... வெள்ளித்திரையில்!
வலிமை சேர்க்கும் இசையும் வரிகளும்
படத்தின் நடுநடுவே டூயட் போன்ற பாடல் காட்சிகளும், நடன அமைப்புகளும் எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாகப் பாடல் வரிகள்.
“அந்தக் கூட்டத்தில் ஒருவர்தான் நீங்கள் தேடியவராக இருக்கலாம்
உங்களை உயர்த்துபவர் அவராகவே இருக்கலாம்
நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அவரே அழைத்துச் செல்வார்
அவர் தேடும் நபராக நீங்கள் இருந்தால்...”
(‘சம் ஒன் இன் தி கிரவுட்' பாடல்)
“யாரோ ஒருவரின் பார்வை போதும்
நம் வானத்தை ஒளிரச் செய்ய
உலகைத் திறக்க, தள்ளாடச் செய்ய
யாரோ ஒருவரின் குரல் போதும்
உனக்காக இருப்பேன், நீ நலமாக இருப்பாய் என்று சொல்ல”
( சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ்' பாடல்)
இவை போன்ற வரிகள், காட்சியோடு இணைந்து கேட்கும்போது நம்மையும் காதல் தகிப்பில் வேக, ஆசை கொள்ள வைக்கும்.
இசையை மீட்க ஒருவன்
இதனை வெறும் காதல் படமாக மட்டுமே பார்த்துவிட முடியாது. இது இசையைப் பற்றிய படமும்கூட. நாயகன் சாதிக்க நினைக்கும் துறையான ‘ஜாஸ்' இசைக்குப் பின் அழுத்தமான வரலாறு உண்டு. அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் மாகாணத்தில் 19-ம் நூற்றாண்டில் ‘ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள்' என்று அழைக்கப்படும் கறுப்பினத்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம் இது. சமூக ரீதியாக நிறவெறிக்கு எதிராகக் கறுப்பினத்தவர்கள் சாதித்தார்கள் என்றால், கலாச்சார ரீதியாக அமெரிக்காவில் அவர்கள் நிகழ்த்திய மாபெரும் சாதனை இந்த ஜாஸ் இசை என்று சொல்லலாம்.
ஆனால் படத்தில், இந்த ஜாஸ் இசையை அறிமுகப்படுத்திய கறுப்பினத்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஒரு வெள்ளைக்கார பியானிஸ்ட் இந்த இசை வடிவத்தைக் காப்பாற்றுபவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். இதுவே மிகப் பெரிய நிறவெறிதான் என்று கூறி, இந்தப் படத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு.
பருவங்களைப் பின்தொடரும் திரைக்கதை குளிர் காலம், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் மீண்டும் குளிர் காலம் என்று ஐந்து பருவங்களில் இந்தக் கதை நடப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்தந்தப் பருவங்களுக்கு ஏற்றபடி, சோகம், சந்தோஷம், கோபம், பிரிவு, சோகம் எனக் கதாபாத்திரங்களின் வாழ்நிலையும் மாறுவதாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
படத்தின் இறுதி 15 முதல் 20 நிமிடங்கள் தவறவிடக்கூடாதவை. நெடுங்கவிதை ஒன்றில் சில வரிகள் மட்டும் ஹைக்கூவாகத் தெரிவதுபோல, அந்தக் காட்சிகள் ஒரு குறும்படம் போல மனதில் பதிகின்றன. டேமியன் ஷாசெல் இயக்கத்தில், ரயான் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், ஒரு காட்சியில்கூட நம்மை அயர்ச்சியாக உணரச் செய்யவில்லை. பெரும்பாலான ‘ரொமான்டிக் மியூஸிக்கல்' படங்கள் அப்படி இருக்காது. இந்த ஒரு காரணத்துக்காகவே இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.
‘லா லா லேண்ட்' என்பது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அமெரிக்கர்கள் செல்லமாக அழைக்கும் பெயர். ஆனால், ஆங்கில மொழியில் அது மரபுத் தொடராகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த மரபுத் தொடருக்கு ‘நிஜத்தில் நடப்பதை உணராமல் கனவுலகில் சஞ்சரிப்பது' என்று அர்த்தம் கொள்ளலாம். காதல் என்பதே அப்படித்தானே?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago