‘திரைக்கதைத் திலகம்’என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ். கடந்த வாரம் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ பத்தியைப் படித்திருக்கிறார். கையோடு தொலைபேசியில் என்னை அழைத்தார் ‘ கைதியின் டைரி’ படத்துக்கான கதை உருவான பின்னணியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். உடனே நேரில் சந்தித்தேன். விவரிக்க ஆரம்பித்தார். விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒரு பர்சனல் டயரியைப் படிப்பதுபோன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது அவர் விவரித்த விதம். இனி எல்லாம் அவர் சொன்னதே...
மும்பையில் சந்தித்தேன்
“வாழ்க்கையில் சுகமும் துக்கமும் மாறி மாறி வரும் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்றாகவே வந்தது. ‘முந்தானை முடிச்சு’அபார வெற்றி பெற்று, எனக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அதேநேரத்தில் என் மனைவி பிரவீணா என்னை விட்டுப் பிரிந்தாள். சென்னையில் இருந்தால் அவளது ஞாபகமே வந்து என்னைச் சோகத்தில் மூழ்கடிக்கிறது என்று கோவா சென்றேன். அங்கேயும் அதே நிலை. பிறகு மும்பை சென்றேன். அங்கே சீராக் ஹோட்டலில் தங்கினேன். ஹோட்டலில் வேலை செய்துவந்த தமிழ் ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து “உங்கள் டைரக்டர் இங்குதான் தங்கியிருக்கிறார்” என்று கூறினார். அவர் சன்னி தியோலை இயக்கவிருக்கும் இந்திப் பட வேலைக்காக வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். அவரது வேலையில் குறுக்கிடாத வண்ணம் இரவு ஒரு மணிக்கு அவர் அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன். அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவர் முகத்தில் கவலை தெரிந்தது.
கைவிடப்பட்ட ‘டாப் டக்கர்’
நலம் விசாரித்தபடி பேச்சுக்கொடுத்தேன். கமலை வைத்து ‘டாப் டாக்கர்’ என்ற படத்தை சுமார் 5 ஆயிரம் அடி எடுத்த பின் நிறுத்திவிட்டதாகக் கூறினார். ஏன் என்றபோது, “அந்தக் கதை சிவப்பு ரோஜாக்கள் போலவே உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. எனவே அதை நிறுத்திவிட்டு , வேறு கதை எடுப்போம் என்று நானும் கமலும் முடிவெடுத்துவிட்டோம்” என்றார். பிறகு அவரே தொடர்ந்தார். “கிழக்கே போகும் ரயிலை இந்தியில் சன்னி தியோலை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தேன். ஒப்பந்தம் செய்தபோது சன்னி பெரிய ஹீரோ அல்ல, இப்போது கமர்ஷியல் ஹீரோவாக மாறிவிட்டார். கழுதைமேல் அவரை உட்காரவைத்து ஊர்வலம் விடுவது போன்ற காட்சிகள் இருப்பதால் சன்னி தியோலின் அப்பா தர்மேந்திரா இந்தக் கதையை வேண்டாம் என்று கூறிவிட்டார். இரண்டு படங்களிலுமே முட்டுக்கட்டை” என்றார்.
லட்சுமி வந்துவிட்டாள்
கண் முன்னால் குருநாதர் கவலையுடன் பேசுவதை எந்த மாணவன்தான் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பான். நான் சென்னை திரும்பியதும் ‘டாப் டக்கர்’ கதையில் ஏதாவது பண்ண முடியுமா என்று பார்க்கிறேன் என்று அவரிடம் கூறினேன். “நீ இப்போது உதவி இயக்குநர் கிடையாது. பெரிய ஹீரோ, பிரபலமான இயக்குநர்” என்றார். “ நான் என்றும் உங்கள் மாணவன்” என்றேன்.
சென்னை திரும்பியதும் அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் “ லட்சுமி வந்துவிட்டாள்” என்று கூறி வரவேற்று அழைத்துப்போய் கதை சொன்னார். ‘டாப் டக்கர்’ இன்னொரு ‘சிகப்பு ரோஜாக்கள்’ போலத்தான் இருந்தது. எழுத்தாளர் பாக்யராஜுக்கு சென்னை அடையாறு பார்க் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறை போடப்பட்டது. இதுநாள் வரை நடிகர் பாக்கியராஜுக்கு ஏற்ற கதையை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த நான், அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து சிந்தித்தேன்.
அன்றிரவு 2 மணிக்கு ஒரு பொறி தட்டியது. மறுநாள் காலை, பாரதிராஜா சாருக்கு போன் செய்து உடனே வருமாறு கூறினேன். “அதற்குள்ளேயா?” என்று ஆச்சரியப் பட்டார். கதையின் அவுட்லைனைக் கூறினேன். அந்த நிமிடமே கமலிடம் தொடர்புகொண்டார். அவுட்லைன் சொல்ல வேண்டும் என்றார். அதற்குக் கமல், “நேற்று நீங்கள் பாக்கியராஜை சந்தித்தும் கதையை விவாதித்ததும் என் காதுக்கு வந்துவிட்டது. இப்போது கதையைச் சொல்ல வேண்டியதில்லை. படப்பிடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் சொன்னால் போதும்” என்று கூறிவிட்டார்.
ஒரு கைதியின் டைரி
முழுத் திரைக்கதை உருவானதும் அதை குருநாதரிடம் கொடுத்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். அதுதான் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம். படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவந்தது. இதற்கிடையில் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவுக்கு ஒரு இந்திப் படம் எடுத்துக்கொடுப்பதாக நான் வாக்களித்திருந்தேன். இப்போது ‘ஒரு கைதியின் டைரி’ இந்திப் பதிப்பை நான் இயக்க விரும்புகிறேன்.அதில் அமிதாப் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். அவர் அமிதாப்பிடம் பேசி, கதை கேட்க ஏற்பாடு செய்தார். அமிதாப் சென்னை வந்தார். மொத்தக் கதையையும் நடித்தே காண்பித்துவிட்டேன். உடனே ஒப்புக்கொண்டார். நான் தயாரிப்பாளர், ஹீரோ இருவரிடமும் ஒரு நிபந்தனையை வைத்தேன். “என் கதையைத்தான் எடுப்பேன். எனது குருநாதர் பாரதிராஜா மாற்றங்களுடன் எடுத்துவரும் படத்தை நான் மறுஆக்கம் செய்ய மாட்டேன்” என்றேன். இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
க்ளைமாக்ஸ்
இரண்டு கதைகளுக்கும் முக்கியமான சில வேறுபாடுகள் இருக்கின்றன. கல்லறையில் தந்தையும் மகனும் சந்திக்கும் காட்சி என் கதையின் முக்கிய கட்டம். அது இந்தியில் இருந்தது, தமிழில் இல்லை. அதேபோல் க்ளைமாக்ஸ். தமிழில் கதாநாயகன் சிவாஜி சிலைபோல் அசையாமல் நின்று வில்லன் நெருங்கியதும் பழி வாங்குவார். அது என் குருநாதர் செய்த மாற்றம்.
நான் எனது க்ளைமாக்ஸை இந்தியில் வைத்தேன். ஆனால் தமிழ்ப் பதிப்பின் க்ளைமாக்ஸையே இந்தியிலும் எடுக்க வேண்டும் என்று அமிதாப், தயாரிப்பாளர், கேமராமேன், சண்டைப் பயிற்சி இயக்குநரான வீரூ தேவ்கன் (அஜய் தேவ்கனின் அப்பா) என அனைவரும் ஆசைப்பட்டனர். எனது க்ளைமாக்ஸை எடுத்துப் போட்டுப்பார்ப்போம், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தமிழ்ப் பட க்ளைமாக்ஸை எடுத்துத் தருகிறேன் என்று கூறினேன்.
அனைவரும் ஒப்புக்கொண்டு முழுமனதுடன் ஒத்துழைப்பு தந்தார்கள். படம் தயாரானதும் போட்டுப் பார்த்தோம். அனைவருக்கும் எனது க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது. அந்தப் படம்தான் அமிதாப்புக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘ஆக்ரி ராஸ்தா’.
ஒரு சின்ன ப்ளாஷ் பேக்
அமிதாப் தன் மனைவியின் கல்லறையில் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் என் ரசிகர்களுக்குப் புரியாது என்று மறுத்தார். நீங்கள் ஆங்கிலத்தில் புலமை அடைந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் மனைவியிடம் சொல்வதுபோல காட்சியை அமைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் இந்தக் காட்சிக்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்றேன். கொஞ்சம் தயங்கியவாறு அரைமனதுடன் ஒப்புக்கொண்டவர் அந்தக் காட்சிக்கான வசனத்தையும் அவரே எழுதி அற்புதமாக நடித்துக்கொடுத்தார்.
படம் வெளியான அன்று இரவு ஒரு மணிக்கு அமிதாப் போனில் பேசினார். “நீங்கள் சரி, நான் தவறு. ஆங்கிலத்தில் நான் பேசிய காட்சிக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு” என்றார். “என் மனைவி, இது உங்கள் படமல்ல. இயக்குநர் பாக்கியராஜின் படம் என்று கூறினாள்” என்றார்.
பிறகு இந்திப் படத்தைப் பார்த்த எனது குருநாதர் பாரதிராஜா “என்ன மாயம் செய்தாய்? நீ எடுத்த இரண்டு காட்சிகளையும் க்ளைமாக்ஸையும்தானே நான் எடுக்கவில்லை. என் படம் ஆக்ஷன் படமாக அமைந்தது. உன் படமோ எமோஷனல் மூவியாக இருக்கிறதே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். “ சார் உங்களது நாயகன் இளைஞர், உங்கள் கதையை அந்த இளைஞர் மீது எடுத்துச் சென்றீர்கள். என் நாயகனோ நடுத்தர வயதுக்காரர். எனவே நான் சிறைக் கைதி மீது கதையை எடுத்துச் சென்றேன். இதுதான் வித்தியாசம் என்றேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்திப் படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தார்.
இந்தப் பாராட்டுக்களைப் போலவே மிக முக்கியமாக நான் கருதியது பாலிவுட்டின் அந்நாளைய பிரபல திரைக்கதை எழுத்தாளர்கள் ‘ஷோலே’ படப்புகழ் சலீம் - ஜாவேத் இரட்டையர்களின் பாராட்டு. “ஒரு காட்சியிலாவது அவரை ஆங்கிலத்தில் பேச வைக்க முயன்றோம். முடியவில்லை. நாங்கள் செய்ய முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இதன் மூலம் கதாசிரியர் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர் என்பதை அமிதாப்புக்கு உணர்த்திவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.
படத்தின் மாபெரும் வெற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியான ஜூன் 6-ம் தேதியை நினைவில் வைத்து, படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் அபிதாப். இதுதான் ‘ஒரு கைதியின் டைரி’, ‘ஆக்ரி ராஸ்தா’(கடைசி வழி) படங்களின் பின்னணிக் கதை” என்று நினைவுகூர்ந்தார் பாக்யராஜ்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago